சனி, 20 மே, 2017

எழுச்சியடையும் பெண் இயக்குநர்கள்! அபர்ணா சென், தீபா மேக்தா, பிரியா

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள இந்நிலையில், தற்போது உள்ள கல்வி சந்தையில் அதிகம் ஏலம் போகும் பாடமாகக் கடந்த சில ஆண்டுகளாக விஸ்காம் இருந்து வருகிறது. பொறியியல், மருத்துவம், மென்பொருள் என அனைத்துப் பாடங்களையும் பின்னுக்குத்தள்ளித் தற்போது அந்த இடத்தில் விஸ்காம் இடம் பெற்றுள்ளது.
எப்போதுமே மக்களுக்குத் திரைப்படங்கள் மீது அதீதக் காதல் இருந்து வருகிறது. தற்போது கூடுதலாகக் குறும்படங்களின் தாக்கத்தால் இன்றைய மாணவர்களின் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இது பால் வேறுபாடுகளின்றி இருபாலரையும் ஈர்த்துள்ளது. தற்போது ஆண்களை விடப் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். இன்றுள்ள ஒவ்வொரு திரைப்பட இயக்குநர்களிடமும் பெண் இயக்குநர்கள் உதவி இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.


இந்நிலையில் நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்தியத் திரைத்துறையில் சில நூறு பெண் இயக்குநர்கள்கூடக் கிடையாது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், திரைத்துறையில் நேரடியாக இயக்குநராகும் முயற்சிகள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துக் காணப்படுவதாகவும் அத்துறையில் பணியாற்றுவோர் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகியும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குநர்கள் வந்து போயிருக்கின்றனர். இதிலும் பெரிதாகப் பேசப்பட்டவர் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. தற்போது அந்தக் குறையைப் போக்கப் பல பெண்கள் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

1936இல் டி.பி ராஜலட்சுமி 'மிஸ் கமலா' என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார். அதற்குப் பின்பு வந்த 'மதுரை வீரன்' (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்துத் தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973இல் விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய 'ராம் ராபர்ட் ரஹீம்' என்கிற படம் 1980இல் தமிழில் வெளிவந்தது.
இடையில் பானுமதியும் சாவித்ரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக் கொண்டதோடு சரி. அதற்கிடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை. 1980ஆம் ஆண்டு வெளிவந்த 'மழலைப் பட்டாளம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகை லட்சுமி. ஒரு கலகலப்பான குடும்பக் கதையாக அமைந்த இந்தப் படம், இன்றளவும் ரசித்துப் பார்க்கும் படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
80களில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா 'சாந்தி முகூர்த்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் 1984ஆம் ஆண்டு இயக்குநராக உருவெடுத்தார். அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘நானே வருவேன்’, ‘மாலினி 22’, ‘பாளையங்கோட்டை’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
இயக்குநர் ஜெயதேவி ‘விலாங்கு மீன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின் பல திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இயக்குநர் வேலு பிரபாகாரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக முன்னணியில் இருந்த சுஹாசினி மணிரத்னம் பின்பு பல வருடங்கள் கழித்துச் ‘இந்திரா’ மூலமாக இயக்குநராக பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை.
அவருக்குப் பின்பு வந்தவர்களாக ப்ரியா கண்டநாள் முதல் கண்ணாமூச்சி போன்ற சிறந்த படங்களை இயக்கினர் ,  இயக்குனர்கள்  மதுமிதா, நந்தினி மற்றும் சமீபமாய் லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா, ரஜினியின் இரு மகள்கள். எழுபத்தொன்பது வருடத் தமிழ் சினிமாவில் பத்துக்கும் குறைவான பெண்களே இயக்குநர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம். பார்வையைச் சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ணா சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்னாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குநர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை என்பதே உண்மை.

பெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்துக்கு மேல் நகர மனங்கள் அனுமதிப்பதில்லையா? அல்லது இந்தத் துறையைப் பொறுத்தவரை பெண்களும் தங்களின் மூளையைவிட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? என்கிற கேள்விகள் எழுகின்றன.
சமகாலப் பெண் இயக்குநர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் காதல் உணர்வு கனவில் மிதத்தல், சாந்தமான நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான ‘கண்ணாமூச்சி ஏனடா’ பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் ‘வல்லமை தாராயோ’ படமும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடர்ந்த நகர்வுகள் சாத்தியமா? என்பதை அவர்களிடமே விட்டுவிடுவோம்.
இவர்களைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் அம்மா கதாபாத்திரத்திலும், முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து இவர் இயக்கிய 'நெருங்கி வா முத்தமிடாதே' படம் பெரிய வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்தது. இதனை அடுத்து இயக்கிய ‘அம்மணி’ திரைப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது புதிய படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று பெண் இயக்குநர்கள் மத்தியில் மூன்று படத்துக்கும் மேல் இயக்கி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் போல் 80களில் நாயகியாக வலம்வந்த அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ரோகிணி, ‘அப்பாவின் மீசை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது இந்தத் திரைப்படம் வெளியிடுவதற்குப் போதிய நிதி இல்லாத காரணத்தால், மக்களிடம் உதவி கேட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தை மக்கள் நிதி (கிரவுட் பண்டிங்) மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ரஜினியின் இரு மகள்களும் இயக்குநராக அடுத்தடுத்தப் படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் '3', 'வை ராஜ வை' என இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். உடல் ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன். தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்கி வருகிறார்.
இவரது தங்கையான சௌந்தர்யா தனது தந்தையை வைத்து இயக்கிய 'கோச்சடையான்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் இந்தியாவிலயே மோஷன் கேப்சரிங் முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு படம் இயக்கியவர் என்ற பெருமை சௌந்தர்யாவுக்குக் கிடைத்தது. தற்போது 'வேலையில்ல பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
அனிதா உதிப்பை நினைவிருக்கிறதா? 'விசில்' படத்தில் இடம்பெற்ற, அழகிய அசுரா பாடலை மதுரக்குரலில் பாடியவர். பல படங்களைத் தயாரித்த பென்டாஃபோர் நிறுவனத்தின் வாரிசு. இவரது முழு நீளத் திரைச்சித்திரம் குளிர் 100 டிகிரி.

லீனா மணிமேகலை தமிழ்க் கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர். பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டம் உட்பட்டன இவரது கவிதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன. மேலும் ஆவணப்பட இயக்குநராகவும், திரைப்பட இயக்குநராகவும் உள்ளார். இவர் இயக்கிய 'செங்கடல்' திரைப்படம் பல விருதுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' என்ற படத்தை இயக்கியுள்ளார். சுமாரான வெற்றியையும், ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்ற படமாக அமைந்தது. இருந்தாலும் தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

பள்ளி பருவத்தில் ஆல்பம் ஒன்றுக்கு பாடலாசிரியராக... ப்ளஸ் டூ முடித்த கையோடு திரைப்பட இயக்குநர் ‘பூவரசம் பீப்பி’ திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் ஹலித்தா. இப்போ தமிழில் 'மின்மினி', மலையாளத்தில் 'பயர் பிளே' படங்களை பிசியாக இயக்கிக் கொண்டிருக்கிறார். “என்னோட படங்களுக்கு நானே எடிட்டர், நானே கலர் கிரேடிங். என் படைப்புகளுக்கு நான் தான் உயிர் தர முடியும் என நம்புகிறேன். அதனால் தான் முழு பணிகளையும் நானே கவனிக்கிறேன். எனக்கென குரு கிடையாது. திரைத்துறையில் யாரையும் பின்பற்றக் கூடாது. நமக்கென ஒரு ஸ்டைல் இருக்கணும்” என்கிறார் தன்னம்பிக்கை ஹலித்தா.
இந்நிலையில் இந்தியத் திரையுலகில், குறிஞ்சிப் பூ போல் எப்பொழுதாவது தோன்றும் பெண் இயக்குநர்களில் சுதாவும் ஒருவர். 17 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றும் சுதா, குத்துச்சண்டையை மையமாக கொண்ட 'இறுதிச்சுற்று' என்கிற படத்தை இயக்கி முத்திரை பதித்தவர்.

பல ஆண்டுகள் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா, ‘இறுதிச்சுற்று’ தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று திரைத்துறைகளிலும் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
இயக்குநர் சுதாவின் ஆரம்பக்கால கட்டத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு, அவர் திரைக்கதை அமைத்து அதை நடிகை ரேவதி இயக்கம் செய்து வெளியாகிய ‘மித்ர், மை ஃபிரண்ட்’ என்கிற ஆங்கில மொழி திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது திரைப்படத் துறையில் வாய்ப்பு தேடும் தன் போன்ற பெண்களுக்கு, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடவரும் பெரு நிறுவனங்கள்தான் அதிக அளவிலான வாய்ப்புகளை வழங்குவதாகவும் இயக்குநர் சுதா தெரிவிக்கின்றார். பெண் இயக்குநர்களின் வருகை எண்ணிக்கை வருங்காலத்தில் பெருகும் என்பதே இயக்குநர் சுதா போன்றவர்களின் நம்பிக்கை.

இயக்குநர் அமீர் போன்றவர்களால் தான் பெண்ணாக இருக்கும் பட்சத்திலும், தன்னால் இயக்குநராக முடிந்தது என்கிறார் ‘கள்ளன்’ என்கிற தனது முதல் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குநர் சந்திரா. பெண் என்பதற்கான சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்காததுதான் தனது வெற்றியின் ரகசியம். மற்ற துறைகளைக் காட்டிலும் திரைத்துறையில் வெற்றி வாய்ப்புகளை பெற கூடுதலாகக் சில ஆண்டுகள் பொறுமையாக காத்திருக்க வேண்டியது மிக அவசியம் என்றும் கூறும் இயக்குநர் சந்திரா.
- அன்னம் அரசு  மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: