செவ்வாய், 22 செப்டம்பர், 2015

சென்னை ஐஐடி-யில் ஆந்திர மாணவர் தற்கொலை! Telugu student commits suicide in IIT Chennai.


23 வயதான ஐஐடி-மெட்ராஸ் மாணவர் என்.நாகேந்திர குமார் ரெட்டி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த என்.நாகேந்திர குமார் ரெட்டி, எம்.டெக் 2-ம் ஆண்டு மாணவராவார். இவர் தனது சொந்த ஊருக்குச் சென்று திரும்பிய பிறகு இந்த துயரமான முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். மணப்பாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் நிதியுதவியில் இவர் ஐஐடி-யில் படித்து வந்தார். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய இவர் தனது விடுதி அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து இவரது சகமாணவர்களுக்கு சந்தேகம் வர நாகேந்திர குமார் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.


உடனே போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் அவரது லேப்-டாப்-ஐ கைப்பற்றினர். தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தற்கொலைக் குறிப்பும் எதுவும் காணப்படவில்லை.

ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி இது குறித்து வெளியிட்டுள்ள குறிப்பில், “இவரது இந்த முடிவு பெற்றோருக்கு துரதிர்ஷ்டவசமான, ஈடுசெய்ய முடியாத இழப்பு. போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. அவரது பெற்றோருக்கு தகவல் அனுப்பப் பட்டது. இவரது தந்தை நாராயண ரெட்டி கடப்பா மாவட்டம், ராயசோதி தாலுக்காவைச் சேர்ந்த விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது. hindu.tamil.com

கருத்துகள் இல்லை: