ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் கல்விக் கொள்ளையர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.

மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனிங்க ஃபிளாட் ஏரிக்குப் பக்கத்துலேயே இருக்கு. தண்ணிப் பிரச்சினையே இருக்காது என பில்டர் சொன்னதை நம்பி, பெரும் ஆசையுடன் லேக் வியூ ஏரியாவில் வீடு வாங்கினேன். அதன் ஆபத்தை இப்போது அனுபவிக்கிறேன்.”
– சென்னையின் புறநகர்ப் பகுதியான பெரும்பாக்கம் லேக் வியூ ஏரியா வாசியான அரவிந்தின் புலம்பல் இது. வழக்கமாக மழைக் காலங்களில் சென்னையின் கூவம், அடையாறு கரையோரங்களில் கேட்கப்படும் கதறலை இந்த மழைக் காலத்தில் மேட்டுக்குடியினர் வசிக்கும் பெரும்பாக்கத்திலும், வேளச்சேரியிலும், மேற்கு தாம்பரத்திலும், பழைய மகாபலிபுரம் சாலையிலும் கேட்க முடிந்தது. படகு விட்டு காப்பாற்ற வேண்டிய அளவி்ற்கு மூழ்கிப்போன மேற்கு தாம்பரம் சி.டி.ஒ. காலனி (இடது).
50, 60 இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட அரவிந்தின் வீடு ஏறக்குறைய வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அரவிந்தும், அவரது பிளாட்டில் வசிக்கும் மற்றவர்களும் ஒரு படகை வாடகைக்குப் பிடித்து வெளியேறித் தப்பித்துள்ளனர்.

அடைமழைக் காலங்களில் சென்னையில் கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட 150 இடங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையானது. ஆனால், இந்த மழையின்போது சென்னை மாநகரின் 15 மண்டலங்களும், அதன் புறநகர்ப் பகுதிகளான சோழிங்கநல்லூர், பனையூர்குப்பம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நந்தம்பாக்கம், துரைப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பலவும் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தனி தீவுகளாகின.
சைதாப்பேட்டை அடையாற்றின் ஓரத்தில் அழிந்துபோன ஒண்டுக் குடியிருப்புகள்
செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கையின்றித் திறந்து விட்டதால், சைதாப்பேட்டை அடையாற்றின் ஓரத்தில் அழிந்துபோன ஒண்டுக் குடியிருப்புகள்
மேற்கு தாம்பரம், பெரும்பாக்கம், வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறடி உயரத்திற்கு ஏரி நீர் புகுந்தது. இந்தப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் தளத்திலும், “வில்லா” போன்ற தனி பங்களா வீடுகளிலும் வசித்தவர்கள் முதல்மாடிக்குச் சென்று உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
இந்த மழையால் வட சென்னையில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் பேர் ஏறத்தாழ அகதி நிலைக்குத் தள்ளப்பட்டதாக செதிகள் வெளிவந்துள்ளன. சென்னை – வில்லிவாக்கத்திலுள்ள சிட்கோ நகர் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள சிறு உற்பத்தியாளர்களுக்கு ஏறத்தாழ 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டையும் இந்த வெள்ளத்திற்குத் தப்பவில்லை. இந்தப் பொருள் இழப்புகளுக்கு அப்பால், நாற்பது பேர் நவம்பர் இரண்டாவது வாரத்தில் பெய்த மழைக்குப் பலியாகியுள்ளனர்.
பழைய பெருங்களத்தூர்
வெள்ளத்தால் வீதிக்கு வந்த மக்களைத் தங்க வைக்க போதிய மையங்கள் ஏற்பாடு செய்யப்படாததால் அவர்கள் தெருவில் தஞ்சமடைய நேரிட்ட அவலம். (பழைய பெருங்களத்தூர்)
இது போன்ற மழைப் பொழிவு சென்னைக்குப் புதிது அல்ல. இந்தாண்டு நவம்பர் 9,10,11 தினங்களில் பெய்த மழையை (235 மி.மீ) விட அதிகமான மழை, 2005-அக்டோபர் 27-ம் தேதி ஒரே நாளில் 270 மி.மீ. பெய்திருக்கிறது. அதைவிட அதிகமாக 1969-ல் 280 மி.மீ. மழையும், 1976 நவம்பரில் 450 மி.மீ. மழையும் பெய்திருக்கிறது. எனவே, மூன்றே நாளில் கொட்டித் தீர்த்த மழையினால் சென்னை வெள்ளக்காடானது என ஜெயாவும் அவரது அடிவருடிகளும் கூறுவதற்குப் பின்னே, அ.தி.மு.க. ஆட்சியின் அலட்சியத்தை, அதன் குற்றங்களை மறைத்துக் கொள்ளும் தந்திரம்தான் மறைந்திருக்கிறது.
“சென்னை நகரில் போடப்பட்டுள்ள 1,860 கி.மீ. தூரமுள்ள மழைநீர் வடிகால் கால்வாகளிலிருந்து 6,000 டன் கொண்ட சேறு மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதால், இந்த முறை பருவ மழையை எளிதாகச் சமாளித்துவிடுவோம்” என அறிவித்தது, சென்னை மாநகராட்சி (தினகரன், 17.11.2015). அது வடிகட்டிய பொய் என்பதை இந்த மழை அம்பலப்படுத்திவிட்டது.
அமைந்தகரை
ஆட்டோக்களில் (அமைந்தகரை) தஞ்சமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள்
அ.தி.மு.க. அரசின் இத்தகைய அலட்சியம் ஒருபுறமிருக்க, 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த சென்னை கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளில் 471 சதுர கிலோமீட்டராக வீங்கிப் போனதன் எதிர்விளைவாகத்தான் வெள்ளக் காடானது என்பதை இப்பொழுது மறுப்பவர்கள் யாரும் இல்லை.
“கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி, திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கல்லூரிகளும், அரசுக் கட்டிடங்களும், விரைவுச் சாலைகளும் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அதில் கிடைக்கும் புள்ளிவிவரங்களே இராணுவம் வந்து மீட்கும் அளவுக்கு சென்னை மிதந்தது ஏன் என்ற கேள்விக்கு விடையளிக்கும்” என துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் குறிப்பிட்டார்.
ஏரிகள் அழிந்தன, சென்னை மிதந்தது
கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், ஊரப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும்; செம்பரம்பாக்கம், போரூர் ஏரி, மாம்பலம், நந்தனம் வடிகால் பகுதி நீரும்; மணப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உபரி நீரும்; வடசென்னை ஏரிப்பகுதிகளிலிருந்து வரும் உபரி நீரும் இணைந்து கால்வாகள் மூலம் அடையாறு ஆற்றை வந்தடைந்து கடலில் கலக்கும் விதமாக முந்தைய காலங்களில் நீர்வழித் தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் பகுதிகளிலிருந்து கால்வாய் வழித்தடங்கள் மூலம் வெள்ள நீர் தேங்காமல் ஆற்றை வந்தடையும் வகையில் இருந்தன (தின, 25.11., பக்.6). இந்தக் கட்டுமானத்தை அறுத்தெறிந்து, குற்றுயிரும் குலைஉயிருமாக்கிவிட்டது, சென்னையின் ‘வளர்ச்சி’.
அரசு, ரியல் எஸ்டேட்-கட்டுமான நிறுவனங்கள், தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் உற்பத்திசார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி வியாபாரிகள், மத்திய மற்றும் உயர் வருவா பிரிவைச் சேர்ந்த புதுப் பணக்கார கும்பல் – இவர்கள்தான் சென்னையின் இரத்த நாளங்களாக இருந்த நீர்வழித் தடங்களை அழித்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
“1906-ம் ஆண்டு கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டில் இந்த எண்ணிக்கை 43 நீர்ப்பிடிப்பு நிலைகளாகச் சுருங்கி, 90 சதவீத நீர்ப்பிடிப்பு நிலைகள் களவாடப்பட்டுவிட்டதாக”க் குறிப்பிடுகிறது ஓர் ஆய்வறிக்கை.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு
கழிவுநீர் கலந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள்.
பழைய சென்னையின் அடையாளங்களான மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி, சூளைமேடு, லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை “லாங் டேங்க்” என்றழைக்கப்பட்ட சென்னையின் பிரம்மாண்டமான ஏரியின் அழிவில்தான் உருவாகியிருக்கின்றன. இந்த ஏரி சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை வரை குதிரை லாட வடிவில் நீண்டிருந்ததோடு, அந்தந்த பகுதிக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, மயிலாப்பூர் ஏரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டதற்கு 1909-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழில் ஆதாரங்கள் உள்ளன.
1970-80 காலக்கட்டத்தில் உருவான முகப்பேர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளும், 1990-களில் தனியார்மயம் புகுத்தப்பட்டபின் உருவான வேளச்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளும் பல்வேறு நீர் ஆதாரங்களை அழித்தும், ஆக்கிரமித்தும்தான் எழுந்து நிற்கின்றன. அம்பத்தூர் ஏரியை ஆக்கிரமித்து 6,000 வீடுகளை அரசே கட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு “ஏரி ஸ்கீம்” என்ற நாமகரணத்தையும் சூட்டியிருக்கிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதியான வரதராஜபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்களை மீட்டு வர, கையில் மேப்புடன் வந்த பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வெள்ளத்தில் நீந்தி அந்தப் பகுதியை ஆராய்ய்ந்த பின்னர் இப்படிச் சொன்னார்கள்: “மேப்ல இருக்கிற மாதிரி ஆறோ, ஏரியோ தெரியல. எல்லாம் என்க்ரோச்மெண்ட் (ஆக்கிரமிப்பு), சந்து, வீடு, கால்வாய், டிரான்ஸ்பார்மர், டிரைனேஜ் இப்படித்தான் இருக்குது.” இதுதான் சென்னையின் இன்றைய நிலைமை. அரசிடம் உள்ள மேப்பில் ஏரியாக இருப்பது, ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பாக, வில்லாக்களாக, மால்களாக, ஐ.டி. பார்க்குகளாக, புறவழிச்சாலைகளாக, மேம்பாலங்களாக உருமாறி நிற்கின்றன.
நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதில் சதுப்பு நிலங்களின் பங்கு முக்கியமானது. அவை தங்களது பரப்பளவைப் போல சுற்றுப்பகுதியில் பத்து மடங்கு பரப்பளவுக்கு நிலத்தடி நீரை வற்றாமல் பாதுகாக்கின்றன. வலசை செல்லும் பறவைகளுக்கு இனப்பெருக்க பூமியாகவும், ஏராளமான நீர்த் தாவரங்கள், மீன்கள், நுண்ணிய முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் வசிக்கும் பல்லுயிர் சூழல் முக்கியத்துவம் வாந்த பகுதி இவை. நன்னீர் சதுப்பு நிலம் என்பது அரிதினும் அரிதானது. அப்படிபட்ட நன்னீர் சதுப்பு நிலமான பள்ளிக்கரணையை அரசும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், ஐ.டி. நிறுவனங்களும் கூறு போட்டு, அதன் பெரும்பகுதியை நாசப்படுத்திவிட்டன. (பார்க்க: பெட்டிச் செய்தி)
வேளச்சேரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரிகளின் உபரி நீர் வீரங்கால் ஓடை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குச் செல்லும். இந்த ஓடையின் பெரும்பகுதி இன்று காணாமல் போவிட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒருபுறம் நீரைச் சேமித்து வைத்துக் கொண்டு, மறுபுறம் உபரி நீரை சிறிது சிறிதாக ஒக்கியம் மடு வழியாக வெளியேற்றுகிறது. இப்படி வெளியேறும் நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. இந்த ஒக்கியம் மடுவை அடைத்து தனியார் பொறியியல் கல்லூரி கட்டிடங்களை எழுப்பி வைத்திருக்கிறது.
பொழிச்சலூர்
குட்டை போலத் தேங்கி நிற்கும் வெள்ள நீருக்குள்ளேயே வசிக்க வேண்டிய கட்டாயத்தில் பொழிச்சலூர் பகுதி மக்கள்.
389.47 ஹெக்டேர் பரப்பளவு கொண்டிருந்த வேளச்சேரி ஏரி புதிய குடியிருப்புகளாலும், ஃபீனிக்ஸ் (Phoenix Mall) மாலாலும், ரானே கம்பெனி, உணவு விடுதிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களாலும், 100 அடி சாலையாலும் ஆக்கிரமிக்கப்பட்டு 85.8 ஹெக்டேராகச் சுருங்கிவிட்டது. 100.92 ஹெக்டேரில் விரிந்துகிடந்த ஆதம்பாக்கம் ஏரி 13.68 ஹெக்டேராகச் சுருங்கிக் கிடக்கிறது. இதன் எதிர்விளைவாகத்தான் படகு விடுமளவிற்கும், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடும் அளவிற்கும் வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
“அடையாறின் வெள்ள நீர் வடிநிலத்தின் மீதுதான் புதிய விமான நிலையம் எழுந்து நிற்கிறது. கோயம்பேடு வடிநிலப் பகுதி கோயம்பேடு பேருந்து நிலையமாகவும், கோயம்பேடு மார்க்கெட்டாகவும் உருமாறி நிற்கிறது. பக்கங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துதான் பறக்கும் ரயில் நிலையங்களும், அந்த ரயில் ஓடுவதற்கான பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இதனால் அடையாறு முகத்துவாரத்திலிருந்து கோவளம் முகத்துவாரம் வரையிலான தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயின் அகலம் 25 மீட்டரிலிருந்து 10 மீட்டராகக் குறுகிப் போனது.”
“தேசிய நெடுஞ்சாலை 45-ஐயும், தேசிய நெடுஞ்சாலை 4-ஐயும் இணைக்கும் சாலை கிழக்கில் வடியும் மழைநீரைத் தடுத்து அண்ணா நகர், போரூர், வானகரம், மதுரவாயில், முகப்பேர், அம்பத்தூர் போன்ற பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகள் நிரம்பிய பின் வெளியேறக்கூடிய உபரிநீர் கால்வாய்கள் மாயமாகிவிட்டன. விருகம்பாக்கம், பாடி, வில்லிவாக்கம் ஏரிகளுக்கான முக்கிய வெள்ளநீர் வடிநிலப் பகுதிகள் தூர்ந்து போய்க்கிடக்கின்றன” என சென்னையை வெள்ளக்காடாக்கிய காரணிகளைப் பட்டியல் இடுகிறார், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.
“தற்பொழுது 471 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள சென்னையை 1,171 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நகரமாகவும், அதன்பிறகு 8,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நகரமாகவும் வளர்ப்பதற்கான திட்டங்களை அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக”க் கூறும் தெற்காசிய நீர் ஆராய்ய்ச்சி நிறுவனத் தலைவர் ஜனகராஜன், “சென்னை மாஸ்டர் பிளான் இரண்டில் நீர் ஆதாரங்களைக் காப்பதற்கு எந்தத் திட்டமும் கிடையாது” என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். சென்னை நகர மக்கள் எதிர்காலத்தில் எத்தகைய பேரபாயத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவரது கூற்று எடுத்துக் காட்டுகிறது.
மழைநீர் வடியாமல் போனது ஏன்?
அம்பத்தூர் தொழிற்பேட்டை
வெள்ளக்காடான அம்பத்தூர் தொழிற்பேட்டையி்ன ஒரு பகுதி
சென்னையிலிருந்த நீர்நிலைகளுள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டதால், வெள்ளம், வறட்சி என்ற இரண்டு துயர்களை மாறிமாறிச் சுமந்து தீர வேண்டிய நிலையில் அந்நகர மக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மழைக் காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கக்கூடிய நீர்நிலைகளை ‘வளர்ச்சிக்காக’ப் பலி கொடுத்துவிட்ட பிறகு, வெள்ள நீரைக் கடலுக்குள் கொண்டுபோய் சேர்ப்பதில் மட்டும்தான் அரசும், நிபுணர்களும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காகவே சென்னையில் 1,860 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. “மழை நீரைச் சேமித்துவைக்க முடியாமல் அதனைக் கடலுக்குள் கொண்டு சேர்த்துவிட்டு, பிறகு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நாம் தீட்டிக் கொண்டிருக்கிறோம். எத்தகைய முட்டாள்தனம் இது” எனத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நிபுணர் ஒருவர் குத்திக் காட்டினார்.
“சென்னையிலுள்ள மழை நீர் வடிகால்களை ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு சுற்றும், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது சுற்றும் தூர்வார வேண்டும். வடிகாலின் மேற்பகுதியில் உள்ள நுண்துளைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்த வடிகால்கள் வழியாகச் செல்லும் மழை நீர் சென்னையில் உள்ள 8 பிரதான கால்வாய்களில் போய்ச் சேர வேண்டும். மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், அடையாறு, கூவம் உள்ளிட்டு இந்த எட்டு கால்வாய்களையும் மழைக் காலத்திற்கு முன்பு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்” என மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு இருக்கிறார், சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் எம்.பி.விஜயகுமார் (குமுதம் ரிப்போர்டர், 01.12.2015). இவற்றுள் ஒன்றைக்கூட சென்னை மாநகராட்சி உருப்படியாகச் செய்யவில்லை என்பதை இந்த மழை எடுத்துக்காட்டிவிட்டது. சென்னையில் மழைநீரை கடலுக்கு எடுத்துச் செல்லும் 16 கால்வாய்களைத் தூர்வாரி பத்தாண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகிறது, தினமணி (24.11.2015)
“மழைநீர் வடிகால்களைத் தூர் வாராதது மட்டுமல்ல, அவை முறையாகவே கட்டப்படவில்லை” என்கிறார் பொதுப்பணித் துறையின் முன்னாள் சிறப்புப் பொறியாளர் அ.வீரப்பன். “மழைநீர் வடிகால்கள் திட்டமின்றியும் தரக்குறைவாகவும் கட்டப்பட்டுள்ளன; அவ்வடிகால்கள் தானே ஓடக்கூடிய வாட்டத்துடன் கட்டப்படவில்லை; அவ்வடிகால்கள் அருகிலுள்ள கால்வாகள், கூவம், ஓட்டேரி நல்லா போன்ற கால்வாகள், சிற்றாறுகளுடன் இணைக்கப்படவில்லை” என அவர் மழைநீர் வடிகால்களின் தரத்தைப் புட்டு வைத்திருக்கிறார். (ஜூ.வி.29.11.15)
“மழைநீர் வடிகால்கள் அமைக்கும் முன்பு, அந்தப் பகுதியில் பருவ மழை காலத்தில் பெய்யும் மழையின் அளவு, மழைநீர் வடிகால் கால்வாயில் இணைக்கப்படும் வழித்தடம் மற்றும் எவ்வாறு அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்குகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பணிகளைச் செய்ய சென்னை மாநகராட்சியில் தனியாகப் பொறியாளர் குழு இருந்தது. இப்போது அந்தக் குழுவே இல்லை. அதனால்தான், தன் வாட்டத்தில் மழை நீர் வடிந்துவிடும் சாலைகளோ, தெருக்களோ, வடிகால்களோ அமைக்கப்படுவது இல்லை. கடமைக்காக, ஒப்பந்தம் கிடைத்துவிட்டது என்பதற்காக எதையோ செகிறார்கள். அதன் விளைவை – மழைநீர் வெள்ளமாகச் சாலைகளில் தேங்குவது; மழைநீரோடு கழிவு நீரும், மனிதக் கழிவுகளும் சேர்ந்து ஓடுவது – இப்போது மக்கள் அனுபவிக்கிறார்கள்” என்கிறார், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் ராமாராவ். (ஜூ.வி.29.11.15)
மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் புதிதாக அமைப்பதற்கும், பழையதைப் பராமரிப்பதற்கும் சென்னை மாநகராட்சி கடந்த மூன்றாண்டுகளில் கிட்டதட்ட 800 கோடி ரூபாய்யைச் செலவிட்டிருப்பதாக எழுதுகிறது, தினமணி (24.11.2015). மழைநீர் வடிகால்கள் முறையாக கட்டப்படுவதில்லை, முறையாக பராமரிக்கப்படவில்லை எனும்பொழுது, இந்தப் பணம் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காண்டிராக்டர்கள் கூட்டணியின் பாக்கெட்டுகளைத் தவிர, வேறு எங்கு சென்றிருக்க முடியும்?
மழைநீர் வடிகால்கள் மட்டுமல்ல, சென்னையில் நீர் வழிந்தோடும் போக்குக்கு ஏற்ப சாலைகளும் அமைக்கப்படுவதில்லை. அதனால்தான் தி.நகர் போன்ற வணிகப் பகுதிகளில்கூட மழைநீர் பெருமளவு தேங்குகிறது. “நீரோட்டத்தைக் கணக்கிட்டு குறிப்பிட்ட சாலையின் உயரத்தை இதற்கு மேல் உயர்த்தக்கூடாது என உத்தரவிட்டு, அதனை அரசு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், இன்னும் 10, 15 ஆண்டுகளில் சென்னையின் புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கோயில்கள், மாநகராட்சி கட்டிடம், உயர்நீதி மன்றம், சாந்தோம் தேவாலயம் போன்றவை மழை நீர் தேங்கும் இடங்களாகிவிடும்” என எச்சரிக்கிறார், சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத் தலைவர் கோ.வெங்கடாசலம்.
முறையாகவும், தரமாகவும் கட்டப்படாத மழைநீர் வடிகால்களும், மழைநீரைக் கடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சென்னையின் 16 கால்வாய்களும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தூர்வாரப்படாத அவலம், நீர் வழிந்தோடும் போக்குக்கு ஏற்ப அமைக்கப்படாத சாலைகள் என்ற இந்த பலவீனமான அடிக்கட்டுமானத்தின் மேல்தான் பிரம்மாண்டமான மால்கள், மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகள், தீம் பார்க்குகள், ஐ.டி. பூங்காக்கள், நூற்றுக்கணக்கான ஃபிளாட்டுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் சென்னையெங்கும் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கொளத்தூர், விநாயகபுரம், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் 50 இலட்சம் முதல் 75 இலட்சம் சதுர அடி வரையில் குடியிருப்புகளும், வணிகக் கட்டிடங்களும் கழிவு நீர், மழை நீர் வெளியேற்றும் கட்டுமானம் இன்றி உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த நவீனக் கட்டுமானங்கள் தமது கழிவு நீரைத் தாமே சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ப நிபந்தனைகளை விதிக்க அரசு மறுத்து வருகிறது. இத்தகைய நவீன கட்டுமானங்களுள் பெரும்பாலானவை நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, தமது மழை நீரையும், கழிவு நீரையும் வெளியேற்ற இந்தப் பலவீனமான கட்டுமானத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த நிலைமைகள்தான் மழைக் காலங்களில் சென்னையை ஒரு மாநரகமாக மாற்றுகின்றன.
– மு குப்பன்
***

ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் கல்விக் கொள்ளையர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.

  • எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை சாராய உடையார் போன்ற கிரிமினல் கும்பல்கள் துணிந்து ஆக்கிரமித்துக் கொள்வதற்கு கால்கோள் நாட்டப்பட்டது. குறிப்பாக, சென்னையின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றான 800 ஏக்கர் பரப்பு கொண்டிருந்த போரூர் ஏரியின் பெரும் பகுதியை, சாராய உடையார் குடும்பத்துக்குச் சோந்தமான ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்த்துக் கொடுத்தார், எம்.ஜி.ஆர். அவர் மறைந்த பிறகு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட எம்,ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆட்சியில் பொதுச்சொத்துக்களை ஆக்கிரமிக்கும் இந்தக் கொள்ளை அதன் உச்சத்தைத் தொட்டது.
    இந்த மழைக் காலத்திற்கு முன்பு போரூர் ஏரியின் 17 ஏக்கர் பரப்பை ஆக்கிரமிக்க முயன்ற ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் திருட்டுத்தனத்தைப் பொதுமக்கள் எதிர்த்து நின்று முறியடித்தனர்.
  • தமிழகத்தில் இந்து மதவெறிக் கும்பலுக்குப் பல்லக்குத் தூக்கிவரும் பச்சமுத்து நடத்திவரும் எஸ்.ஆர்.ஆம். குழுமக் கல்லூரிகள் பொத்தேரி முதலான பல ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஏரித் திருடனுக்குச் சொந்தமான “புதிய தலைமுறை” தொலைக்காட்சியோ சென்னை வெள்ளக் காடானதற்கு யார் காரணம் என்ற விவாதத்தை நடத்தியது.
  • இந்து மதவெறிக் கும்பலின் இன்னொரு அடிவருடியான ஏ.சி.சண்முகத்துக்குச் சோந்தமான சென்னை-மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது.
  • எம்.ஜி.ஆருக்கு கூஜா தூக்கி பிழைத்துவந்த மறைந்த திரைப்பட நடிகர் ஐசரிவேலன் மகன் ஐசரி கணேஷுக்குச் சோந்தமான வேல் பல்கலைக்கழகம் பல்லாவரம் ஏரியை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.
  • பெரும்பாக்கம் ஏரியையும் அதைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துதான் குளோபல் மருத்துவமனை மற்றும் விப்ரோ, ஹெச்.சி.எல். உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டிடங்களும், மேட்டுக்குடியினர் வசிக்கும் வில்லா வகையிலான வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
  • பெரும்பாக்கம் ஏரி அருகில் இந்தியா புல்ஸ் என்ற பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கிறது. பெரும்பாக்கம் ஏரி நிரம்பினால் அதன் உபரி நீர் இந்தியா புல்ஸ் குடியிருப்பு வழியாகத்தான் வெளியேற வேண்டும். ஆனால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிய நிறுவனம் அக்குடியிருப்பைச் சுற்றி சுவர் எழுப்பியதால், வெள்ள நீர் மெயின் ரோட்டுக்கு வந்துவிட்டது. இந்த இடங்களில் எல்லாம் 6 அடி முதல் 10 அடி வரை வெள்ள நீர் தேங்கியிருந்தது.
  • வேளச்சேரியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான போனிக்ஸ் மால் 10 ஏக்கர் அளவிற்கு ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு 100 ஏக்கர் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. ஜெயா-சசி கும்பல் வாங்கியிருக்கும் லுக்ஸ் திரையரங்குகள் இந்த மாலில்தான் அமைந்துள்ளன.
  • பன்னாட்டு கார் கம்பெனியான ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை இரண்டு குளங்களையும், மஹிந்திரா சிட்டி மூன்று குளங்களையும் தூர்த்து அமைந்துள்ளன.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஹுண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.
  • 2006 வரை விளைநிலங்களாகவும் ஏரிகளாகவும், நீர்பிடிப்புப் பகுதியாகவும் இருந்த ஒரகடம் இன்று டெம்லர், பென்ஸ், ரெனோ நிசான் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
  • நிர்வாகத்தின் அலட்சியத்தால் 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துபோன மியாட் மருத்துவமனை மணப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

தனியாருக்குப் பட்டா போடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம்

250 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் பெய்யும் மழைநீருக்கான வடிகாலான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 50 சதுர கிலோமீட்டர் பரப்புக்குத் தண்ணீருடன் பரந்து கிடந்தது. ஆனால், இன்று அச்சதுப்பு நிலம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் வெறும் 4.3 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிக் கிடக்கிறது. இச்சதுப்பு நிலத்தை இரண்டு கூறாகப் பிளந்துகொண்டு இரண்டு முக்கிய சாலைகள் – சோழிங்கநல்லூர்-பல்லாவரம் இணைப்புச் சாலை மற்றும் வேளச்சேரி-தாம்பரம் சாலை – அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள சின்னச் சின்ன மதகுகள் மழை நீரை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்குப் போதுமானவையாக அமையவில்லை. இந்த சாலைகள் அமைக்கப்பட்டதால் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு, அது ரியல் எஸ்டேட் முதலைகளின் ஆக்கிரமிப்புக்குத் திறந்துவிடப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குள்தான் “சென்னை ஒன்” என்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா, சி.டி.எஸ். நிறுவனக் கட்டிடம், காமாட்சி மருத்துவமனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளின் மீது கட்டுமானங்களை அமைப்பதால் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடும் பணிகளைச் செய்யும் மைய அரசு நிறுவனமான தேசியக் கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இச்சதுப்பு நிலத்தின் விளிம்பில்தான் அமைந்திருக்கிறது. இச்சதுப்பு நிலத்தின் வடபகுதியை சென்னை மாநகராட்சி குப்பைக் கூளங்களைக் கொட்டித் தூர்த்துவிட்டது. இதனால் சதுப்பு நிலத்தின் 80 ஹெக்டேர் பரப்பளவு பாழ்பட்டுப் போய்விட்டது. vinavu.com

கருத்துகள் இல்லை: