ஆண்டு முடிந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2014ம் ஆண்டு பிறந்தது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணியளவில் காமராஜர் சாலை சிவாஜி சிலை அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் சிறுவர் சிறுமியர், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் ஏராளமானோர் குவிந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அடுத்த நொடி அதிர்வேட்டுகள் முழங்கின. வாணவெடிகள் வர்ணஜாலம் காட்டின. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்‘ என கோரசாக கோஷமிட்டனர். சிலர் அந்த இடத்தில் நியூ இயர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளைஞர்களும் இளம்பெண்களும் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டனர்.
வழியில் சென்றவர்கள், போலீசார் என்று எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியபடி சென்றனர்.
வண்ணப் பொடிகளை வீசியும், வண்ண நீரை தெளித்தும் புத்தாண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மேலும், நள்ளிரவில் செல்போன் எஸ்எம்எஸ், இ மெயில் வாழ்த்து என மூலமாக உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க மெரினா கடற்கரையில் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர். எனினும், பல வாலிபர்கள் தாறுமாறாக பைக் ஓட்டி சென்றனர். இந்த ஆண்டு மெரினாவில் விடிய, விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நல்லவிதமாகவே அமைந்தது.
புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் மற்றும் சென்னை தி.நகர். திருப்பதி தேவஸ்தானம் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அதிகாலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சாந்தோம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச், பூக்கடை அந்தோணியார் சர்ச், கதீட்ரல், பெரம்பூர் சர்ச், ராயப்பேட்டை சிஎஸ்ஐ சர்ச், லஸ் சர்ச்களில் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் விடிய, விடிய கொண்டாட்டம் களை கட்டியது. சில ஓட்டல்களில் பிரபல நடிகர், நடிகைகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக