வெள்ளி, 3 ஜனவரி, 2014

கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் ! பார்கள், பப்களில் மேட்டுக்குடியினர் குடித்து விட்டு கலாட்டா செய்யும்


கிரிக்கெட்டில் வீசப்படும் பவுன்சரை தவிர வேறு பவுன்சர்கள் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு :
நம் ஊர் தியேட்டர்களில் ரகளை செய்பவர்களை ‘கவனிக்க’ கையில் கம்புடன், கைலி அணிந்து உலாவும் சிலரை நீங்கள் பார்த்திருக்க்க கூடும். அதோ போல பார்கள், பப்களில் மேட்டுக்குடியினர் குடித்து விட்டு கலாட்டா செய்யும் போது அவர்களை அப்புறப்படுத்த பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்கள் தான் பவுன்சர்கள்.  இது மேட்டுக்குடியினருக்கான சேவை என்பதால் இந்த குண்டர்களுக்கு சீருடை கொடுத்தும், பவுன்சர் என்ற ஆங்கில பெயரை கொடுத்தும் ‘நாகரிகமாக’ மாற்றி இருக்கிறார்கள். மற்றபடி அதே அடியாள் வேலை தான் மேட்டுக்குடி பப்களில் மட்டுமே அறியபட்டிருந்த இந்த குண்டர்கள் தற்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்த பவுன்சர்களை சப்ளை செய்யும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் பல்கி பெருகி வருகின்றன. இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 5 பில்லியன் டாலர்களாகவும், ஆண்டுக்கு 18%   வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது.

“தொழிலாளர் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் கம்பெனிகள் பவுன்சர்களை பணிக்கு அமர்த்துவது டிரெண்டாக உள்ளது” என்கிறார், பெங்களூரை சேர்ந்த பிளாக் பெல்ட் கமாண்டொஸ் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவி மனதியார்.
    பவுன்சர்கள்
  • தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிங் சிலிப் கொடுத்து வெளியே அனுப்ப முடிவு செய்த ஒரு நிறுவனம் அதை செயல்படுத்துவதற்கு முன்னதாக, ஊழியர்கள் பிரச்சனை செய்தால்  ‘கவனிப்பதற்காக’ பவுன்சர்களை பணிக்கு அமர்த்தியது.
  • சில மாதங்களுக்கு முன்பு ஒரு உற்பத்தி நிறுவனத்தில் நிர்வாகத்திற்கும், ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கும் பிரச்சனை ஏற்பட்ட போது அந்த நிறுவனம் பவுன்சர்களை பணிக்கு அமர்த்தியது.
  • தென்னிந்தியாவின்  புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்று நோயாளிகளின் ‘பிரச்சினை செய்யும்’  உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தங்களை காத்துக்கொள்ள பவுன்சர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறது.
  • உள்ளூர் மக்களுடன் பிணக்குகள் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து, தலைமை செயல் அதிகாரி போன்றோர் பார்வையிட  வரும் போது பிரச்சனை வராமல் இருக்க பவுன்சர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள்.
மோசமான பொருளாதார நிலைமை, விலைவாசி ஏற்றம், வேலை இழப்புகள் இவற்றின் காரணமாக பணியிடங்களில் வன்முறை நிகழ்வதற்கான சூழல்கள் அதிகரித்திருக்கின்றன.  அதிலிருந்து தம்மையும், தமது உயர் அதிகாரிகளையும், தமது சொத்துகளையும் காத்துக்கொள்ள நிறுவனங்கள் இவர்களை பணிக்கு அமர்த்துகின்றன.
தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சி பின் சக்கையாக வெளியே வீசி எறிந்து அவன் உடலை, உயிரை, வாழ்க்கையை சேதப்படுத்துவதை எதிர்த்து ஊழியர்கள் போராடும் வன்முறையை எதிர்த்துதான் இந்த பவுன்சர்கள் அதிகரிக்கின்றனர்.
மல்லையா
சாராய மல்லையா
“பிரபலங்கள் பவுன்சர்களை அமர்த்திக்கொள்வது,  தங்கள் அந்தஸ்தை காட்டுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகள் அமர்த்திக் கொள்வதில் உண்மையான நோக்கம் இருக்கிறது. உடனடி  தேவைக்காகவும், வேகமாக மாறிய சூழலை சமாளிக்கவும் பவுன்சர்களை அவர்கள் அமர்த்திக் கொள்கின்றனர்” என்கிறார் டாப்ஸ் குரூப் என்ற செக்கியூரிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் சி.இ.ஓ, ரமேஷ் ஐயர். இவரின் நிறுவனத்தில் 87,000 பேர் வேலை செய்கிறார்கள், அவர்களில் 10% அதாவது சுமார் 8,700 பேர் பவுன்சர்கள்.  “ஒரு பிரச்சனையின் அவசரம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்து பவுன்சர்களை அனுப்புகிறோம். எந்த சமயத்திலும் உடனடியாக 2,000 பவுன்சர்களை அனுப்ப தங்களால் முடியும்” என்கிறார் ஐயர். அதிகமான எண்ணிக்கையில் பவுன்சர்களை அமர்த்தியிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாராய மல்லையா.
தேவைப்படும் பவுன்சர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் கால அளவு, பணியின் தன்மை, பணியிடம் அதாவது தொழிற்சாலையா, கார்ப்பரேட் அலுவலகமா என்பதை பொருத்து கட்டணத்தை தீர்மானிக்கன்றன இந்த நிறுவனங்கள்.
ஜி4எஸ் இந்தியா என்ற இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட செக்கியூரிட்டி நிறுவனத்தின் இந்தியக் கிளை 1.3 லட்சம் பேரை ஊழியர்களாக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் மிக அதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தனியார் நிறுவனமான டிசிஎஸ்-ஐ நெருங்கியிருக்கிறது ஜி4எஸ் இந்தியா. “நிறுவனத்தின் ஆர்டர் வந்ததும், இடத்தையும், நிறுவனத்தையும், உயர் அதிகாரிகளையும் ஆய்வு செய்து, வாயில்களை கண்காணிக்க ஏற்பாடு செய்வோம்.” என்கிறார் ஜி4எஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ராஜீவ் ஷர்மா.
இந்த நிறுவனத்தின் பவுன்சர்களை பெரும்பாலும் பஞ்சாப், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள் அகதா என்று அழைக்கப்படும் மல்யுத்த பயிற்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். பவுன்சர்களாக சேர வேண்டுமானால் முக்கியமான அம்சம் மிரட்டும் தோற்றம் இருப்பது. “எந்த ஒரு விவாதத்திற்கும் வன்முறையின் அச்சுறுத்தல் பின்பலமாக இருப்பது வலு சேர்க்கிறது” என்கிறார் ஹரி சிங் என்ற பவுன்சர்.
பவுன்சர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கிராக்கி அவர்களின் சம்பளத்திலும் எதிரொலிக்கிறது. சாதாரண செக்கியூரிட்டிக்கு தரப்படும் சம்பளத்தை விட 3 அல்லது 4 மடங்கு அதிகமாக தரப்படுகிறது. மாதம் ரூ 12,000 சம்பளமாக பெறும் செக்யூரிட்டிகளுக்கு  மத்தியில் இவர்கள் ரூ 40,000-க்கு மேல் சம்பளமாக பெறுகிறார்கள்.
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்” என்கிறார் பவுன்சராக பணி புரியும் பூவைய்யா.
முதலாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் நிறுவனத்தை நடத்துவதற்கும் பவுன்சர்களின் தேவை அதிகரித்திருக்கும் நிலையில் பல லட்சம் கொட்டிக் கொடுத்து எஞ்சினியரிங் படிப்பதை விட உடலை வளர்த்து அடியாளாக பயிற்சி பெற்றால் கணிசமான சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
இந்தியாவில் அரசு வேலைகள் அரிதாகி வந்தாலும், நாட்டு மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசு, துணை இராணுவப் படைகள் மட்டும் பல்கிப் பெருகுவதை போல தனியார் நிறுனவங்களிலும் ஊழியர்களை எதிர்கொள்ள இந்த நவீன அடியாள்கள் பெருகி வருகிறார்கள். அடி ஒன்றுதான் பலனளிக்கும் என்பதை முதலாளிகள் புரிந்து கொண்டார்கள். நாம் புரிந்து கொள்வது எப்போது?
-    ரவி

கருத்துகள் இல்லை: