செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணி/திருக்கோவில் லூலாயி ! இந்து "அரை" நிலைய துரை

ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
காமாட்சி ஆட்சி செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையிலும் இருக்கிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவனான்டி மண்ணில் ஜீன்ஸ் பேண்டுகளின் அட்டகாசம் அதிகரித்தபடியால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் திருக்கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாகவே ஒரு வழக்கை பதிவு செய்தார்.
கிரானைடும், ஸ்டிக்கரும், பீஃப் கானமும் ஆட்டம் போடும் தமிழ்த்தாய் ஊரில் தாமாகவே வழக்கு போடுவதற்கு எத்தனையோ இருக்கையில் இற்றுப் போகும் அழுக்கு பேண்டு குறித்து ஒரு நீதியரசர் ஏன் இத்தனை அற ஆவேசம் கொண்டிருக்க வேண்டும்? ஏதோ இந்த மட்டிலாவது இந்த மண்ணில் அறம் சீவித்திருக்கிறதே என்று காரப் பணியாரம் சுவைத்துக் கொண்டு கவிதை ஏரியாவில் இலக்கியம் பூசும் சில வார்த்தை செதுக்கர்கள் சிலாகிக்கிறார்கள்.
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
அந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 26-ம் தேதி வைத்தியநாதன் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார். அதில், தமிழக இந்து கோவிலுக்குள் வரும் ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும், பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றெல்லாம் தாலிபான் முல்லாக்களுக்கு போட்டியாக உத்தரவிட்டார். ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
நீதியரசரே பொங்கி விட்டால் திருக்கோவில்களில் வெண் பொங்கலை மட்டும் படையல் செய்யும் இந்து அறநிலையத் துறையும் பொங்கினார்கள்.
அந்த பொங்கலை ஒரு சுற்றறிக்கையின் மூலம் அனுப்பியதோடு நீதியரசர் அய்யா அருளிய உடை உத்தரவுகளை கோவில்களில் அமல்படுத்துமாறு உத்தரவிட்டார்கள்.
அனைத்து சாதி மாணவரும் அர்ச்சகராக வேண்டுமென்ற ‘சாதா’ பிரச்சினைகளில் கும்பகர்ணணாய் உறையும் அறநிலையத் துறை, குட்டைப் பாவாடை போன்ற ஸ்பெசல் சாதா பிரச்சினைகளில் உசேன் போல்ட்டாய் ஓடுகிறது.
இதன்படி 2016 ஜனவரி புத்தாண்டு ஒன்றாம் தேதி முதல் திருக்கோவில்களில் காக்கிச் சட்டை போலீசார் கண்கொத்திப் பாம்பாக சீறிக் கொண்டு ஜீன்ஸ் – லெக்கின்ஸ் – குட்டைப் பாவாடை பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறார்கள். சிம்புவையும், யுவராஜையும் தனிப்படை போட்டும் மோப்பம் கூட பிடிக்க இயலாத இந்த அப்பாவிகள் கோவில் யானைக்கு போட்டியாக முகப்பு கோபுரத்தின் முன்பு முட்டி போட்டவாறு இடுப்புக்கு கீழே உற்று நோக்கி வருகிறார்கள். யானையைக் கண்டு குஷியாகும் குழந்தைகள் இந்த பூனைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆமாம் ஐயா! மழலைகளுக்கும் சேத்துத்தானே அந்த உடைக் கட்டுப்பாடு!
மழை வெள்ளத்தில் உடையும் உடமைகளும் அடித்துச் செல்லப்பட்டு தெருவும் திணறலுமாக குடி மக்கள் சோர்ந்திருந்தாலும், கோவில்களில் வஸ்திரங்களை முறைப்படுத்துவதிலும், மதுக்கூடங்களில் சப்ளைகளை ஒழுங்குபடுத்தவதிலும் கோமளவல்லியை விஞ்ச யாருண்டு?
கூடவே கோமளவல்லிக்கு மயிலறகு கொண்டு காற்றாட்டுவதில் தினமணியின் ஆசிரியர்வாள் வைத்தி அவர்களையும் யாரும் விஞ்ச முடியாது. ஒன்றாம் தேதி வஸ்திர சட்ட சாஸ்திரம் அமலுக்கு வந்தது என்றால் இரண்டாம் தேதி வைத்தி மாமாவின் அர்த்த சாஸ்திரம் தலையங்கத்தில் “அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு” என்று சீறிப் பாய்ந்தது.
மோடியின் லெக்கன்சும் கூட தடை செய்யப்படுமே வைத்தி சார்?
மோடியின் லெக்கன்சும் கூட தடை செய்யப்படுமே வைத்தி சார்?
மலையாள தேசத்தில் வெட்டி கட்டிய ஆம்படையான்களும், பாரம்பரிய உடை உடுத்திய பெண்மணிகளும் மட்டும்தான் குருவாயூர் முதல், பத்மநாபா வரையிலான மூர்த்திகளின் இல்லத்தில் அனுமதிக்கப்படுவதை சுட்டிக் காட்டும் வைத்தி சார்வாள், திருப்பதியிலும் அங்கனமே வஸ்திர சாஸ்திரம் முன் தேதியிட்டு அமலுக்கு இருப்பதை குத்திக் காட்டுகிறார். இவ்வண்ணம் மலையாள தேசத்தில் இருக்கும் மாந்தீரகங்களையும் அவர் நியாயப்படுத்துவாரா என்று யாரும் புத்தி கெட்டு கேட்கக் கூடாது. ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் மலையாள நம்பூதிரி மாந்திரீகவாதிகள் நிரம்பி வழிகிறார்கள்.
கேரளாவில் பைஜாமாவுக்கு கூட அனுமதியில்லை என்று புல்லரிக்கும் மாமா சார், அந்தபடிக்கு மோடிஜியின் – பைஜாமா அல்லது குர்தா அல்லது லெக்கன்ஸ் (லெக்கின்ஸின் ஆண்பால் பதம்) – போன்றவைகளுக்கும் அனுமதியிருக்காதே என்று லீகல் பாயிண்டை அம்மாவுக்கு பாடிய லோலாயியில் மறந்து விட்டார். சரிடே சார்வாளுக்கு நினைவூட்டியை பழுது பார்க்கும் கோட்டக்கல் ஆர்யவைத்தியசாலாவின் லேகியத்தை பரிந்துரை செய்!
இறைவழிபாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் உண்டு என அவாள் சார் இளைய தலைமுறையின் மனக்கிலேசத்திற்கு மருந்து போடுகிறார். சரிப்பா, மற்ற மதங்களில் பிறப்பால் ஒருவர் பாதிரியாரோ, முல்லாவா, குருவாகவோ மாறுவதற்கு தடையில்லையே, அது ஏன் இங்கில்லை என்று கேட்டால் ஆகமம், ஆப்பம், ஆம்லேட்டு என்று உச்சாடனம் செய்கிறார்.
இங்கேயும் அப்படி ஒரு புல்சேவை போட்டிருக்கிறார். அதாகப்பட்டது, மற்ற மதங்களில் ஆகமவிதிமுறைகள் இல்லையாம். காரணம் அவர்களது ஆலயங்கள் அனைத்தும் மக்கள் ஒன்று கூடி பிரார்த்திக்கும் வழிபாட்டுத் தலம் மட்டும்தானாம். இந்து மதத்தில் மட்டும் இவை பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றனவாம். இதற்கு மேல் கிரகம், ஈர்ப்பு சக்தி, பரிகாரம், என்று சுற்றுகிறார். அதாவது கோவிலில் சட்டை போடாமல் நுழைந்தால் ஒரு சக்தி நம்மேல் ஏறிவிடுமாம்.
உழைக்கும் மக்களின் லுங்கிக்கும் தடை!
உழைக்கும் மக்களின் லுங்கிக்கும் தடை!
முதலில் கோவில்கள் என்ற கட்டமைப்பே வேதங்களை வேதவாக்காக கொண்ட ஆரிய சனாதான இந்து வருண சாதி சமயத்தில் கிடையாது. திருக்கோவில்களை கட்டி தீர்த்தங்கரர்களை பிரதிஷ்டை செய்த சமணர்களே இந்தியாவின் இந்து மதக் கோவில்களுக்கு காப்புரிமை பெற்றவர்கள். கோவிலே திருட்டு என்றான பிறகு சக்தி, ஈர்ப்பு என்ற புராணம் எதற்கு வைத்தி ஐயா?
எழுச்சிக்கும், நீடித்த சக்திக்கும் சேலம் சிவராஜ் வைத்தியக் கவிராயரின் சிட்டுக்குருவி தங்க பஸ்ப லேகியங்கள் கொலுவிருக்கும் போது ஆலயங்களின் பவர் எதற்கு? சரி, மேலாடை அணியாமல் சென்றால் ஆலயத்தின் கிரக காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்க முடியும் என்று அனுபவத்தின் மூலம் பாடம் எடுக்கும் வைத்தி வாள்சார் ஒரு முக்கியமான லீகல் பாயிண்டை மறந்து விட்டார்.
அதாவது கீழாடையும் அணியாமல் சென்றால் இந்த கிரக காந்த சக்தி இன்னும் வலுவாக உடலினுள் முழுமையாக இறங்கும் அல்லவா? ஒரு சில குஞ்சாமணிகள் உள்ளாடை அணியாமல் ஒரு மாமாங்கம் கோவில் சென்றால் பேண்டுக்கு மேல் ஜட்டியைப் போட்டு சீறிப்பாயும் அமெரிக்க சூப்பர்மேன் சக்தி கிடைக்குமல்லவா என்று கொளுத்திப் போடுகிறார்கள்.
இன்னும் சில ஷகிலா பக்தர்கள், மலையாள பாரம்பரியப்படி முண்டும், ரவிக்கையும் உடுத்திய பெண்களை மட்டும் அனுமதித்தால் என்னவென்று கேட்கிறார்கள். வைத்திசார்வாள் இதற்கெல்லாம் இளைய தலைமுறை சமஸ் போன்ற தத்துவாதிகளிடம் கலந்தாலோசித்து எழுத வேண்டும். இன்னும் சில வாயாடிகள் திருக்கோவில் கோபுரங்களில் இருக்கும் டிரஸ் இல்லாத கோடுகளை அதாவது அம்மணக்குண்டி சிலைகளைக் காட்டி இதுக்கெல்லாம் நீதிபதி ஐயா எப்போதையா டிரஸ் போடுவார் என்று கேட்கிறார்கள்.
கழனியில் வேலை செய்பவர் ஏன் வெள்ளை உடை உடுத்தாமல் அரை டிராயரை போட்டு குற்றம் புரிகிறார்?
கழனியில் வேலை செய்பவர் ஏன் வெள்ளை உடை உடுத்தாமல் அரை டிராயரை போட்டு குற்றம் புரிகிறார்?
ஆனாலும் வைத்திசார்வாளை ஏதோ புளிச்ச தயிர் சாதப் பார்ட்டி என்று ஏமாந்து விடாதீர்கள். இப்படி ஏட்டிக்கு போட்டியாக கேட்கப்படும் கேள்விகள், கேலிகள், பழிப்புகள் அனைத்தும் திராவிட அரசியலின் சதி என்று முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக முதலிலேயே சொல்லி விடுகிறார்.  இவர்களின் பிரச்சாரத்தால் கோவில்களில் குறைந்த கூட்டம் இப்போது கூடியிருக்கிறது என்று கூத்தாடும் ஐயர்வாள் ஆசிரியர் சார், இருப்பினும் ஆலயம் தொழுவதில் மற்ற மதத்தினரிடம் இருக்கும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதைப் பார்த்து வேதனையும் படுகிறார்.
அதுதான் இறைநாடி வரும் இளைய தலைமுறை டி சர்ட், ஜீன்ஸ், ஷார்ட், லெக்கின்ஸ், ஸகின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற கிறித்தவ நாட்டு உடைகளை உடுத்தி வருவதாம். இதனால் பாவாடை, தாவணி, சேலை, வேட்டி போன்ற பாரம்பரிய ஆடைகள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறதாம். இத்தகைய பாரம்பரிய வஸ்திரங்களின் மேல் வைத்திஜி கொண்டிருக்கும் மரியாதையையும், மதிப்பையும், பெருமிதத்தையும் பார்த்தால் நிச்சயம் அவர் கோவணமோ, லங்கோடோதான் கட்டியிருப்பார். ஆதாரம் வேண்டுவோருக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
இறைவழிபாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன என்று வைத்திசார்வாள் அதிசயமாய் எழுதியிருக்கிறார். என்ன அதிலும் நிலைய உள் குத்துக்கள் இருக்கலாம். அரபு – சமஸ்கிருதம், புர்கா – பாரம்பரியம், கண்டிப்பான தொழுகை – கண்டிப்பான விரதம் போன்றவைகளை அவர் யோசித்திருக்க கூடும். இருப்பினும் ஒரு சுலைமான் மதரசாவில் படித்து மவுல்வியாக ஆனாலும், ஒரு சுடலையாண்டி வேதப் பாடசாலையில் படித்து அர்ச்சகராக ஆக முடியாது என்பதால் அவர் இஸ்லாமியர்களை மனம் திறந்து பாராட்டும் பாவத்தை செய்பவராக கருத முடியாது.
கறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!
கறை படாத வெள்ளை வேட்டியை உழைப்பே இல்லாத உத்தமர்கள் மட்டும்தான் உடுத்த முடியும்!
மேலாடையில்லாமல் வந்தால் யாரெல்லாம் பூணூல், யாரெல்லாம் பூணாத ஆள் என்று கண்டுபிடிப்பதற்கு தோதாக இருக்குமென்று நாத்திக ராட்சசர்கள் தீவிர பிரச்சாரம் செய்து புளுகுகிறார்கள் என்று கோபப்படுகிறார் வைத்தி. பின்னே தினமணி ஆபிசோ இல்லை டி.-சி.எஸ் மேலாளர் அறையோ இல்லை செட்டிநாட்டு வித்யாஷ்ரமம் பள்ளி கிரிக்கெட் அணியோ ஒவ்வொரு முறையும் தோளைத் தடவிப் பாத்து யாரெல்லாம் நூல் பார்ட்டி என்று கண்டுபிடிக்கும் அவஸ்தை யாருக்கய்யா புரியும்?
இறுதியாக  வைத்தி சார் ஜி அவர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் ஒரு சிறு கோரிக்கையை வைத்து சாஸ்டாங்கமாக நமஸ்கரிக்கிறார். அதன்படி கோவில்களில் செல்லிடப் பேசியை தடை செய்யவும், மீறினால் பறிமுதல் செய்து அபராதம் போடுவதையும் உடை கட்டுப்பாட்டுடன் சேர்த்து செய்தால் கலியுகத்தில் தர்மம் தழைத்து, அதர்மம் வீழ்வது உறுதி என்கிறார் தினமணியின் தீதும் பிறர் தர வாய்ப்பேயில்லாத ஆசிரியர் ஜி அவர்கள்.
ஆமாமய்யா, இனி தேவநாதன் ஜிக்கள், கருவறையில் பலான காட்சிகளை படம் பிடித்து சி.டிக்களாக விற்றுத் தீர்ந்து அதுவும் கீதை விற்பனையை முறியடித்த வேதனைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லையல்லவா?
இதுவும் போக வைத்தியின் அர்த்தசாஸ்திரத்தில் ஏகப்பட்ட கோரிக்கைகள் உண்டு.
தேவதாசி முறையை மீட்டு வந்தால் தேவலோக இந்திர சபையில் நடக்கும் ஆட்டங்கள் இங்கேயும் நடக்கலாம். கடவுளும் உள்ளம் மகிழலாம். மாமிச உணவைத் தின்னுவதால் வரும்  வன்முறைக் குணங்களை மட்டறுக்க கோபுரத்தின் கீழேயே ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேனரைப் போட்டு வருவோர் எவரும் மட்டனோ சிக்கனோ மீனோ இல்லாத வயிறைக் கொண்டிருக்கிறாரா என்று ஸ்கேன் செய்து அனுப்பலாம். கூடவே மல ஜலங்களை காலி செய்யாமல் வரும் பக்தர்களுக்கு இனிமா கொடுத்து வெறும் வயிற்றோடு அனுப்பலாம்.
பாவாடை தாவணியை சினிமாவே மறந்து விட்ட நிலையில் பக்தியா மீட்டு விடும்?
பாவாடை தாவணியை சினிமாவே மறந்து விட்ட நிலையில் பக்தியா மீட்டு விடும்?
அன்றாடம், வாரம், மாதம் என்று கோவில்களுக்கு வருகை தருவோருக்கு              பாயிண்ட் போட்டு மயிலாப்பூர் கிரி கடை கிஃப்ட் கூப்பன் கொடுக்கலாம். கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா, பாபா ராம் தேவ் யோகா,  டபுள்ஸ்ரீ ரவி சங்கரின் கார்ப்பரேட் யோகா, இராம கோபாலனின் சீற்றம், ஜக்கியின்  ஈஷா யோகா அனைத்திற்கும் நிரந்தர கடைகளை ஏற்படுத்தலாம்.
எல்லாம் சரிதான் வைத்திஜி சார்! ஒன்றைத் தவிர!!
ஏற்கனவே ஆன்ட்ராய்டு ஆப் மூலம் பக்தி ஆப், யோகா ஆப், விரத ஆப்புனு போய்க் கொண்டிருக்கும் ஃபுல் தமிழகத்தை இப்படி ஜீன்ஸ், லெக்கின்ஸ் தடை போட்டால் வவ்வாலும், ஐயரும் மட்டும் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு யார் வருவார்? ஜனவரி புத்தாண்டு கிறித்தவ புத்தாண்டு, அன்று நள்ளிரவு கோவில்களை திறக்காதீர்கள், அதிகாலைதான் இந்துப் பண்பாடு, அன்று கோவிலுக்கு போகாதீர்கள் என்று இந்து முன்னணியும், இதர பரிவாரங்களும் கரடியாக கத்தி என்ன?
புத்தாண்டை கொண்டாடுவோரும், நள்ளிரவு 12 மணிக்கு கோவிலுக்கு செல்வோரும் இந்துக்கள் இல்லை என அறிவித்தால் என்ன ஆகும்? இது சிறுபான்மை இந்துக்கள் வாழும் நாடாகிவிடாதா?
ஜாக்கி ஜட்டியும், லீவைஸ் ஜீன்சும், நாயுடு ஹால் லெக்கின்ஸும் போடுபவர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்றால் பிறகு யார் வர வேண்டும்? நாகா சாமியார்களா? மல்டிபிளக்சிலும், ஹைப்பர் மார்க்கெட்டிலும், மேல் படிப்பிலும் இதுதான் உடை, இதுதான் நடை என்றான பிறகு கோவிலுக்கு மட்டும் என்னய்யா தடை? டாஸ்மாக்கிற்கு போகும் வழியில் வரும் பெருமாள் கோவில் முன்பு, பல்சரை நிறுத்தி பவ்யமாய் கன்னத்தில் ரெண்டு தட்டி, வாயில் ஒரு முத்தம் கொடுத்து செல்லும் பக்தர்கள் வாழும் நாட்டில் இத்தகைய கட்டுப்பாடுகள் வந்தால் முதலுக்கே மோசமென்று இந்த வைத்திக்கு யாரய்யா பாடம் எடுப்பார்கள்?
மடிசார் கட்டாமல் இந்து ஞான மரபுக்கு விரோதமாக வேலை செய்யும் பெண்கள்!
மடிசார் கட்டாமல் இந்து ஞான மரபுக்கு விரோதமாக வேலை செய்யும் பெண்கள்!
அமெரிக்காவில் மாடுகளை மேய்க்கும் கௌபாய்களும், கடுமுழைப்பு தொழிலாளிகளும் தார்பாய்களை கிழித்து தைத்த பேண்டுகளில் பிரச்சினையே இல்லாமல் வேலை செய்தார்கள். ஜீன்சின் தல புராணம் இவ்வாறு இருக்கையில் நம்மூர் கழனிகளில் வேட்டி, மடிசார், அங்கவஸ்திரத்துடன் இறங்கும் மக்களை பார்த்திருக்கிறீர்களா? இல்லை பாதாளச் சாக்கடைகளில் ராம்ராஜ் பாரம்பரிய காட்டன் வேட்டியுடன் இறங்கும் துப்பரவு தொழிலாளிகளைத்தான் பார்க்க முடியுமா?
பேண்டும், சுடிதாரும், லெக்கின்சும் வந்த பிறகுதான் அதிக பெண்கள் இந்தக் கால்களால் நாலு இடங்களில் நடக்க முடியும் என்பதைக் கண்டிருக்கிறார்கள். ஆலயத்திற்கும், சமையலறைக்கும் மட்டுமென்றால் சேலையே போதும்தான். ஆனால் உங்கள் குடமுழுக்கிற்கும், தேர்த்திருவிழா கூட்டத்திற்கும் ஒழுங்கு படுத்த வரும் பெண் போலிசு, பேண்டு போடக்கூடாது என்றால் மோடியிடம் சொல்லி இராணுவத்திற்கும் சேலையையே கட்டாய உடையாக்கலாமே?
temple dress code (1)ஆக உங்களது தூய வெள்ளை வேட்டியும், தூய மடிசார் சேலையும் எங்கள் உழைப்பாளிகளின் அன்றாட ஆடையாகாத போது கைலி கட்டினால் அனுமதி இல்லை என்றாகும் போது என்ன நடக்கும்?
ஏற்கனவே வைத்திவாள் கவலைப்படும் இறை வழிபாட்டு அலட்சியம் ஒரு மாபெரும் புறக்கணிப்பாய் முடியும். இளைய தலைமுறை இனி எந்நாளும் கோவிகளுக்கு வரமாட்டார்கள் என்றாகும். ஜீன்ஸ், லெக்கின்ஸ் அனுமதிக்கப்படும் பிரைவேட் கோவில்கள் உருவாகும். நாட்டார் தெய்வ வழிபாடும், கோவில்களும் வளரும்.
பிறகு இராம கோபாலனும், வைத்தியும் கரடியாய் கத்துவதைக் காணுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
____________________வினவு.com 

கருத்துகள் இல்லை: