புதன், 23 செப்டம்பர், 2015

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2) சாதனா முதலைமைச்சரின் மனைவி .....

யோகேஷ் உப்ரித்எம்.பி.பி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்.டி., எம்.எஸ்.) நுழைவுத் தேர்வுகளில் மோசடிகள் செய்து, இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளை ஒதுக்கிக் கொடுப்பது வியாபம் ஊழலில் கேந்திரமான புள்ளியாக இருந்திருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மோசடிகள், முன்னாபாய் ஸ்டைல், ஆள்மாறாட்டம், ரயில் இன்ஜின்-பெட்டி முறை, விடைத்தாள்களைத் திருத்துவது – என நான்கு வழிகளில் நடைபெற்றிருப்பதைக் கடந்த இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் நடத்திய ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, சௌஹான் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்து கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்பட்டதை வாக்குமூலமாக அளித்திருக்கும் யோகேஷ் உப்ரித் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாட்கள் இடைத்தரகர்களுக்குக் கசியவிடப்படும். அவர்கள் அதனைப் “புதிர்களை விடுவிப்பவர்களிடம்” எடுத்துச் செல்வார்கள். நுழைவுத் தேர்வு வினாக்களுக்கு அவர்கள் கூறும் பதில்கள் “வாஸ் ரெக்கார்டரில்” பதிவு செயப்பட்டு, அவை இலஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் – இதுதான் முன்னாபாய் ஸ்டைல்.
இதைப் படிக்கும் வாசகர்களுக்கு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” திரைப்படத்தில் கதா நாயகன் கமல்ஹாசன் தேர்வு எழுதும் காட்சி நினைவுக்கு வந்தால், உங்கள் நினைவுத்திறன் அபாரம்தான். அத்திரைப்படத்தின் மூலமான இந்தி திரைப்படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸையொற்றி தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது, ஆள்மாறாட்டம். இலஞ்சம் கொடுத்த மாணவனுக்குப் பதிலாக வேறு ஒருவரை நுழைவு தேர்வு எழுத வைத்து, அதன் மூலம் இலஞ்சம் கொடுத்த மாணவனை வெற்றி பெறச் செய்து மருத்துவக் கல்லூரியில் நுழைத்துவிடுவதுதான் ஆள்மாறாட்ட முறை. இதற்கு ஏற்ப நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் மோசடிகள் செயப்பட்டிருக்கும்; தேர்வுக் கண்காணிப்பாளர்களும் கவனிக்கப்பட்டிருப்பார்கள். இளம் மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இந்த ஆள்மாறாட்ட மோசடியில் தேர்வு எழுத பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ள சிறப்பு அதிரடிப் படை, ஏறத்தாழ 300 பேர் இந்த மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது.
வியாபம் ஊழலில் மிகப்பெரும் மோசடித்தனமானது ரயில் இன்ஜின்-பெட்டி முறை. இதன்படி, நுழைவுத் தேர்வு நடைபெறும்பொழுது இலஞ்சம் கொடுத்த இரண்டு மாணவர்களுக்கு நடுவில் திறமைமிக்க “புதிர் விடுவிப்பவர்” மூன்றாவது மாணவராக அமர வைக்கப்படுவார். இதற்கு ஏற்ப அம்மூவருக்கும் தேர்வு எண்ணும், தேர்வு மையமும், தேர்வு அறையும் ஒதுக்கப்படும். தனது அருகில் அமர்ந்துள்ள மற்ற இருவருக்கும் விடைகளைச் சொல்லிக் கொடுத்து, அவர்களை எழுத வைப்பதுதான் இந்த மூன்றாவது நபரின் வேலை. நுழைவுத் தேர்வில் இந்த மூன்று பேரும் தேர்ச்சி பெறுவார்கள். இலஞ்சம் கொடுத்த இரு மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும். அந்த ‘மூன்றாவது மாணவனுக்கு’த் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும். அந்த மாணவன் தனியார் கல்லூரியில் சேராமல் ஒதுக்கப்பட்ட இடத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவான். பிறகு அந்த இடம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் கொழுத்த பணத்திற்கு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் விற்கப்படும்.
வியாபம் ஊழலை இயக்கியவர்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கும் பணத்தை வாரிக் கொடுக்கும் காமதேனுவாக இந்த ரயில் இன்ஜின்-பெட்டி மோசடி இருந்து வந்திருக்கிறது. ஏறத்தாழ 1,200 மாணவர்கள் இந்த மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது, சிறப்பு அதிரடிப் படை.
விடைத்தாளைத் திருத்துவது நான்காவது வழி. இதன்படி, இலஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் விடைத்தாளில் 10 சதவீதக் கேள்விகளுக்கு மட்டும் விடைகளைக் குறிக்குமாறு சொல்லப்படும். மீதமுள்ள வினாக்களுக்கான விடைகளைத் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாளில் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை இடைத்தரகர்கள் செய்து வைத்திருப்பார்கள். இந்த மோசடியின் மூலம் ஏறத்தாழ 50 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது, சிறப்பு அதிரடிப் படை.
ம.பி. மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்
வியாபம் ஊழலில் தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்த போதும், ஆளுநர் என்ற அரசியல் சாசன தகுதியைப் பயன்படுத்திக் கொண்டு வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்துக் கொண்ட ம.பி. மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்
மத்தியப் பிரதேசத்தில் தற்பொழுது ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளும் 16 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், 43 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும், 42 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்குமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வை வியாபமும், வெளிநாட்டு வாழ் இந்தியர் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான நுழைவுத் தேர்வை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சங்கமும் நடத்தி வருகின்றன. ஆனால், இந்த இரண்டு நுழைவுத் தேர்வுகளும் பெயருக்குத்தான் நடைபெறுகின்றன என்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் ஒவ்வொர் ஆண்டும் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருவதும் ஊரறிந்த இரகசியம். ம.பி. போலீசாரால் சமீபத்தில் கைது செயப்பட்டுள்ள யோகேஷ் உப்ரித் என்ற கிழட்டு நரி அளித்துள்ள வாக்குமூலம் இந்த இரகசியத்தைப் போட்டு உடைத்திருக்கிறது.
75 வயதான உப்ரித் சாதாரண நபரல்ல. ம.பி. அரசு நிறுவனமான வியாபத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்த அவர், தான் ஓய்வுபெற்ற பிறகு தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திவரும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சேர்க்கை தேர்வின் (Dental and Medical Admission Test) கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பதவியேற்றுக் கொண்டார். தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமே உப்ரித்தை வேண்டி வரவழைத்து இந்தப் பதவியில் அமர வைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உப்ரித்தும் தனது நன்றியைக் காட்டும் விதமாக, வியாபத்தில் நடந்துவந்த மோசடிகள் அனைத்தையும் இறக்குமதி செய்து, தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்களின் கஜானாவை கரன்சி நோட்டுக்களால் நிரம்ப வைத்தார். உப்ரித்தின் கைது, அரசு நிறுவனமான வியாபத்திற்கும், தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்களுக்கும் இடையே நிலவிவரும் நெருக்கமான கிரிமினல் உறவை அம்பலத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.
“தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்தும் நுழைவுத் தேர்வு அதன் தொடக்கம் தொட்டே மோசடியானது என்பதையும் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் விற்பனை செயப்படுவதையும்” வாக்குமூலமாக அளித்துள்ள உப்ரித், “இலஞ்சம் கொடுத்து நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள் விடைத்தாளை முழுமையாகப் பூர்த்தி செயமாட்டார்கள். தேர்வு முடிந்த பிறகு அவர்களது விடைத்தாட்களில் சரியான விடைகள் பூர்த்தி செயப்பட்டு, அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என நடந்த மோசடிகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதோடு, “இம்மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக 2006-க்குப் பிறகு ம.பி. அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஒவ்வொருவருக்கும் 10 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என்ற உண்மையையும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார், உப்ரித்.
உப்ரித்தின் வாக்குமூலத்தின்படி 58 சதவீத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செயப்பட்டுள்ளதென்றால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் இந்த விற்பனை மூலம் சட்டவிரோதமாக அடித்திருக்கும் கொள்ளை ஏறத்தாழ 10,000 கோடி ரூபாயைத் தாண்டக்கூடும் எனக் குறிப்பிடுகிறார், வியாபம் ஊழலை அம்பலப்படுத்திய மருத்துவர் ஆனந்த் ராய்.
தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்ட 58 சதவீத இடங்கள் ஏல முறையில் விற்பனை செயப்பட்டுள்ளன என்றால், 42 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்கு வியாபம் அமைப்பே தரகனாக வேலை பார்த்து வந்திருக்கிறது. குறிப்பாக, வியாபம் நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள மோசடிகளுள் ஒன்றான ரயில் இன்ஜின்-பெட்டி முறை, அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் கைப்பற்றிக் கொண்டு விற்பனை செய்வதற்கு ஏற்றவாறே உருவாக்கப்பட்டிருக்கிறது.
ம.பி. ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகள் ஷைலேஷ் யாதவ்.
வியாபம் ஊழலில் தொடர்பு இருப்பது அம்பலமான பிறகு மர்மமான முறையில் இறந்துபோன ம.பி. ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகள் ஷைலேஷ் யாதவ்.
“கடந்த 2010-11 -ம் ஆண்டு தொடங்கி 2012-13 -ம் ஆண்டு முடியவுள்ள மூன்றாண்டுகளில் மட்டும் அரசு ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட 721 மாணவர்கள் கடைசி நாள்வரை கல்லூரியில் சேராமல், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள செப்.30 அன்று தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இப்படித் திரும்ப ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு இடமும் ஒரு கோடி ரூபாய்க்கு நிர்வாகத்தால் விற்கப்பட்டுள்ளதாகக் கொண்டால், அந்த மூன்றாண்டுகளில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்குக் கிடைத்த வருமானம் 721 கோடி ரூபாயாக இருக்கும்” என ம.பி.அரசின் சேர்க்கை மற்றும் கல்லூரிக் கட்டண ஒழுங்குமுறை கமிட்டி இம்முறைகேடு பற்றி அறிக்கை அளித்திருக்கிறது.
உப்ரித் கைது செயப்பட்டிருந்தாலும், வியாபத்தோடு சேர்ந்தும் தனியாகவும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நடத்தியிருக்கும் மோசடிகளும் கிரிமினல்தனங்களும் தனியொரு வழக்காக விசாரிக்கப்படவில்லை. வியாபம் நடத்திய தேர்வுகளில் நடந்துள்ள மோசடிகள் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திய “டிமாட்” தேர்வுகளில் (Dental and Medical Admission Test – DMAT) நடந்துள்ள மோசடிகளையும் உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கோரப்பட்ட மனு மீதான விசாரணையின்பொழுது, “டிமாட் தேர்வைத் தனியார் கல்லூரி அதிபர்கள்தான் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் பொதுஊழியர்கள் கிடையாது. எனவே, இந்த வழக்கை இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கவே முடியாது” என வாதிட்டுள்ளார், மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி.
0000
சாதனா சிங்
ம.பி முதலமைச்சர் சிவராஜ் சௌஹானின் மனைவி என்பதாலேயே, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படாமல் தப்பவைக்கப்பட்டுள்ள சாதனா சிங்
வியாபத்தில் நடந்துள்ள ஊழலும் மோசடிகளும், டிமாட் தேர்வுகளில் நடந்துள்ள ஊழலும் மோசடிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வியாபம் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கு அப்பால், ஆசிரியர், போக்குவரத்து ஊழியர், உணவுப் பொருள் தரக் கட்டுப்பாட்டாளர், போலீசு துணை ஆவாளர், வனப் பாதுகாவலர் – எனப் பல்வேறு நிலை அரசுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஆறாண்டுகளில் 81 போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்கிறது. ஆசிரியர் வேலைக்கு மூன்று முதல் ஏழு இலட்ச ரூபாய் வரையிலும்; போக்குவரத்துத் துறையில் சேர்வதற்கு எட்டு முதல் 10 இலட்ச ரூபாய் வரையிலும்; போலீசு துணை ஆவாளர் பதவிக்கு பதினைந்து இலட்ச ரூபாய் வரையிலும் என, பதவிகளின் “வெயிட்’’டுக்குத் தக்கவாறு இத்தேர்வுகளில் இலஞ்சம் விளையாடியிருப்பதும்; அம்மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவ்; அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான்; ஆர்.எஸ்.எஸ்.-ன் முன்னாள் தலைவர் (சார்சங்க்சாலக்) கே.எஸ்.சுதர்சன்; ஆர்.எஸ்.எஸ்.-ன் கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி; பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அக்கட்சியின் ‘தேசிய’த் தலைவர்கள் மற்றும் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் – என அதிகாரத்திலுள்ள ஒரு பெரும் பட்டாளமே இந்த இரண்டு ஊழல்களிலும் (வியாபம் மற்றும் டிமாட்) கை நனைத்திருப்பதும், மருத்துவ சீட்டுகளையும், அரசுப் பதவிகளையும் பெற்று நேரடியாகப் பலன் அடைந்திருப்பதும் தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.
  • ம.பி. முதலமைச்சர் சௌஹான் மனைவியின் தங்கை மகள் ரேகா சிங் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரின் வாரிசுகள் தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திய நுழைவுத் தேர்வுகளில் ‘வெற்றி’ பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதை காங்கிரசு கட்சியின் ம.பி. மாநிலத் தலைவர் அருண் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக அம்பலப்படுத்தியிருக்கிறார். சௌஹானின் நெருங்கிய உறவினரும் ம.பி.மாநில பிற்பட்டோர் கமிசன் தலைவருமான குலாப் சிங் கிராரின் மகன் 2011-ம் ஆண்டு நடந்த முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்த கிரார் இப்பொழுது வியாபம் ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ.ஆல் அறிவிக்கப்பட்டுள்ளார். ம.பி. மாநில போலீசு டி.ஐ.ஜி. ஆர்.கே.ஷிவ்ஹரே, வியாபம் ஊழல் வழக்கில் தான் கைது செயப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தனது மகனுக்கும் மருமகளுக்கும் கிடைத்த மருத்துவக் கல்லூரி இடங்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.
  • மத்தியப் பிரதேச அரசின் எடை மற்றும் அளவீட்டுத் துறையில் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிஹிர் குமார் சௌத்ரி, ஆர்.எஸ்.எஸ். இன் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சனின் எடுபிடியாக இருந்தவர். வியாபம் ஊழல் தொடர்பாக ம.பி. போலீசால் மிஹிர் குமார் சௌத்ரி கைது செயப்பட்டதையடுத்து, “விடைத்தாளில் எந்த பதிலையும் குறிக்காமல் கொடுத்துவிடு; உனக்கு வேலை கிடைத்துவிடும்” என சுதர்சன் தன்னிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்தார். வியாபம் அமைப்பில் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்து கைது செயப்பட்டுள்ள பங்கஜ் திரிவேதியும், உயர்கல்வித் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் ஷர்மாவின் தனி அதிகாரியாக இருந்து கைது செயப்பட்டுள்ள ஓ.பி.ஷுக்லாவும், மிஹிர் குமார் சௌத்ரிக்கு கே.எஸ். சுதர்சன் சிபாரிசு செய்ததை உறுதி செய்து சிறப்பு அதிரடிப் படையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
  • 2012-ம் ஆண்டில் நடத்தப்பட்ட வனக் காவலர் தேர்வில் கலந்துகொண்ட குறிப்பிட்ட ஐந்து விண்ணப்பதாரர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதற்காக ம.பி. ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், அந்த ஐந்து பேரிடமிருந்து தலா மூன்று இலட்ச ரூபாய் பெற்றதாக சிறப்பு அதிரடிப் படை குற்றஞ்சுமத்தி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. எனினும், ஆளுநராக இருப்பவரை விசாரணை செயும் அதிகாரம் சிறப்பு அதிரடிப் படைக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டு, ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் விசாரிக்கப்படுவதற்குத் தடை விதித்தது, ம.பி. உயர்நீதி மன்றம்.
  • ஒப்பந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்பட்ட தேர்வில் குறிப்பிட்ட பத்து விண்ணப்பதாரர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதற்காக அவர்களிடமிருந்து 30 இலட்ச ரூபாய் இலஞ்சம் பெற்றதாக ஆளுநரின் மகன் ஷைலேஷ் யாதவ் மீது சிறப்பு அதிரடிப் படை குற்றஞ்சுமத்தியிருந்தது. இது தொடர்பாக ஷைலேஷ் யாதவ் விசாரிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவர் மர்மமான முறையில் லக்னோவில் உள்ள அரசு பங்களாவில் இறந்து போனார். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் வெடித்து ஷைலேஷ் யாதவ் இறந்து போனதாகக் கூறப்பட்டு, அவரது மரணம் இயற்கையான மரணமாகச் சித்தரிக்கப்பட்டது.
  • ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன்
    வியாபம் நிறுவனத்தில் நடந்த ஊழல்-மோசடிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தனது எடுபிடியாக இருந்து வந்த மிஹிர் குமார் சௌத்ரிக்கு அரசு வேலை வாங்கித் தந்த ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன்
    ம.பி. முதலமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான்தான் 2008 முதல் 2012 வரையில் மருத்துவக் கல்வித் துறையின் தலைவராகவும் இருந்தார். அந்தக் கட்டத்தில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டது. சௌஹான் மருத்துவக் கல்வி தலைவராக இருந்த சமயத்தில்தான் அவரது மனைவியின் தங்கை மகள் ரேகா சிங்கிற்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது.
சௌஹானின் மனைவி சாதனா சிங் போக்குவரத்து போலீசு தேர்வில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த 19 பேரைத் தேர்ச்சி பெறச் செயக் கூறி, வியாபம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதற்கான கைபேசி உரையாடல் ஆதாரங்கள் இருப்பதை காங்கிரசு கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. வியாபம் அலுவலகத்தில் இருந்த கணினிப் பதிவுகளை ஆராந்து உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப் படையால் நியமிக்கப்பட்ட பிரசாந்த் பாண்டே, முதலமைச்சர் சௌஹான் 64 பேருக்கு சிபாரிசு செய்திருப்பதற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த சிபாரிசு தொடர்பான விவரங்களும் ஆதாரங்களும் காங்கிரசு தலைவர் திக்விஜய் சிங் மூலம் ம.பி. மாநில உயர்நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் சௌஹானின் தனி உதவியாளராக இருந்த பிரேம் பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப மருத்துவர் அஜய் மேத்தா இருவருக்கும் வியாபம் ஊழலில் பங்கிருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது. பிரேம் பிரசாத் யாதவ் முதலமைச்சர் அலுவலக தனி அதிகாரி என்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு மருத்துவக் கல்லூரி இடத்தை வாங்கியிருப்பதோடு, இலஞ்சம் வாங்கிக்கொண்டு பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டியிருக்கிறது, சிறப்பு அதிரடிப் படை.
இவர்கள் தவிர, ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் தனி உதவியாளராக இருந்த தன்ராஜ் யாதவ்; மத்திய அமைச்சர்கள் உமா பாரதி, தர்மேந்திர பிரதான்; பா.ஜ.க.வின் தேசியத் துணைத் தலைவர் பிரபாத் ஜா; அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, அக்கட்சியின் எம்.பி. அனில் தவே, அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் விக்ரம் வர்மா மற்றும் அவரது மனைவியும் ம.பி.மாநில சட்டமன்ற உறுப்பினருமான நீனா வர்மா; ஆர்.எஸ்.எஸ். கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி; ஆர்.எஸ்.எஸ்.-க்கு மிகவும் நெருக்கமான எல்.என். மருத்துவக் கல்லூரி இயக்குநர் அனுபம் சௌக்ஸி, அரபிந்தோ மருத்துவக் கல்லூரி அதிபர் வினோத் பண்டாரி, சாகர் கல்விக் குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் அகர்வால், துருபா கல்விக் குழுமத்தின் அதிபர் சுனில் தாதிர் உள்ளிட்ட பலருக்கும் இந்த ஊழல்களில் நெருங்கிய தொடர்பு இருப்பது ஒவ்வொரு நாளும் அம்பலமாகிவருகிறது.
(தொடரும்) vinavu.com

கருத்துகள் இல்லை: