செவ்வாய், 16 மே, 2017

பெண் மரணம் ..தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து!

தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து: பெண் பலி!தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தற்காலிக ஓட்டுநர்களை அமர்த்தி பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மணல் லாரி ஓட்டுநர்களையும், தனியார் பள்ளி ஓட்டுநர்களையும், ஓய்வு பெற்ற ஓட்டுநர்களையும் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று மே-15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதே போன்று, மே-16 ஆம் தேதி காலை அரியலூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணிகள் இல்லை என்பதால், யாருக்கும் காயமோ உயிர் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று மே-16 ஆம் தேதி திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து சென்ற பெண் உயிரிழந்துள்ளார். தாராபுரம் பணிமனையில் இருந்து மாநகரத்துக்குள் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திருப்பூர் நட்ராஜ் திரையரங்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. மூன்று பேர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வைஜெயந்தி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். வாகனத்தை ஓட்டிய பாண்டியன் நகரைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் படுகாயமடைந்தார்.
பேருந்தை தனியார் பள்ளி ஓட்டுநர் கதிரேசன் என்பவர் இயக்கியுள்ளார். விடுமுறை நாட்கள் என்பதால் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் கூறியதாவது, 'இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தாலும், அவர்கள் சரியாகத்தான் வந்தார்கள் ஓட்டுநர்தான் பேருந்தை சரியாக ஓட்டவில்லை' என்று கூறியுள்ளனர்.
அரசு பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அவற்றை முன் அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் இயக்குவது சிரமம் என்று சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்த மறுநாளே இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: