திங்கள், 21 செப்டம்பர், 2015

அட்டாக் பாண்டி இன்று மும்பையில் கைது! வழக்கில் அழகிரி ஸ்டாலின் பெயர்கள் சேர்க்கப்படுமா? பொட்டு சுரேஷ் கொலை வழக்கு....

பொட்டு சுரேஷ் கொலைவழக்கில் இரண்டரை ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மதுரை சேர்ந்த அட்டாக் பாண்டி இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். மு.க.அழகிரியின் நண்பரான பொட்டு சுரேஷ்,கடந்த 2013ம் ஆண்டு அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸ{க்கு தெரியவர, அவர்கள் இருவரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
~அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார்; நாங்கள் முந்திக் கொண்டோம்| என்று வாக்குமூலம் கூறிய இவர்கள், கொலைக்கு முன் சென்னையில் மு.க.ஸ்டாலினை அட்டாக் பாண்டி சந்தித்ததாகவும், தொடர்ந்து, அழகிரி மகன் தயாநிதி அட்டாக் பாண்டியை சந்தித்ததாகவும் கூறியிருந்தனர்.
எனவே, இந்த வழக்கில் ஸ்டாலின் அல்லது அழகிரியின் பெயர் சேர்க்கப்படுமா என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. இறுதியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்த போலீஸார், 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவான அட்டாக் பாண்டியை வெளியே கொண்டு வரும் நோக்கில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், அவரது சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கிய போலீஸ், கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்தது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அட்டாக் பாண்டி 4 முறை முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் தமிழக காவல் துறையினர் இன்று மும்பையில் அட்டாக் பாண்டியை கைது செய்தனர்  tamilantelevision.com

கருத்துகள் இல்லை: