திங்கள், 15 மே, 2017

தமிழக அரசை மிரட்டுவதற்கு வெங்கய்ய நாயுடுவுக்கு எந்த உரிமையும் இல்லை: திருநாவுக்கரசர்

தமிழக அரசை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மிரட்டுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டு தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபகாலமாக தமிழக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு பல்வேறு பணிகள் தேங்கிக் கிடப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்கள் 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசோடு 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் பேருந்துகள் சேவை திடீரென நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் அதிகளவில் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்துகள் சேவை மக்கள் நலன்சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பரிவுடன் ஆய்வு செய்து நிறைவேற்ற தயாராக இல்லை. மக்களின் சேவையை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்குகிறதா ? நஷ்டத்தில் இயங்குகிறதா ? என்பதை அடிப்படையாக வைத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்வுகாண அணுகக் கூடாது.
அந்த வகையில் தமிழக அரசு சிறப்பு நிதி திரட்டி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு போக்குவரத்து கழகங்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். அப்படி செய்ய முன்வராமல் இருப்பதே இன்றைய பேருந்துகளின் வேலை நிறுத்தத்திற்கு முக்கிய காரணமாகும். இதுகுறித்து தெளிவான பார்வையோ, அணுகுமுறையோ இல்லாத காரணத்தால் அதிமுக அரசு செயலற்று முடங்கிக் கிடக்கிறது. இதனால் தமிழக மக்களே பேருந்துகளை பயன்படுத்த முடியாமல் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத அதிமுக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு போக்குவரத்து கழங்களுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.
அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நிகழ்த்திய உரை கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாக இருக்கிறது. அவர் பேசும் போது 'தமிழக அரசு செயல்பட்டால் மத்திய பாஜக அரசு ஒத்துழைக்கும், எங்களது ஒத்துழைப்பு உங்களது செயல்பாட்டை பொறுத்தே இருக்கிறது. இல்லையெனில் எங்களது ஒத்துழைப்பை விலக்கிக் கொள்ள நேரிடும்' என்று பேசியிருப்பதைவிட ஜனநாயக விரோத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
ஒரு மாநில அரசை மத்திய அரசு இப்படித்தான் நடத்தும் என்று சொன்னால் மாநில அரசுகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பதற்கு பாஜக அரசு முயற்சி செய்கிறது என கடுமையாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.
கடந்த சில மாத காலமாகவே மத்திய பாஜக அரசு தந்திரமான முறையில் வியூகங்கள் அமைத்து அதிமுக அரசையும், கட்சியையும் கபளீகரம் செய்வதற்கு கொல்லைப்புற வழியாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இதற்காக சாம, பேத, தான, தண்டங்களை தமிழக அரசுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செலுத்தி வருகிறது. இதன்மூலம் தமிழக ஆட்சியை முடக்கி செயலிழக்கச் செய்வதன் மூலம் அதிமுக கட்சியை கைப் பாவையாக வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நினைப்பதைத் தான் வெங்கய்ய நாயுடு வெளிப்படுத்தியிருக்கிறார்.
எப்படியோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஒரு மாநில அரசை மத்திய அமைச்சர் மிரட்டுவதற்கு எந்த உரிமையும் இல்லை. மாநில அரசு செயல்படவில்லை என்றால் ஒத்துழைப்பை விலக்கிக் கொள்வோம் என்கிற வெங்கய்ய நாயுடு, அதே கருத்தை மத்திய பாஜக அரசுக்கு எதிராக கூறுவதை ஏற்றுக் கொள்வாரா ? நியாயம் என்று அனுமதிப்பாரா ?
எனவே, மாநில அரசுகளை மிரட்டுகிற தொனியில் பேசுவதை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு போன்றவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு செயல்படாமல் முடங்கிக் கிடக்கிற அதேநேரத்தில் அதுகுறித்து மிரட்டல் தொனியில் பேசுவதற்கு மத்திய அரசுக்கு உரிமையில்லை. அப்படி பேசுவது மத்திய - மாநில அரசுகளிடையே நிலவி வருகிற உறவுகளை சீர்குலைக்கிற முயற்சியாகவே இருக்க முடியும் என எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  tamilthehindu

கருத்துகள் இல்லை: