வியாழன், 18 மே, 2017

ஏன் இல்லை ஒரு பெண் நபி?

Marx Anthonisamy:  இறைத்தூதர் (Prophet) மரபில் ஒரு பெண் நபி கூடஏன் இல்லை? - என்கிற கேள்வி பிரசித்தம்.
இறைத் தூதர் என்றில்லாவிட்டாலும் அடியார்கள் என்கிற வகையில் காரைக்கால் அம்மையார், மங்கையற்கரசியார் , இசைஞானியார் என மூன்று பெண் அடியார்கள் சைவத்தில் உண்டு.
இறைத்தூதர் என்கிற மரபில் வைத்துப் பார்க்கத் தக்கவர்களாக சமணத்தில் தீர்த்தங்கரர்களையும் பவுத்தத்தில் போதிசத்துவர்களையும் ('எண்ணில் புத்தர்கள்') கொள்ள முடியும்.
அந்த வகையில் சமணம் தனித்து நிற்கிறது. அதில் ரிஷபதேவர் தொடங்கி மகாவீரர் ஈறாக 24 தீர்த்தங்கரர்களை அவர்கள் வணக்கத்துக்கு
உரியவர்களாகப் போற்றுவர். இந்த வரிசையில் 19 வது தீர்த்தங்கரராக அவர்கள் போற்றும் மல்லிநாதரை ஸ்வேதாம்பரர்கள், குறிப்பாக யாப்பானியர்கள் ஒரு பெண் தீர்த்தங்கரர் ஆக ஏற்று வணங்குகின்றனர். திகம்பரர்கள் அப்படி ஏற்பதில்லை.
ஸ்வேதாம்பரர்கள் மல்லிபாயை ஜீன நிலை அடைந்தவராக ஏற்பத்ற்கு அவரிடம் இருந்த ஆண் தன்மையே (பும்வாத) காரணம் என்பர். மேற்கு கர்நாடகப் பகுதியில் செழித்திருந்த சமணப் பிரிவினரான யாப்பானியர்கள் அப்படிக் கருதுவதில்லை.
ஜீன நிலை அடைய பாலியல் ஒரு பொருட்டல்ல என்பது அவர்களின் கருத்து. எப்படி காமம், கர்வம், உணர்வுகள் எல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக உள்ளனவோ அதேபோல எல்லாவற்றையும் கடந்த உயர்நிலையை அடைய பாலியல் அடையாளம் ஒரு தடையல்ல என்பது அவர்களின் கருத்து.நிர்வாணம் அடைய சம்யக் ஞானம்,சம்யக் தர்சனம், சம்யக் சரித்ரா (சரியான அறிவு, சரியான பார்வை, சரியான நடத்தை) ஆகியன இருந்தாலே போதும். மல்லிநாதர் 54,000 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பிக்கை.
தமிழ்க் காப்பியங்கள், இலக்கணநூல்கள், அற நூல்கள், நிகண்டுகள் பலவும் சமண பவுத்தப் பாரம்பரியத்தில் வந்தவை என்பதை அறிவோம். இக்காப்பியங்களில் குறிப்பாக மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி ஆகியவற்றில் பெண்பாலர் முக்கிய நாயகப் பாத்திரங்கள் வகிப்பது தவிர அவர்கள் ஆண்களோடு தத்துவ தர்க்கங்களில் ஈடுபட்டு வெல்பவர்களாகவும் உள்ளனர். சமண மரபு எனக் கருதப்படும் சிலம்பிலும் கூட கண்ணகி ஒரு சாதாரன குடும்பப் பெண்ணாகவே காவியம் முழுவதிலும் வந்தபோதிலும் இறுதியில் அவர் அறம் நாட்டச் சமர் புரியும் காப்பிய நாயகியாகிறார்.
பவுத்த சமணக் காப்பியங்கள், குறிப்பாக சிலம்பும் மணியும் எவ்வாறு தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் நின்று திணைக் கோட்பாடுகளுக்கு இணைந்து நின்று அதே நேரத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு முடிவை நோக்கி நகர்கின்றன என்பதை வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலரும் சமீப காலங்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்
இவற்றை நாம் தமிழ்க் காப்பியங்கள் என்பதோடு சிரமண மரபில் வந்தவை என்கிற உணர்வோடும் புரிதலோடும் வாசிக்கும்போதே இவற்ரின் நுணுக்கங்களும் முழு அழகும் நம்மை நிரப்பும். நாம் அந்தப் பேறு பெறுவதற்கு நமக்கு இந்தச் சிரமண மரபு குறித்த குறைந்தபட்சப் புரிதல் தேவை.
தமிழ் மற்றும் சிரமண மரபு குறித்த ஆழமான புரிதல் உடைய ஒரு வாசகத் தளத்தை நோக்கியே இந்தக் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளன என்கிற அம்சத்திற்கு நவீன ஆய்வாளர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
(இன்னும் விரிவாக ஜூன் 'தீராநதி' இதழில்)

கருத்துகள் இல்லை: