வியாழன், 18 மே, 2017

மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னை மெட்ரோ ரயிலை பார்க்க ...


சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட நேரு பூங்கா - திருமங்கலம் சுரங்க வழித்தடம் ரெயில் சேவையில் பயணம் செய்ய பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. சென்னை: சென்னை பெருநகரின் மற்றொரு அடையாளமாக மெட்ரோ ரெயில் சேவை நடக்கிறது. 2 வழித்தடங்களில் இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. உயர்மட்ட பாதையில் 2015-ம் ஆண்டு முதல் சேவை தொடங்கப்பட்டாலும் சுரங்கப்பாதையில் எப்போது சேவை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சுரங்க பாதையில் கடந்த 14-ந்தேதி சேவையை தொடங்கியது. சேவை தொடங்கிய 2 நாளில் 80 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். சுரங்கப்பாதையில் பயணம் செய்ய பொது மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்களும் பயணம் செய்கிறார்கள்.


மெட்ரோ ரெயில் பயணம், அதிலும் பூமிக்கு அடியில் 60 அடி ஆழத்தில் சுரங்கப்பயணம் எப்படி இருக்கும் என்பதை உணர தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

சென்னைவாசிகள் மட்டுமல்லாமல் புறநகர் பகுதி மக்களும் குடும்பம் குடும்பமாக மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வருவதை காண முடிகிறது.

சென்னையில் மெரீனா கடற்கரை, அரசு அருங்காட்சியகம், பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களை பார்க்க வருவது போல பொதுமக்கள் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்தை பார்க்க தினமும் வருகிறார்கள்.

காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரத்திலும் குவிகிறார்கள். திருமங்கலம், நேருபூங்கா இடையே சுரங்க பாதையில் ஓசையில்லாமல் மெட்ரோ ரெயில் சீறிச்செல்லும் அழகை சிறுவர்கள் கண்டு மகிழ்கிறார்கள்.

முற்றிலும் குளுகுளு வசதி செய்யப்பட்ட ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் எவ்வித களைப்பும் இல்லாமல் குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடிகிறது.

சுரங்கப்பாதையில் ஒவ்வொரு நிலையத்திலும் ரெயில் வந்து நின்றவுடன் பிளாட்பார கதவும், ரெயிலின் கதவும் ஒருசேர திறப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

பயணிகள் ஏறியவுடன் கதவுகள் மூடிக்கொண்டதும் ரெயில் மீண்டும் புறப்பட்டு செல்லும் தொழில்நுட்பம் வெளிநாட்டினரை மிஞ்சி விட்டது.



ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் பெறுவதற்குதான் தாமதமாகிறது. ஸ்மார்ட் கார்டு முறையில் பயணிக்க வேண்டியிருப்பதால் அது பற்றிய விவரங்களை பயணிகளுக்கு டிக்கெட் கவுண்டரில் உள்ள ஊழியர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதற்கு ஒரு பயணிக்கு 5 நிமிடம் வரை ஆகிறது. அதனால் 2 வரிசையில் பயணிகள் 45 நிமிடம் வரை நிற்க வேண்டிய நிலை உள்ளது. ரூ.100 கொடுத்து ஸ்டார்ட் கார்டை பெற்ற பயணிகள் உள்ளே எவ்வாறு செல்ல வேண்டும், நிலையத்தை விட்டு எவ்வாறு வெளியேற வேண்டும் என்பது போன்ற குழப்பங்களுக்கு அங்குள்ள ஊழியர்கள் விடை காண்கிறார்கள்.

முதல் முறையாக பயணம் செய்வதால் தடுமாற்றமும், குழப்பமும் இருந்தாலும் கூட சுரங்க ரெயிலில் பயணம் செய்தோம் என்ற மனநிறைவு ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பிற நாடுகளை போல சென்னை மெட்ரோ ரெயிலை தூய்மையாக பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்கிறது மெட்ரோ நிர்வாகம்.

ஆரம்பத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும் கூட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமையாக செயல்படும்போது மக்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு எதிர் காலத்தில் மெட்ரோ ரெயில் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் எளிய முறையில் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வழிகாண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும் பிற மாநிலங்களில் உள்ளது போல சென்னையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் கார்டு திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது மெட்ரோ ரெயிலுடன் புறநகர் ரெயில், பறக்கும் ரெயில், மாநகர பஸ் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். ஒரே கார்டில் அனைத்து போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: