வியாழன், 2 ஜனவரி, 2014

டிமாண்டை அதிகரிக்க திமுகவுடன் பேசிக்கொண்டே பாஜகவுடன் சேர்ந்த விஜயகாந்த் !

புத்தாண்டு தினமான நேற்று, கூட்டணிக்கான பேச்சு வார்த்தையை, தமிழக பா.ஜ., அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை, பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும்படி அழைப்பு விடுத்தனர். இரு கட்சி தலைவர்களுக்கும் இடையே நடந்த இந்த முதல் சந்திப்பும், பேச்சுவார்த்தையும், அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு சிறப்பு பேட்டி அளித்த, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, 'பா.ஜ., அணியில் சேர்வதற்கான, பூர்வாங்க பேச்சு முடிந்துள்ளது. மோடி தான் அடுத்த பிரதமர்' என, பா,ஜ.,வுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தார். அவரது பேட்டியை, தே.மு.தி.க., ஆதரவு, 'கேப்டன் டிவி' நேரடி ஒளிபரப்பு செய்து, கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவை வைத்து காமடி பண்ணுவதாக எண்ணிக்கொண்டு தானே ஒரு காமடியாகிவிட்டார் 

டிமாண்டை அதிகரிக்க திமுகவுடன் பேசிக்கொண்டே பாஜகவுடன் சேர்ந்த விஜயகாந்த்
தமிழகத்தில், அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, டில்லியில், பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை, வைகோ சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, பா.ம.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர் ராவை சந்தித்தார்.தே.ஜ., கூட்டணியில் சேர, இவ்விரு கட்சிகளும் விரும்புவதை உறுதி செய்த, பா.ஜ., தலைமை, தே.மு.தி.க.,வுக்கு, தொடர்ந்து துாது அனுப்பி வந்தது. கூட்டணியில் சேர்வதற்கு, தே.மு.தி.க., தரப்பில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.அது குறித்த பரிசீலனை, கடந்த சில நாட்களாக, பா.ஜ., தேசிய மட்டத்தில் நடந்து வந்தது. நேற்று, பா.ஜ., மேலிடம், 'கிரீன் சிக்னல்' காட்டியதை அடுத்து, தமிழக பா.ஜ., வட்டாரம் சுறுசுறுப்படைந்தது.மதியம், 2:00 மணியளவில், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச் செயலர் மோகன்ராஜுலு ஆகியோர், சென்னையில் உள்ள, தே.மு.தி.க., அலுவலகம் சென்றனர். முதல் சந்திப்பு : அவர்கள் வருகைக்காக காத்திருந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்,பா.ஜ., உறுப்பினர்களுடன் ஒரு மணி நேரம் பேசினார். தே.மு.தி.க., இணைவதால், பா.ஜ., கூட்டணிக்கு ஏற்படக் கூடிய பலன்கள்; தே.ஜ., கூட்டணியில் சேர்வதால், தே.மு.தி.க.,வுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் குறித்து, இரு தரப்பிலும் விரிவாக பேசப்பட்டுள்ளது.இந்த சந்திப்பை முடித்து திரும்பிய பா.ஜ., தலைவர்கள், பேச்சில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து, மேலிடத்திற்கு தெரிவித்தனர். அங்கிருந்து வந்த ஆலோசனைப்படி, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், கமலாலயத்தில், நேற்று மாலை கூடி விவாதித்தனர்.அதில், விஜயகாந்த்துடன் பேசிய விவரங்கள் குறித்து, மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

இதுப்பற்றி, பா.ஜ., வட்டாரம் கூறியதாவது: பா.ஜ., கூட்டணிக்கு தே.மு.தி.க., வர வேண்டும் என்பது கட்சியினரின் ஒருமித்த கருத்து. அதை ஏற்ற மேலிடம், விஜயகாந்துடன் பேச்சு நடத்த அனுமதி வழங்கியது.ஏற்கனவே, புத்தாண்டில், கூட்டணிக்கான பூர்வாங்க வேலைகளை துவங்க, தமிழக பா.ஜ., தலைமை திட்டமிட்டிருந்தது. அதன்படி, நேற்றே விஜயகாந்த்தை சந்தித்துப் பேசியுள்ளனர்.தமிழகத்தில், லோக்சபா கூட்டணிக்காக, பா.ஜ., தரப்பில் நடந்த முதல் சந்திப்பு இது தான். இதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பினோம்; அது நடந்திருக்கிறது.சாதகமான பதிலையே, விஜயகாந்த்தெரிவித்துள்ளதால், எங்களுக்கு மகிழ்ச்சி.இவ்வாறு, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.
தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறியதாவது;தேசிய அரசியலில் பங்களிப்பு பெற வேண்டும் என்பது, விஜயகாந்தின் விருப்பம். தேசிய கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவே, டில்லி தேர்தலில் போட்டியிட்டோம். பா.ஜ., கூட்டணியில் சேர்வதன் மூலம், அந்த விருப்பம் நிறைவேறும். தேசிய அளவில், எங்கள் கட்சி பேசப்படும்.தமிழகத்திலும், தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பெரிய கட்சியாக வளர வாய்ப்பு கிடைக்கும். தே.மு.தி.க., இணைந்தால், இந்த இரு கூட்டணிகளுக்கும் சவாலாக, பா.ஜ., கூட்டணியால் விளங்க முடியும்.அதை, பா.ஜ., தலைவர்களும் புரிந்துள்ளனர். வரும், 5ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில், இதுபற்றி விவாதித்து, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நமது சிறப்பு நிருபர்  தினமலர்.com 

கருத்துகள் இல்லை: