புதன், 17 மே, 2017

JNU ஜே என்.யு வில் காணமல் போன மாணவர் நஜீப் அகமது வழக்கு சி பி ஐ க்கும் மாற்றம்!

மாணவர் காணாமல்போன வழக்கு: சி.பி.ஐ-க்கு மாற்றம்!ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காணாமல்போன மாணவர் நஜீப் அகமதுவின் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறை மாணவரான நஜீப் அகமது, கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காணாமல் போனார்.
நஜீப் அகமது காணாமல் போனதற்கு முன்தினம் அவரை இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்பட்டது. அதையடுத்தே, மாணவர் நஜீப் அகமது மாயமானதாக, அகில இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, மாணவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீஸார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவரைக் கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கும்படி டெல்லி போலீஸாருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். அமைச்சரின் உத்தரவின்பேரில், நஜீப் அகமதுவைக் கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை டெல்லி போலீஸார் அமைத்து அவரைத் தேடி வந்தனர். மேலும் காணாமல்போன மாணவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, ரூ.50,000 சன்மானம் வழங்கப்படுமென டெல்லி போலீஸார் அறிவித்திருந்தனர்.
காணாமல்போன மாணவரைக் கண்டுபிடிக்க கோரி பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறுகட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மாணவரின் தாயார் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மே 16ஆம் தேதி நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் ரேகா பாலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு விசாரணைக்குழு போலீஸாரின் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என நஜீப் குடும்பத்தின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார். இதைடுத்து, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், டி.ஐ.ஜி. அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரியின் தலைமையில்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணை வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  minnambalam

கருத்துகள் இல்லை: