திங்கள், 21 செப்டம்பர், 2015

ஸ்டாலின்:மதுவிலக்கு நிச்சயம்...திமுக சொல்வதை செய்யும் என்று மக்களுக்கு தெரியும்! நமக்கு நாமே.....


தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  "நமக்கு நாமே" பயணத்தை தொடங்கி இன்று கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று அனைத்து தரப்பட்ட மக்களையும் சந்தித்தார். நமக்கு நாமே’ தொடக்க நிகழ்ச்சியாக அய்யன் திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணி மண்டபம், காந்தி மண்டபம், பேரறிஞர் அண்ணா சிலை ஆகிய இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அங்கு சுற்றுலா பயணிகள், கடைகாரர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினார்.குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மகளிர்கள் பங்கேற்று, "திமுக ஆட்சியில் கிடைத்த எந்த நலத்திட்டமும் தற்போது கிடைக்கப் பெறவில்லை. நியாய விலைக் கடையில் கூட எந்த பொருளும் முறையாக வழங்குவதில்லை. பேருந்து வசதிகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளும் பராமரிப்பு இல்லை" என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, "இந்த நிலை மாற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தனர். "நீங்கள் விரும்பும் மாற்றத்தை நாம் அனைவரும் சேர்ந்து தான் ஏற்படுத்த முடியும். அதற்காகத் தான் "நமக்கு நாமே" பயணம் என்றும்’’ மு.க.ஸ்டாலின்  விளக்கினார். 

பிறகு அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகத்தின் உறுப்புக் கல்லூரியில் இருந்த மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள   நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பிறகு சாலை ஓரம் நிற்கும் மக்களிடம்,"நமக்கமான விடியலை மீட்க இன்னும் 237 நாட்களே உள்ளது. அனைவரும் விழிப்போடு செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுவிட்டு பயணத்தை மேற்கொண்டார். ஆட்டோ ஒட்டுநனர்களின் குறைகளை கேட்ட மு.க. ஸ்டாலின்  ஆட்டோவில் அமர்ந்தும், பயணித்தும் "நமக்கு நாமே"பயணத்தின் நோக்கத்தை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உணர்த்தினர். அங்கிருந்து நாகர்கோயிலை அடுத்த கோட்டாறில் உள்ள வணிகர் சங்க மாவட்ட அலுவலகத்திற்கு சென்றார். அதன் தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், "வணிகவரி சட்டத்தினை எளிமைபடுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். "நிச்சயம் அவற்றை நிறைவேற்றுவேன்" என உறுதி அளித்து விட்டு, அருகிலுள்ள புனித சேவியர் திருசபைக்கு சென்றார். அங்கு பங்குதந்தை மார்கோனி மற்றும் குணபால் ஆராச்சி ஆகியோரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

"நமக்கு நாமே" பயணத்தில், நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கா மங்கலத்தில் தென்னை விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஸ்டாலின், "போராட்டம் நடத்தாமல், ஆர்ப்பாட்டம் நடத்தாமல், உண்ணாவிரதம் கூட இருக்காமல் விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கையான 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தவர் தலைவர் கலைஞர். ஆனால் இன்றைக்கு எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், விவசாயிகளை மதிக்காத அரசாக அதிமுக அரசு இருக்கிறது" எனக் கவலைப்பட்டார். "நாளை ஆட்சி மாறும் என்ற நம்பிக்கையிலேயே நீங்கள் இங்கே வந்துருக்கிறீர்கள்.

 நிச்சயம் அந்த நம்பிக்கை வெற்றி பெறும். அந்த நம்பிக்கை வெற்றி பெறுவதற்கான முயற்சியை நீங்களும் மேற்கொள்ள வேண்டும்" என  மு.க.ஸ்டாலின் தென்னை விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். அதில் மிகவும் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், "இன்று எங்களுடைய கொட்டகைக்கு வருகை தந்துருக்கீறீர்கள், நிச்சயம் நாளை கோட்டைக்கு செல்வீர்கள்" என்று வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் விவசாயிகளின் தென்னை மரங்களை எல்லாம் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு விட்டு அங்கிருந்து மணவாளக்குறிச்சிக்குப் புறப்பட்டார். அங்கு வந்து சேர்ந்தும் கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் , "மது விலக்கு கொண்டுவருவோம் என்று கலைஞர் அறிவித்ததால்தான் அந்த கோரிக்கை தீவிரம் அடைந்தது. சொன்னதை செய்தவர் கலைஞர் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்த வகையில் நிச்சயம் நீங்கள் ஆதரவளித்தால், கலைஞர் தலைமையிலான அரசு மதுவிலக்கை கொண்டுவரும். கலைஞர் அடிக்கடி கூறுவது போல், இது ஆட்சி அல்ல காட்சி. அதுவும் காணொலி காட்சி! இதே மாவட்டத்தில் மதுவிலக்கு போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த தியாகி சசிபெருமாள் அவர்களுடைய அகால மரணத்திற்கு கூட ஜெயலலிதாவால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. சசிபெருமாள் என்ன திமுகவா? அவர் காந்தியவாதி தானே" என்று கேள்வி எழுப்பி விட்டு, "மதுக்கடைகள் திறப்பது மட்டும் தான் சாதனை என்கிற வகையில் ஒரு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் நான் உங்களை எல்லாம் தேடி வந்திருக்கிறேன். நிச்சயம் இந்த மாற்றத்தை தருவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

 பிறகு அங்கிருந்து குளச்சல் துறைமுகத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மீனவர்களையும், மீனவ தாய்மார்களையும் சந்தித்து  மு.க.ஸ்டாலின் உரையாடினார். அப்போது அங்கு கூடியிருந்த பெருவாரியான தாய்மார்கள் "தங்களுக்கு வழங்க வேண்டிய பட்டா இந்த ஆட்சியில் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட துறைமுக திட்ட பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது" என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். அதற்கு பதிலளித்த  மு.க. ஸ்டாலின் ," இதை எங்களால் தற்போது செய்ய முடியாது. அதற்கான இடத்தில் நாங்கள் இல்லை, அந்த இடத்திற்கு எங்களை மாற்றுங்கள். உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களாக நாங்கள் பணியாற்றுவோம்" என உறுதி அளித்தார்.

குளச்சல் துறைமுகத்தைத் தொடர்ந்து குமரி மாவட்ட மீன்பிடிப்பவர்கள் நல சங்கத்திற்குச் சென்று அவர்களின் கோரிக்கையை  மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது பேசிய மீனவ சங்க பிரதிநிதிகள், "திமுக ஆட்சியில் தான் குமரி மாவட்டத்தில் நீலப்புரட்சி ஏற்பட்டது. தற்போது நாங்கள் மீன்பிடிக்க முடியாமலும், பிடித்த மீனை விற்க முடியாமலும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம். குறிப்பாக தங்களுக்கு வாழ்வாதாரமான டீசல் மானியத்தைக் கூட அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது" என்று தங்கள் வேதனையை தெரிவித்தனர். "நிச்சயம் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம். இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். நீங்கள் ஆதரவு தர வேண்டும்" என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

 "நமக்கு நாமே" திட்டத்தின் மதிய உணவு நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர்,கிளை நிர்வாகிகளுடன் ஸ்டாலின் மதிய உணவு உட்கொண்டார். 


                          

கருத்துகள் இல்லை: