இந்தச் சமூகம் என்னைப் பார்த்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தலித் மக்களையும் பார்த்து வீசும் விஷ வரி இது. வன்முறையான, சமூக நீதிக்கு எதிரான வார்த்தைகள்! எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் விளிம்பில் தவித்த என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டியது இந்த வரிதான்.
ஒருவர் மதத்தைக்கூட மாற்றிக்கொள்ள இயலும். ஒருபோதும் பிறப்பை மாற்றிக்கொள்ள முடியாது. பிறப்பின் காரணமாக அமைந்த சாதியையும் மாற்றிக்கொள்ள முடியாது. இந்த இழிவுகளிலிருந்து ஓரளவேனும் விடுபடவும், எதிர்த்துக் கேள்வி எழுப்பவும், கல்வியை ஓர் ஆயுதமாகக் கைக்கொள்ள வேண்டும். அதைத்தான் நான் கைக்கொண்டேன். `படித்தால் சுய விழிப்பு பெறுவாய், உரிமை கேட்பாய், சேரியில் இருந்து எழுந்து வந்து சமத்துவம் பேசுவாய், பிறருக்கு இணையாகப் பணிபுரிவாய். அதனால் நீ படிக்கக்கூடாது. பறை அடிப்பவர்கள் அதை மட்டும்தான் செய்ய வேண்டும். அவர்களின் தலைமுறைக்கும் அதுதான் வாழ்க்கை...’ என்ற செய்தியைச் சுருக்கமாகச் சொன்னது `பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற வரி. அந்த வரி ஏற்படுத்திய வலிதான், என்னைப் படிக்கத் தூண்டியது. அந்தப் புறக்கணிப்புதான், மேலே வர வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது. அந்த வரி ஏற்படுத்திய அவமானங்கள்தான், ‘தனித்துவமான உதாரண மனுஷியாக வேண்டும்’ என்ற வேட்கையை உருவாக்கியது. இந்தச் சமூகம் என்னை நோக்கி எழுப்பிய கேள்வியை அணையாமல் பார்த்துக் கொண்டேன். அந்த வார்த்தைதான் எனக்கு எதிர்மறையான ஊக்கத்தைத் தந்தது.
தலித் என்பதால் பள்ளி நாட்களில் வகுப்பறையின் கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டபோதும் கல்வியை நான் விடவில்லை. பதினைந்து ஆண்டுகள், தோழிகளே இல்லாத பருவமாய் கடந்தபோதும் நான் கல்வியைக் கைவிடவில்லை. படித்து முடித்து ஆசிரியரான பிறகும் நான் படித்துக் கொண்டே இருக்கிறேன். ‘உனக்குப் படிப்பு எதற்கு?’ என்று என்னை ஏளனம் செய்தும், என்னைப் பின்வரிசையில் அமர வைத்தும், என்னுடன் பழகுவதற்கு யாருமேயில்லாமல் பார்த்துக் கொண்ட சமூகத்திடம் ஒரு எளிய கேள்வியை முன் வைக்கிறேன். என் வாழ்க்கையில் நான் இழந்த பதினைந்து ஆண்டுகளை எனக்குத் திரும்பத் தருவது யார்? நான் இந்தச் சமூகத்தை மன்னிக்கப் போவதில்லை. மன்னிக்கவும் கூடாது.
பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ எனக்கேட்ட சமூகத்திற்கு நான் தரும் பதில்.. `நான் படித்தேன். படித்துக்கொண்டே இருப்பேன். ஓர் ஆசிரியராக எல்லோரையும் படிக்க வைத்துக்கொண்டே இருப்பேன். ஆண் - பெண் பாகுபாடற்ற, சாதிகள் அறவே ஒழிந்த, மானுட விடுதலை அடைந்த சமூகம் உருவாகும் வரை!’
சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: டி.அசோக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக