திங்கள், 21 செப்டம்பர், 2015

Alif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்


கேரளாவில் 2015 பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படத்தை நேற்று இரவு DVD யில் பார்த்தேன்.
maxresdefault
‘முகமது நபியிடம் ஒருவர் கேட்டார், நான் வாழ்க்கையில் அதிகம் மதிக்கப்பட வேண்டியது யாரை? அதற்கு நபிகள் நாயகம் தாயை என்றார். ழூன்று முறை கேட்டபோதும் தாயை தான் என்றார். நான்காவது முறை தான் தந்தையை என்றார்’ இப்படியான பின்னணி குரலோடு துவங்கிறது படம்.
‘தலாக்’ என்கிற திருமண முறிவால் பாதிக்கப்படுகிற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை முஸ்லிம் தாய்மார்களைக் குறித்துக் கனிவோடும், துணிவோடும் பேசுகிறது படம்.
கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா, பேத்தி என்று நான்கு தலைமுறை பெண்களோடு அவர்களின் துயரங்களோடு நம்மையும் பங்குபெறச் செய்திருக்கிறார் இயக்குநர்
MK முகமத் கோயா. கதை, திரைக்தை, வசனம் இவரே.
‘தலாக்’ என்கிற விவாக ரத்தால் பாதிக்கப்பட்ட பெண், முஸ்லீம்களுக்கான பொதுவான கூட்டத்தில் மதச் சட்டங்கள் குறித்து அறிவுரை சொல்கிறவரை இடைமறித்து, பெண் குரலாய் வெகுண்டு பேசுவதால், அந்த நான்கு இஸ்லாமியப் பெண்களும் இஸ்லாமிய ஆண்களிடம் சந்திக்கிற துயரங்களைத் துணிவோடு சொல்லியிருக்கிறார் இஸ்லாமிய ஆணான இயக்குநர்.
ஒரே மதம், ஒரே இறைவன் இருந்தும் வசதியானவர்க்கும் ஏழைக்கும் இடைவெளியில் இருக்கிற வர்க்க வேறுபாடுகளையும் காட்டியிருக்கிறார்.
தடைகளோடு தனித்து விடபட்ட பெண்களுக்கு ஆதரவாக, ஒரு கம்யுனிஸ்ட் குடும்பம் இருப்பதாகக் காட்டியிருப்பது, இயக்குநரின் மெல்லிய கம்யுனிச ஆதரவை மரியாதையுடன் அடையாளப்படுத்துகிறது.
‘தலாக்’ பெற்ற பெண்ணுக்கு அரசு வேலை கிடைக்கப் பெற்ற பின், நான்கு பெண்களுக்கும் கிடைக்கிற உறுதி, மெல்லிய புன்னகையோடு தன் பேத்தியின் எதிர்கால வாழ்க்கையை வரவேற்கிற கொள்ளுப் பாட்டி. அவர்களோடு நமக்கும் பிறக்கிறது நம்பிக்கை.
வேலைக்குப் போகிற தன் மகளுக்குச் சோறுடன் துவையல் அரைத்து ஊறுகாயுடன் டிபன் பாக்சில் தருகிற தாயின் அன்பில் ஒளிர்கிறது வாழ்க்கை. அதுவரை, கடும் உழைப்பால், குடும்பத்தை மட்டும் அந்தத் தாய் தாங்கவில்லை. இந்தப் படத்தையும் அவர் தான் தாங்கிப் பிடிக்கிறார்.
இறுதியில், மகளைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு, வேலைக்குச் செல்கிறார் அந்தப் பெண். பின்னணியில் கருணையும், நம்பிக்கையையும், அன்பையும் வலியுறுத்தி ஒலிக்கிறது பாடல்.
இவர்கள் இருவருக்கும் எதிரில் பர்தா அணிந்த பெண்கள் கூட்டமாக வருகிறார்கள். புடவையும், பள்ளிச்சீருடையும் அணிந்த இவர்கள், அந்தக்கூட்டத்திற்குள் நுழைந்து எதிர்திசையில் பயணிப்பதுபோல் வருகிற காட்சி தற்செயலானதாக இருந்தாலும், அது கலகத்தின், நம்பிக்கையின் குறியீடாகவே இருக்கிறது.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: