வியாழன், 7 ஜனவரி, 2016

காஷ்மீர் முதலமைச்சர் முஃப்தி முகமது சையது காலமானார்...V.P.Sing ஆட்சியின் உள்துறை அமைச்சர்

காஷ்மீர் மாநில முதலமைச்சர் முஃப்தி முகமது சையது இன்று காலமானார்.
அவருக்கு வயது 79.
பல்வேறுவிதமான உடல் நல உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தில்லி மருத்துவமனை ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பாக சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்தார்.
வியாழக்கிழமையன்று அதிகாலையில் முஃப்தி முகமது சையது மரணமடைந்ததாக அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நயீம் அக்தர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
இவரது மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் இணைந்து காஷ்மீரில் ஆட்சி செய்து வருகின்றன.
முஃப்தியின் மரணத்தையடுத்து அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி அடுத்த முதல்வராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 டிசம்பரில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முஃப்தியின் பிடிபி 28 இடங்களைக் கைப்பற்றியது. பாரதீய ஜனதாக் கட்சி 25 இடங்களைக் கைப்பற்றியது.

பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு கட்சிகளும் இணைந்து கடந்த மார்ச் மாதம் கூட்டணி அரசை அமைத்தன.
1936ல் பிறந்த முஃப்தி முகமது சையது, இந்தியாவின் முதல் முஸ்லிம் உள்துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநில கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியில் தன் அரசியல் வாழ்வை 1950களில் துவங்கினார் முஃப்தி.
விரைவிலேயே அந்தக் கட்சியிலிருந்து விலகிய முஃப்தி, காங்கிரசில் இணந்தார். அதன் பிறகு மக்கள் ஜனநாயகக் கட்சியை அவர் துவங்கினார்.
1971ல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால், அதற்குப் பிந்தைய இரண்டு தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்தார்.
அதற்குப் பிறகு வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை அமைச்சராக முஃப்தி பொறுப்பேற்றார்.
முஃப்தி உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவருடைய மகள் ருபைய்யா சையது காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
சில தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, ருபைய்யா விடுதலைசெய்யப்பட்டார். ஆனால், மத்திய அரசுக்கும் முஃப்திக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாக அமைந்தது.

கருத்துகள் இல்லை: