ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சென்னையில் கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு... டில்லியை தொடர்ந்து ஆமதாபாத் நகரிலும் அமல்

சென்னையில் ஆளும்கட்சிகாரர்களின் பின்னால் 200 கார்கள் , பாதுகாப்பு வானகங்கள் தொடர்ந்து வருமே அவற்றை என்ன செய்வது எப்படி கட்டுப்பாடு விதிக்கமுடியும் புதுடில்லி:டில்லியில், கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் வெற்றி பெற்றதால், ஆமதாபாத் நகரும் அந்த திட்டத்தை பின்பற்ற உள்ளது. அதேபோல், காற்று மாசு அதிகம் உள்ள சென்னையிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.டில்லியில் ஞாயிறு தவிர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் வீதம், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப்படை பதிவெண்களில் முடிவடையும் கார்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அமலுக்கு வந்த இத்திட்டப்படி, முதல் நாள் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஒற்றைப் படை பதிவெண்களை உடைய கார்கள், டில்லி சாலைகளில் ஓட அனுமதிக்கப்பட்டன. நேற்று, இரட்டைப்படை பதிவெண் கார்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஞாயிறுக்கிழமை என்பதால், கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு இல்லை; அனைத்து கார்களும் செல்லலாம்.


இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில், டில்லி யில் கார் போக்குவரத்து பாதியாக குறைந்ததால், காற்று மாசும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விரைவில் இதர மாநிலங்களும் இத்திட்டத்தை பின்பற்றும் என, நம்புவதாக கூறினார்.

அதற்கேற்ப, பா.ஜ., முதல்வர் ஆனந்திபென் படேல் முதல்வராக குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரிலும், கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் அமலுக்கு வர உள்ளது. ''அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் இத்திட்டம் அமலுக்கு வரும்,'' என, ஆமதாபாத் மாநகராட்சி ஆணையர் தாரா தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில், கார்களுக்கு மட்டு மின்றி இருசக்கர வாகனங்களுக்கும், ஒருநாள் விட்டு ஒருநாள் தடை விதிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆமதாபாத்தைத் தொடர்ந்து சென்னை யிலும் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்கூறியதாவது:சென்னையில் வாகன நெரிசலும், காற்று மாசுவும் அதிகமாக உள்ளது. இருப்பினும், தமிழகத்தில் காற்று மாசுவில், துாத்துக்குடி தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு, நிலக்கரியை பயன்படுத்தி, 4,000 மெகவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதும், தொழிற்சாலைகளின் புகை மற்றும் கழிவு காரணமாக காற்றில் மாசு அதிகமாக உள்ளது. எனவே, சென்னையில் மட்டுமின்றி காற்று மாசு அதிகம் உள்ள துாத்துக்குடி, சேலம், கோவை, மதுரை நகரங்களிலும் இத்திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிளில் சென்ற துணை முதல்வர் :
டில்லியில், நேற்று காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 2, 4, 6, 8 என்ற பதிவெண்களில் முடியும் இரட்டைப்படை கார்களின் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கார், ஒற்றைப் படை பதிவெண் உடையது என்பதால், அவர் நேற்று காரை எடுக்கவில்லை. தன் வீட்டிலிருந்து டில்லி வானொலி நிலையத்திற்கு சைக்கிளில் சென்ற அவர், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், அதே சைக்கிளில் தலைமை செயலகம் சென்றார். அதே நேரத்தில், புதிய போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு நேற்றும், தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனை அடிப்படையிலான இத்திட்டம், வரும், 15ம் தேதி வரை அமலில் இருக்கும். கார் போக்குவரத்து கட்டுப்பாடு அமலுக்கு
Advertisement
வந்த இரண்டுநாட்களில், டில்லியில் காற்று மாசு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பஸ்களில் நிரம்பி வழிந்த கூட்டம் :

* டில்லியில், கார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், இரு நாட்களாக பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது
* டில்லி போக்குவரத்து கழகம், கூடுதலாக, 3,000 பஸ்களை இயக்கியது. 70 வழித்தடங்களில், கூடுதல் பஸ் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது
* இரண்டு நாட்களில், பஸ்களில், 60 - 80 லட்சம் பேர் பயணம் செய்திருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், டில்லி மெட்ரோ ரயிலில், பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது
* டில்லி அரசின் புதிய கார் போக்குவரத்து திட்டம், வரும், 15ம் தேதி வரை அமலில் இருக்கும். அதுவரை, 3,000 தனியார் பஸ்களை இயக்க, டில்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது
* டில்லியில், புத்தாண்டு அன்று, விதிகளை மீறி, இரட்டைப் படை பதிவெண் கார்களில் வந்த, 203 பேரிடம், தலா, 2,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 'மீட்டர்' போட்டு, பயணிகளை ஏற்றிச் செல்ல மறுத்த ஆட்டோ ஓட்டுனர்கள், 76 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது
* டில்லி சுகாதாரத் துறை அமைச்சகம், நடமாடும் நுரையீரல் பரிசோதனை வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு நுரையீரல் பரிசோதனை நடத்தி வருகிறது. நகரில், 10 இடங்களில், இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவர்கள், 'ஸ்பைரோ மீட்டர்' கருவி மூலம் ஒருவரின் சுவாசிக்கும் அளவை வைத்து அவரின் நுரையீரலின் திறனை சோதிக்கின்றனர்
* டில்லியில் கார் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக, காற்று மாசு அளவு, 15 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: