புதன், 23 செப்டம்பர், 2015

இந்தியா ஆதரிக்காது? நேபாளின் புதிய அரசியல் சட்டம் குறித்து நேபாள ஊடகங்கள் இந்தியா மீது பாய்ச்சல்!


நேபாளத்தில் புதிய அரசியல் சட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து பிரதமர், சுஷில் கொய்ராலா, ஐநா பொதுச்சபையில் உரை நிகழ்த்த வைத்திருந்த திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக நேபாளத்தில் தெற்குப் பகுதி சமவெளிப் பிரதேசங்களில் வெடித்த வன்முறை கலந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் அண்டை நாடான இந்தியா இந்த நெருக்கடி குறித்து தனது கவலைகளை வெளியிட்டு, நேபாள அரசியல் தலைவர்கள் கருத்தொற்றுமையை எட்டவேண்டும் என்று கோரியிருக்கிறது.
நேபாள மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த சமவெளிப் பகுதியில் வாழ்கின்றனர்.

நேபாளத்தின் புதிய மாகாண எல்லைகள் தங்களுக்கு எதிரான பாரபட்சத்துக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் கூறி அதை எதிர்க்கின்றனர். இந்தியா வரம்பு மீறக்கூடாது -- நேபாள ஊடகங்கள் இதனிடையே, நேபாள நெருக்கடி குறித்து இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கள் , நேபாள ஊடங்களாலும் , ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களாலும் விமர்சிக்கப்பட்டுவருகின்றன.
நேபாளத்துக்கான இந்தியத் தூதரை, இந்தியா, திங்கட்கிழமை இந்தியாவுக்கு ஆலோசனைகளுக்காக வருமாறு உத்தரவிட்டதிலிருந்து, நேபாள பத்திரிகைகள் இந்தியாவை விமர்சித்து வருகின்றன. இந்தியா நேபாள விவகாரங்களில் தலையிடுவதாக அவை கூறிவருகின்றன.
நேபாள அரசியல் சட்டத்தை உருவாக்குகையில், நிச்சயமாக, பெரும் பிரச்சனைகள் நாட்டில் எழுந்திருக்கின்றன ஆனால் அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டியது நாங்கள்தான்" என்று எழுதியிருக்கிறது, நேபாளத்தின் பிரதான பத்திரிகையான, காந்திபூர்.
"ஒரு அண்டை நாடு இந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பதோ அல்லது அந்த நாட்டை நாம் நமது உள்நாட்டுப் பிரச்சனைகளை தீர்க்க அழைப்பதோ ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல" என்று அது மேலும் கூறியது.
"டில்லி, அதன் நோக்கங்களுக்காக , தாண்டக்கூடாத எல்லையை தாண்டாமல் இருப்பது நல்லது. அப்படிச் செய்தால் அது ஒரு சிக்கலான நிலையில் தன்னை இருத்திக்கொள்வதுடன், சில கட்சிகள் மற்றும் பிளந்து கிடக்கும் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுடன் அதற்குள்ள செல்வாக்கை அது இழந்துவிடும்" , என்று எழுதுகிறது மற்றொரு நேபாள பத்திரிகையான காட்மாண்டு போஸ்ட்.
மற்றொரு பத்திரிகையான, மை ரிப்பப்ளிக்கா, நேபாளத்தின் முன்னால் ராஜதந்திரிகள் எப்படி டில்லியின் கருத்துக்களை "பொருத்தமற்றதாக" பார்க்கிறார்கள் என்ற கட்டுரை ஒன்றை பிரசுரித்திருக்கிறது. ட்விட்டரில் சீற்றம் அண்டை நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா மேற்கொண்டால், அது சர்வதேச சமுதாயத்துக்கு தவறான ஒரு செய்தியைத் தந்துவிடும், என்று அமெரிக்காவுக்கான முன்னாள் நேபாளத் தூதர் ஷங்கர் ஷர்மா கூறுவதாக அந்தப்பத்திரிகை கூறுகிறது.
தெ ரைசிங் நேபாள் என்ற பத்திரிகை, " ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா புதிய அரசியல் சட்டத்தை ஆதரிக்காதது இந்தியாவை ஒட்டி அமைந்திருக்கும் தெராய் பிரதேசத்தில் வன்செயல்களைக் கிளப்பும் என்று பலர் அஞ்சுகிறார்கள்.
நேபாளத்தில் ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இந்தியா குறித்து ட்விட்டர் மூலம் கடுமையான விமர்சனங்களை எழுதிவருகிறார்கள். செவ்வாய்க்கிழமை பின்னேரம் வரை, ட்விட்டரில் 180,000 ட்வீட்டுகள் இந்தப் பிரச்சனை குறித்து அனுப்பப்பட்டிருக்கின்றன.bbc.tamil.com

கருத்துகள் இல்லை: