வியாழன், 7 ஜனவரி, 2016

வடகிழக்கு மாநிலங்களில் 8.0 ரிச்டர்களுக்கு மேல் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்படவாய்ப்பு....நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி :'நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதி யில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இமயமலை அடிவாரத்தில் உள்ள, அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் கூட்டம் நடந்தது. அதில், மலைப்பிரதேச கட்டுமான நிபுணர்களும் பங்கேற்றனர். நில நடுக்கத்தை தாங்கும் சக்தி படைத்த கட்டிடங்களை எப்பொழுது கட்டி எப்பொழுது குடி புகுவது... இனி கட்டும் கட்டிடங்களையாவது ஒழுங்காக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதியில் ஏற்படவுள்ள அதிபயங்கர நிலநடுக்கம் குறித்தும், அதை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இமயமலை பகுதிகளில்...
இதுதொடர்பாக, மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் சந்தோஷ் குமார் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக, இமயமலை பகுதியில் அமைந்துள்ள, சிக்கிம் மற்றும் மணிப்பூரிலும், நம் அண்டை நாடான நேபாளத்திலும் கடுமையானபூகம்பம் ஏற்பட்டது.நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின், நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதிகளில், நிலநடுக்க அபாயம் அதிகரித்துள்ளது.

அருகருகே உள்ள, நேபாளம், மியான்மர் மற்றும் இந்தியாவின் புவி தகடுகள் (பிளேட்ஸ்) ஒன்றுடன் ஒன்று மோதும் போது, இமயமலை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள், பீஹார், உ.பி., தலைநகர் டில்லி வரை நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. நிலநடுக்க பாதிப்பு அதிக முள்ள பிரிவு, 4ல், டில்லி உள்ளது. வட கிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள், பீஹார்,உத்தரகண்ட்,இமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், குஜராத் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், நிலநடுக்க பேராபத்து நிறைந்த பிரிவு, 5ல் உள்ளன. இப்பகுதிகளில், ரிக்டர் அளவில், 8.0 புள்ளிகளுக்கு மேல், நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள, இந்த

பகுதிகளில், தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்சேதம் அதிகம் இருக்கும்.

கட்டட விதிமுறை:
இதுகுறித்த எச்சரிக்கையை, அனைத்து மலை பிரதேச மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்திற்கும் பொதுவான கட்டட விதிமுறையை ஏற்படுத்தும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இமயமலை பகுதியின் புவித்தகடு இண்டோ - பர்மீஸ் தகடுகளுடன் மோதும் போது, பயங்கர நிலநடுக்கம் ஏற்படும். அதன் விளைவுகள் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: