வெள்ளி, 3 ஜனவரி, 2014

இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு, சமூகநீதிக்கு முடிவு ? சதி தொடங்கிவிட்டதா ? அதிர்ச்சி, அச்சத்தை அளிக்கிறது- ராமதாஸ்


சென்னை: தமிழக அரசின் அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கான நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு அச்சத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஒரேயொரு பணியிடத்தை நிரப்புவதாக இருந்தாலும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். தமிழக அரசின் இட ஒதுக்கீடு அறிவிப்பு அதிர்ச்சி, அச்சத்தை அளிக்கிறது- ராமதாஸ் அவ்வாறு இருக்கும்போது அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி மட்டுமின்றி அச்சமும் அளிக்கிறது. சமூகநீதியின் பிறப்பிடம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என துணிச்சலுடன் அறிவிக்கும் ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எதிலுமே இட ஒதுக்கீடு இல்லை என அறிவிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்பதுதான் அச்சத்திற்கு காரணமாகும். அதுமட்டுமின்றி, தலைமைச்செயலக அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட 3 மடங்கு வரை அதிக ஊதியம் வழங்கப்படும்; இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் பணியில் சேரலாம்; தமிழக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாவிட்டால் கூட, வேலையில் சேர்ந்த பிறகு பதிவு செய்து கொள்ளலாம் என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவதால்தான் இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் வழங்கப்படுவதாக அரசுத் தரப்பில் காரணம் கூறப்படலாம். ஆனால், அது ஏற்கக்கூடிய காரணமல்ல. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக இப்போது மருத்துவத்துறையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்கு முடிவு கட்டுவதற்கான சதி தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: