வெள்ளி, 3 ஜனவரி, 2014

கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-4) மன்­னர்­களின் ஆடம்­ப­ரத்­தாலும் கோயில்­களை நாள் தோறும் பரா­ம­ரிக்க வேண்­டி­ய­தாலும் கெமர் பேர­ரசின் பொரு­ளா­தார வளம் குன்­றி­யது.


1113 இல் ஆட்­சிக்கு வந்த  இரண்டாம்  சூரி­ய­வர்மன்  இன்று   உலகப் புகழ் பெற்ற பண்டைக் காலத்து அதி­சயம் எனப் புக­ழப்­படும்  ‘அங்கோர் வாட்’ (Angorwat) எனும் பெருங் கோயிலைக் கட்­டி­யெ­ழுப்­பினான். ‘அங்கோர் வாட்’ என்றால் புனித கோயில் (WAT என்­பது தாய் மொழியில் ஆலயம் பிரெஞ்சு மொழியில் VAT) அங்கோர் வாட்டைக் கட்டி முடிக்க 30 ஆண்­டுகள் ஆகி­யி­ருக்­கின்­றன.
எந்­தி­ரங்கள்  எதுவும்  இல்­லாமல்  மனி­தர்­க­ளையும்   யானை­க­ளையும் நம்பி எங்கோ இருந்து கற்­களைக் கொண்டு இந்தப் பெருங்­கோயில் கட்­டப்­பட்­டுள்ள பாங்கும் அதன் வடி­வ­மைப்பும் கட்­ட­டக்­கலை நுணுக்­கமும், இன்­றைய கட்டடக் கலைக்கே சவால் விடும் ஒன்­றாக இருக்­கி­றது.  கெமர் மன்­னர்கள் இந்து,  பெளத்தம் எனப் பல   கோயில்­களைக் கட்­டிய போதும்    உல­கி­லேயே மிகப் பெரிய கோயி­லாக   இருக்கும் அங்­கோர்வாட்  இன்று  கம்­போ­டி­யா­வுக்குப் புகழ் தரும் ஒன்­றா­கவும்  ஒவ்­வொரு  நாளும் அங்கு வந்து  குவியும் பய­ணி­களால்   அந்­நிய செலா­வ­ணியை  ஈட்­டித்­தரும்  கட்­டடச் சுரபி போல்  (அள்ள அள்ளக் குறை­யாத அமுத சுரபி போல்) இருக்­கி­றது.

இந்தக் கோயிலைக்  கட்­டி­யதால் உலகப் புகழ் பெற்ற மன்­னர்­களின் ஒரு­வ­னானான் இரண்டாம் சூரி­ய­வர்மன். அவன் இந்தக் கோயிலை மட்­டு­மின்றி வேறு ஐந்து இந்து கோயில்­க­ளையும் அங்­கோர்வாட் எல்­லை­க­ளுக்­க­ருகில் கட்டினான்.
இரண்டாம் சூரி­ய­வர்­ம­னுக்குப் பிறகு யசோ­வர்மன் (1150 – 1165) ஆட்சி பீட­மேறி   நான்கு கோயில்­களைக் கட்­டினான்.   அக்­கோ­யில்­களில் சிவா, விஷ்ணு ஆகிய தெய்­வங்­களின்   உரு­வச்­சி­லை­க­ளோடு   புத்தர் சிலையும் வைக்­கப்­பட்­டது.  அநேக­மாக   அது நாட்டில் இருக்­கிற பெளத்த மக்­க­ளுக்­காக இருக்­கலாம். யசோ­வர்­ம­னுக்குப் பிறகு திரி­பு­வ­னா­தித்­தி­ய­வர்மன் (1165 – 1177) ஆட்­சிக்கு வந்தான்.  யசோ­வர்­மனின்  மந்­தி­ரி­யான  இவன் யசோ­வர்­மனைக் கொன்று ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­தாக ஒரு வர­லாறு சொல்­கின்­றது.
இவன் காலத்தில் கெமர் பேர­ரசைப் பழி­வாங்கும் நோக்­கத்­தோடு இருந்த சாம் நாட்டு இள­வ­ர­சனால் அரி­யா­சனம் திரு­டப்­பட்­டுள்­ளது. 1177இல் கெமர் இராச்­சி­யத்தின் பெரிய குளம் ஒன்றில் நடந்த யுத்­தத்தில் மன்னன் கொல்­லப்­பட்டான்.
அதன் பிறகு நான்கு வருடம் மன்னன் இல்­லாமல் கெமர் பேர­ரசு இருந்­தது. கெமர் பேர­ரசு மன்னன் இல்­லாமல் அழிந்து விடுமோ என்று எண்­ணிய போது பிற்­கா­லத்தில் மாபெரும் மன்னன் எனப் புக­ழப்­பட்ட ஒருவன் வந்தான். அவன் ஏழா­வது ஜெய­வர்மன்.
ஏழாம் ஜெய­வர்மன் புத்தர் கோயில்கள், அர­ச­மா­ளிகை, யானை­களின் பீடம், மருத்­துவமனைகள் (ஆரோக்­கிய சாலா என அழைக்­கப்­பட்­டது), பல்­க­லைக்­க­ழகம் என 16 கட்­டட வேலை­களைத் தொடங்­கினான். இந்து மதத்தை ஆத­ரித்த போதும் தன் ஆட்சிக் காலத்தில் புத்த கோயில்­க­ளையே கட்­டினான்.
அவற்றில் முக்­கி­ய­மா­னது பேயொன் (Bayon) என அழைக்­கப்­படும் பிர­மாண்­ட­மான கோயில் தொடக்­கத்தில் அது இந்து கோயி­லாகக் கட்டத் தொடங்­கி­னாலும் புத்தர் கோயி­லா­கவே முடிந்­தது. கெமர் மன்­னர்­களில் சிலர் புத்த கோயிலைக் கட்­டி­னாலும் அது இந்துக் கோயில் அமைப்பில் தான் கட்­டி­னார்கள்.
ஏழாம் ஜெய­வர்­மனின் முக்­கி­ய­மான ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­வது  »Preahkhan » என்ற பல்­க­லைக்­க­ழ­கமே. கோயில் வடிவில் கட்­டப்­பட்ட கோயிலை விட மேலா­னது என்­கிறார் ஓர் ஆய்­வாளர். 56 ஹெக்­டேரில் பல்­லைக்­க­ழ­கமும் நக­ரமும் சேர்ந்தே அமைக்­கப்­பட்­டது.
பெளத்த பல்­க­லைக்­க­ழ­க­மான இதில் 1000 ஆசி­ரி­யர்கள் பணி­யாற்­றி­ய­தா­கவும் இதனை தனது தந்தை தர­னீந்­தி­ர­வர்­ம­னுக்­காகக் கட்­டி­ய­தாக கல்­வெட்டுக் குறிப்பு தெரி­விக்­கி­றது. பல்­க­லைக்­க­ழ­கத்தின் கோபு­ரச்­சு­வர்­களில் இராமா­யணக் காட்­சிகள் செதுக்­கப்­பட்­டுள்­ளன. அப்­ஸரா நங்­கைகள் நட­ன­மாட பெரிய அரங்­கமும், குளம் என்­ப­னவும் பல்­க­லைக்­க­ழ­கத்­தோடு இணைக்­கப்­பட்­டுள்­ளது.
ஏழாம் ஜெய­வர்மன் ஆட்­சிக்­கா­லத்தில் ஆன்­மிகம், கலை, கல்வி ஆகிய துறை­களில் எழுச்­சி­யுற்ற போதும் தாய்­லாந்து சாம் மன்­னர்­க­ளோடு மோத வேண்டி வந்­தது. ஏழாம் ஜெய­வர்­ம­னுக்குப் பிறகு இரண்டாம் இந்­தி­ர­வர்மன் (1220-–1243) ஆட்­சிக்கு வந்தான்.
இவ­னுக்குப் பிறகு எட்­டா­வது ஜெய­வர்மன் (1243–-1295) 52 ஆண்­டுகள் ஆண்ட போது ஏழாம் ஜெய­வர்மன் தாய்­லாந்து சாம் அர­சோடு சண்­டை­யிட்­டதால் சேத­மா­கிய இந்து, பெளத்த ஆல­யங்­களைப் புதுப்­பித்தான். அவன் தன் காலத்தில் புதி­தாக எதுவும் கட்­டப்­பட வில்­லை­யென்­றாலும் கெமர் பேர­ரசின் கட்­டடக் களஞ்­சி­யங்­களைப் பாது­காத்தான்.
அதே நேரத்தில் பக்­கத்து எதிரி நாடுகள் தங்­களைப் பலப்­ப­டுத்திக் கொண்­டன. ஆனால் எட்­டா­வது ஜெய­வர்மன் ஆண்­டதால் ஜெய­வர்­மன்கள் மீதுள்ள (ஏழா­வது ஜெய­வர்மன் எதி­ரி­களை ஓட ஓட விரட்­டி­யவன்) பயத்­தினால் அமை­தியாய் இருந்­தனர் எதி­ரிகள். வெளி எதி­ரி­களைச் சமா­ளித்த எட்டாம் ஜெய­வர்­மனால் பெற்ற மகளால் உரு­வான எதிர்ப்பைச் சமா­ளிக்க முடி­ய­வில்லை.
52 ஆண்­டுகள் ஆண்ட அரச பத­வியை மகளால் துறந்தான். 1295 இல் எட்டாம் ஜெய­வர்­மனின் மரு­மகன் ஸ்ரீந்­தி­ர­வர்மன் அர­ச­னாக பத­வி­யினை ஏற்றான். 1307இல் அவள் தனது உற­வி­ன­னான ஸ்ரீந்­தி­ர­ஜ­ய­வர்மன் (1307 -– 1327) கெமர் பேர­ரசின் மன்­ன­னானான். இவன் பாளி மொழியை அரண்­ம­னை­யிலும் அரச நிர்­வா­கத்­திலும் கொண்டு வந்து ஹின்­யான பெளத்­தத்தை (Hinayana Buddhism) பரப்­பினான்.
ஆனாலும் கெமர்  பேர­ரசில் இந்து சமயம் வலு­வி­ழக்கவில்லை. இந்து பிரா­ம­ணர்கள் அரண்­ம­னையில் உயர் பத­வியில் சக்தி வாய்ந்­த­வர்­க­ளாக இருந்­தார்கள். கெமர் பேர­ரசின் மன்­னர்­களில் சிலர் பெளத்த மதத்தை ஆத­ரித்த போதும் 88 வீத­மான அப்­போ­தைய கெமர் பேர­ரசின் மக்கள் இந்து மதமே அரச மத­மென நம்­பினர்.
கெமர் பேர­ரசு வலு­வா­ன­தாக இருந்த போதும் பெரிய கோயில்­க­ளையும் மாளி­கை­க­ளையும் கட்­டிக்­கொண்டே இருந்­த­தாலும் மன்­னர்­களின் ஆடம்­ப­ரத்­தாலும் கோயில்­களை நாள் தோறும் பரா­ம­ரிக்க வேண்­டி­ய­தாலும் கெமர் பேர­ரசின் பொரு­ளா­தார வளம் குன்­றி­யது.
ஏழாம் ஜெய­வர்மன் கட்­டிய Ta Prohm என்ற கோயி­லுக்கு மட்­டுமே 500 கிலோகிராம் எடை­யுள்ள தங்­கத்­தட்­டுகள், 35 வைரங்கள், 40,620 முத்­துக்கள், 4,540 விலை உயர்ந்த கற்கள், சீனா­வி­லி­ருந்து இறக்கு­மதி செய்­யப்­பட்ட விலை உயர்ந்த துணி­யி­லான திரைச்­சீ­லைகள் 876, பட்­டுத்­து­ணி­யி­லான மெத்­தைகள் 510, அழ­கான ஆடம்­ப­ர­மான குடைகள் 523 என்­பன இருந்­த­தாக சமஸ்­கி­ரு­தத்தில் எழு­தப்­ப­ட்ட கல்­வெட்டு சொல்­கி­றது. ஒரு கோயி­லுக்கே இவ்­வ­ளவு சொத்து என்றால் ஏனைய கோயில்­க­ளுக்கு? அரசின் பொரு­ளா­தாரம் குறை­யத்­தானே செய்யும்.

கெமர் பேர­ரசின்  பொரு­ளா­தார வளம் குன்­றி­ய­தை­ய­றிந்த எதி­ரிகள்  யுத்­தத்தைத் தொடங்­கி­னார்கள். தாய்­லாந்து  சுகோதாய் (Sukothai) என்ற அரசின் மன்னன்  Ramakamheng என்­பவன் படை திரட்டி கெமர் பேர­ரசின் மேற்கு, வடக்கு நிலப்­ப­கு­தி­களைக்  கைப்­பற்­றி­ய­தோடு கெமர் பேர­ரசு சிறுத்­தது. 1327 இல் கெமர் அரசின் கடைசி மன்னன் ஜெய­வர்மன் பர­மேஸ்­வரா அல்­லது ஒன்­ப­தா­வது ஜெய­வர்மன் பத­விக்கு வந்த போதும் இழந்த பகு­தி­களை மீட்­காமல் இருந்த பகு­தி­களை தற்­காத்துக் கொண்டான்.
அவ­னுக்குப் பிறகும் 1423 வரை கெமர் அரசின் ஆட்சி இருந்த போதும் அது சிற்­ற­ர­சாக இருந்­தது. எதி­ரி­களின் தாக்­குதல் அங்கோர் வாட் மீது அடிக்­கடி நிகழ்ந்­ததால் பாது­காப்­பிற்­காக வியட்­நாமின் தற்­போ­தைய தலை­ந­க­ரான நொம்பென் (Phnom penh) நக­ரத்­திற்கு கெமர் ஆட்சி போனதால் அங்கோர் நகரம் பொலி­வி­ழந்­தது.
கெமர் மன்­னர்கள் கைவிட்ட அங்கோர் நகரம் தாய்­லாந்து மன்­னர்­க­ளாலும் புத்த மதத்­தி­ன­ராலும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்து பிறகு அவர்­க­ளாலும் கைவி­டப்­பட்டு கவனிப்பாரின்றி புல் பூண்டு செடிகள் மூடிக்கொண்டன. அவற்றை மீட்கப் புனரமைக்கும் பணியில் மேலைத் தேச வரலாற்று ஆய்வாளர்கள் பலர் மடிந்திருக்கின்றார்கள்.
16ஆம் நூற்றாண்டோடு முடிந்து போன கெமர் பேரரசின் அடையாளமே அங்­கோர்வாட். இன்று அங்­கி­ருந்த சிவ­லிங்கச் சிலைகள் உடைக்­கப்­பட்டு புத்தர் சிலை­களை வைத்த போதும் அங்­கோர்­வாட்டின் கோபு­ரச்­சு­வர்கள் உண்மைக் கதை­களைச் சொல்லும்.
புத்­த­கத்­தி­லி­ருந்து பார்­வையை எடுத்த போது மனதில் மாபெரும் கெமர் பேரரசு கட்டிய அங்கோர்வாட்டைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் நெஞ்சில் மிதந்தது. அதே நேரத்தில் விமானம் தரையிறங்கப் போவதாக அறிவித்தல் ஒலித்தது.
(தொடரும்…)



கருத்துகள் இல்லை: