புதன், 23 செப்டம்பர், 2015

வேறு ஜாதி பையனை காதலித்ததால் பேத்தியை கொன்ற ஊர் நாட்டமை! ஆண்டிபாளையம்...

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய 3–வது மகள் ரமணிதேவி (வயது 19).
இவர் காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் மதுரை மாவட்டம் தம்பியார் பட்டியை சேர்ந்த மருத நாயகம் (19) என்பவர் படித்து வந்தார்.
ரமணிதேவியும், மருத நாயகமும் காதலித்து வந்தனர். இந்த விஷயம் ரமணிதேவி வீட்டிற்கு தெரியவந்தது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரமணிதேவியின் தாத்தா வீராசாமி (வயது 66) ஊர் நாட்டாமையாக இருந்து வந்தார். அவரும் ரமணிதேவியை கண்டித்தார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி கல்லூரிக்கு சென்ற ரமணிதேவி வீட்டிற்கு வரவில்லை. காதலன் ஊருக்கு சென்று விட்டார்.

உடனே தாத்தா வீராசாமி மற்றும் உறவினர்கள் ரமணிதேவியை அங்கிருந்து போலீஸ் உதவியுடன் அழைத்து வந்தனர். மருதநாயகத்திற்கு திருமண வயது வராததால் அதை காரணம் காட்டி போலீசார் ரமணிதேவியை அவரிடம் இருந்து பிரித்து கொண்டு வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காதலனை பிரிந்து வந்ததில் இருந்து ரமணிதேவி மிகவும் சோகமாக இருந்தார்.
நேற்று காலை அவர் காதலனுடன் போனில் பேசியது தாத்தா வீராசாமிக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ரமணிதேவியை வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் சோழதரம் போலீசில் சரண் அடைந்தார்.
போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:–
எங்கள் ஊரில் நாங்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நான் ஊர் நாட்டாமையாக இருந்து வந்தேன். ஊரில் நடக்கும் பஞ்சாயத்துக்களை, காதல் விவகாரங்களை நான்தான் தீர்த்து வைப்பேன்.
இந்த நிலையில் என் பேத்தியே காதலில் சிக்கி காதலன் வீட்டுக்கு ஓடி சென்றது எனக்கு பெரிய அவமானமாக இருந்து வந்தது. இதனால் நான் ஊருக்குள் நடமாடுவதையே நிறுத்தி விட்டேன். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருப்பேன். வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கும் செல்வேன்.
காதலனிடம் இருந்து ரமணிதேவியை பிரித்து கூட்டி வந்த பிறகு அவளுக்கு புத்திமதிகளை கூறினேன். நமது ஜாதியின் பெரிய பணக்காரண மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன். வேறு ஜாதி பையனை காதலித்ததை மறந்துவிடு இனி அவனிடம் பேசாதே என்று கூறினேன். ஆனால் அவள் கேட்கவில்லை.
வீட்டில் இருந்த அவள் தொடர்ந்து சோகமாகவே காணப்பட்டாள். சரியாக சாப்பிடுவது இல்லை. நேற்று காலை நான் எனது மகன், மருமகள் 3 பேரும் தோட்டத்துக்கு செல்வதற்கு புறப்பட்டோம். அப்போது வீட்டின் அறையில் அழுது கொண்டு இருந்தாள்.
இதனால் அவளிடம் புத்திமதி சொல்லிவிட்டு தோட்டத்துக்கு சென்றேன். தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போதும் அழுதுகொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து போன் வந்தது. அதை எடுத்து பேசினாள். காதலனுடன்தான் பேசுகிறாள் என கருதினேன்.
அவளிடம் சென்று சத்தம் போட்டேன். நீ காதலனுடன் மீண்டும் பேசினால் உன்னை கொன்று விடுவேன் என்று எச்சரித்தேன். அதற்கு அவள் நீ என்ன என்னை கொல்வது நானே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றாள். மேலும் அவள் என்னை கடுமையாக எதிர்த்து பேசினாள். இதற்கு முன்பு அவள் என்னை ஒருபோதும் எதிர்த்து பேசியது இல்லை. இப்போது எதிர்த்து பேசியதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
நீ தற்கொலை செய்ய வேண்டாம். நானே உன்னை கொலை செய்கிறேன் என்று கூறி தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து வந்தேன். அப்போது வீட்டின் கதவு அருகே அரிவாள் கிடந்தது. அதை கையில் எடுத்தேன். பின்னர் ரமணிதேவியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து அரிவாளால் கழுத்தில் வெட்டினேன். அப்போது கையால் தடுத்தாள் கையில் வெட்டு விழுந்தது. பின்னர் மேலும் வெட்டினேன். அதில் கழுத்தில் வெட்டுபட்டு துடிதுடித்தாள்.
எங்கள் ஊரில் சமீபகாலமாக பல இளம்பெண்கள் இதே போல் காதலில் விழுந்து ஊருக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஒருபாடமாக இருக்கட்டும் என கருதி என் பேத்தி என்றும் பாராமல் கொன்றேன்.
ஆனால் என் பேத்தியை கொலை செய்தது எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தி விட்டது.
எனது மகனுக்கு 3 மகள்கள் அதில் இளையவள்தான் ரமணிதேவி. அவள் மீது நான் மிகவும் பாசமாக இருப்பேன். அவளும் என் மீது அதிக பாசம் காட்டுவாள். எப்போதும் என்னுடனயே இருப்பாள்.
தனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம்தான் கேட்பாள். நான் ஆசையாக வாங்கி கொடுப்பேன். அவள் கேட்டதை வாங்கி கொடுக்க மறுத்தது கிடையாது.
இப்படி ஆசையாக வளர்த்த பேத்தியை கொன்று விட்டேனே என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. எனக்கு ரத்தக்கொதிப்பு நோய் உண்டு. நேற்று என் பேத்தி என்னை எதிர்த்து பேசியதும் ரத்தக்கொதிப்பு அதிகமாகி நான் என்ன செய்கின்றேன் என்றே தெரியாமல் என் பேத்தியை கொன்று விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசில் காவலில் உள்ள வீராசாமி இன்று காலை வரை எந்த உணவும் சாப்பிடவில்லை. போலீஸ் நிலையத்தில் அழுதபடியே இருந்தார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: