ஆம் ஆத்மிக்கு பயப்படுவது பிஜேபியா, காங்கிரசா?
டெல்லியில் மூன்று சட்டமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி கூடத் தன்னை வீழ்த்திய ஆம் அத்மி கட்சியைக் கண்டு பயப்ப்டுவதாகத் தெரியவில்லை. ஆனால் பி.ஜே. பி பேசுவதையும் செய்வதையும்பார்த்தால் அதுதான் ஆம் அத்மிக்கு அதிகம் நடுங்குவதாகத் தெரிகிறது.
தானாக முன்வந்து ஆதரவு அளிப்பதாகச் சொன்ன காங்கிரசின் ஆதரவை ஏற்றுக் கொண்டு ஆட்சி அமைக்க ஆம் அத்மி கடைசியில் ஒப்புக் கொண்டதை பிஜேபியின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்கிறார்கள். முதலமைச்சர் கனவுடன் இருந்த பிஜேபி வேட்பாளர் ஹர்ஷ் வரதன். ஆட்சியை இழந்த ஷீலா தீட்சித்தை விடக் கோபமாக பேட்டிகள் அளிக்கிறார்.
அத்தனை பிஜேபியினரும் ஆம் ஆத்மி காங்கிரசுடன் கூட்டணி வைத்துவிட்டதே என்று புலம்பித் திட்டுகிறார்கள். இதைக் கூட்டணி என்று வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை நிஜமாக்கப் பார்க்கிறார்கள். இது கூட்டணி அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அறிவு நாண்யம் இல்லாமல் அதை சொல்லி வருகிறார்கள்.
பிஜேபியினரின் வாதத்தில் முக்கியமான அம்சம் என்ன என்று பார்ப்போம். டெல்லி மக்கள் தங்களுக்கும் ஆம் ஆத்மிக்கும் போட்ட ஒட்டு எல்லாம் காங்கிரசுக்கு எதிராக, காங்கிரசை அடியோடு அகற்றப் போட்ட ஓட்டுதான் என்பது அவர்கள் வாதம் இது முழு உண்மையல்ல. ஆம் ஆத்மிக்கு விழுந்த ஓட்டுகளில் பிஜேபிக்கு எதிரான ஓட்டும் கலந்தே இருப்பதாகவே பார்க்கவேண்டும். ஏனென்றால் ஆம் ஆத்மி தான் இரு கட்சிகளையுமே எதிர்ப்பதாகத்தான் கூறி பிரசாரம் செய்தது.
இருந்தாலும் ஒரு வாதத்துக்காக அத்தனை ஓட்டும் காங்கிரசை எதிர்ப்பதற்கானது என்றே வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால், மக்கள் நிராகரித்த காங்கிரசின் ஆதரவைக் கொண்டு ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது, நிராகரிக்கப்பட்ட காங்கிரசுக்கு மறுபடியும் ஆட்சி மீது கட்டுப்பாடு செலுத்த பலம் கொடுப்பதாகிறதே என்பதுதான் பிஜேபியின் கேள்வி.
இப்படி நடக்காமல் இருக்க பிஜேபி என்ன செய்திருக்க வேண்டும் ? அதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். அதற்குத்தான் அதிக எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் போதுமான எண்ணிக்கை பலம் இல்லாததால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று சொல்லி நழுவியது. அதற்கு பதில் அது என்ன செய்திருக்க வேண்டும் ? நம் இருவருக்கும் விழுந்த ஓட்டு எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்புதானே? அதனால் நீங்கள் எங்களை வெளியிலிருந்து ஆதரிக்க முடியுமா என்று ஏன் ஆம் ஆத்மியை கேட்டிருக்ககூடாது ? அப்படி வெளி ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்த வழி என்ன ? ஆம் ஆத்மி ஆட்சியை அமையுங்கள். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்று பிஜேபி சொல்லியிருக்கலாமே. அப்படி செய்திருந்தால் காங்கிரசுக்கு எந்த பிடிமானமும் கிட்டியிராதே. ஆனால் பிஜேபி என்ன செய்தது ?அருண் ஜெட்லிதான் முதன்முதலில் ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற யோசனையையே முன்வைத்தார்.
அது மட்டுமல்ல. அப்படிச் செய்ய தயங்கிய ஆம் ஆத்மி கட்சியினரை மக்கள் அளித்த பொறுப்பை ஏற்காமல் தட்டிக் கழித்து நழுவுபவர்கள் என்று கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டே இருந்தார்கள். அந்த வாரங்களின் தினசரி டி.வி சேனல் பேட்டிகளை எடுத்துத் திரும்ப ஓட்டினால், இது தெளிவாகத் தெரியும் அதே ஆசாமிகள்தான் இப்போது ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவை ஏற்க முடிவு செய்த அடுத்த நிமிடத்திலிருந்து இது மக்களுக்கு துரோகம் என்றும் இது கூட்டணி என்றும் அவதூறுப் பிரசாரம் செய்கிறார்கள்.
அதிக இடம் பெற்ற இவர்களும் ஆட்சி அமைக்கமாட்டார்கள். ஆட்சி அமைக்கும்படி இவர்களே தூண்டிய ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால் அதையும் தவறு என்பார்கள். அப்படியானால் என்னதான் டெல்லியில் நடக்க வேண்டும் ? ஆம் ஆத்மி முதலில் சொன்னது போல இன்னொரு தேர்தலா ? அதுதான் பிஜேபியின் நிலை என்றால், ஏன் பிஜேபி அதை அறிவித்துவிட்டு தங்கள் எம்.எல் ஏக்கள் அனைவரும் பதவி ஏற்ற மறு நிமிடமே ராஜினாமா செய்துவிடுவார்கள் என்று அறிவித்து தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கக்கூடாது ?
அதையும் செய்ய பயம்தான். பிஜேபியின் அசல் பயம், மோடி பலூனை ஆம் ஆத்மி தொடர்ந்து காற்றிழக்கச் செய்துவிடுமோ என்பதுதான். அதனால்தான் ஆம் ஆத்மி மீது அத்தனை கோபமும். ராகுல் காந்தி மட்டுமே எதிரியாக இருந்தால் பிஜெபிக்கு வசதி. முட்டாள், மடையன், உதவாக்கரை என்று ராகுலை வசை பாடி மோடி டயருக்குக் காற்றடிக்கலாம். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கெதிராக அப்படி எதுவும் செய்தால் பருப்பு வேகாது.
ஏற்கனவே பல மாநிலங்களில் பிஜெபிக்கு எந்த செல்வாக்கும் இல்லை மோடிக்கு அங்கே அலை என்ன, சின்ன நீர்க்குமிழ் கூட இல்லை. மோடி அலையை மீடியா இயந்திரத்தைப் பயன்படுத்தி வீசச் செய்யும் மாநிலங்களிலும் டெல்லியில் மோடி அலை இல்லாமற் போன செய்தி பரவும்போது மோடிக்கான ஈர்ப்பு கணிசமாகக் குறையவே செய்யும். இந்தக் கோபத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் திட்டித் தீர்க்கிறார்கள். காங்கிரஸ் நூறாண்டுகளில் பல எதிர்ப்பு இயக்கங்களை கண்டு சமாளித்து அழித்து எதிர்நீச்சல் போட்ட கட்சி. அது நிதானமாகவே அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடும். இப்போது அதன் பலவீனத்தால் அதிகம் செய்யமுடியாவிட்டாலும் செய்யாமலும் இராது. பகையாளியை உறவாடிக் கெடுப்பதும் அரசியல் உத்திதான்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடந்து கொண்ட விதம் என்ன ? பிஜேபி செயல்படும் முறை என்ன ? ஆம் ஆத்மி காங்கிரசுடன் எப்போதும் கூட்டணி அமைக்கவே இல்லை. ஊழலுக்குப் புகழ் பெற்ற அ. இ.அதி.மு.க, தி.மு.க இரு கட்சிகளுடனும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு சுகம் கண்ட கட்சிகள் பிஜேபியும் காங்கிரசும்தான். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க யார் ஆதரவையும் கேட்கவே இல்லை. காங்கிரஸ் தானாகவேதான் முன்வந்து ஆதரவை அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி தன் 18 கொள்கைகளைப் பற்றி இரு கட்சிகளின் கருத்து என்ன என்று இருவரையும்தான் கேட்டது. அதற்கு காங்கிரசாவது பதில் அனுப்பியது. பிஜேபி பதிலே சொல்லவில்லை. அதன்பின்னரும் ஆம் ஆத்மி மக்களிடம் சென்று கருத்துக் கணிப்பு செய்தபின்னர்தான் ஆட்சி அமைக்க முன்வந்திருக்கிறது.
இந்தக் கருத்துக் கணிப்பையும் பிஜேபி கிண்டல் செய்தது. அதுதான் டெல்லி மக்கள் முன்னரே காங்கிரசை நிராகரித்து ஓட்டு போட்டுவிட்டார்களே, திரும்ப எதற்குக் கருத்துக் கணிப்பு என்று. தனியே தாங்கள் மட்டுமாக ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆதரவு கேட்டுப் பிரசாரம் செய்தபின்னர் இப்போது வெளி ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வந்ததும் அதற்கு மக்களாதரவு உண்டா இல்லையா என்று ஆம் ஆத்மி கேட்டது ஆரோக்கியமான நடவடிக்கையே ஆகும்.
இப்படி எதற்கெடுத்தாலும் கருத்துக் கணிப்பு கேட்பீர்களா, எல்லையில் சீனா ஆக்ரமித்தால் அத்துடன் யுத்தம் நடத்தலாமா என்று கருத்து கேட்டுக் கொண்டிருப்பீர்களா என்று ஒரு பிஜேபி பிரகஸ்பதி கேட்டார். கேட்கலாம்.தப்பில்லை. யுத்தம் நடத்தி ஆட்சேதம், பொருட் சேதம் செய்வ்தை விட பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்று சொல்லும் உரிமை மக்களுக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் அதை யாரும் மக்களிடம் வந்து கேட்பதுதான் இல்லை. ராஜபக்ஷே அரசுக்கு ஆயுத உதவி செய்யலாமா என்று இந்திய அரசு கருத்துக் கணிப்பு கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிப்பது நாட்டுக்கு நல்லது. அப்படிப்பட்ட நிலைகள் வரவேண்டும்.
முக்கியமான கொள்கைப் பிரச்சினைகளிலும், புது நடவடிக்கைகளுக்கும் மக்கள் கருத்தைக் கேட்டு ஓட்டெடுக்கும் ரெஃபரெண்டம் முறை ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப் பூர்வமாகவே உள்ளது. இந்தியாவிலும் அப்படி ஒரு சட்ட நிலைமை வரவேண்டும் .ஆம் ஆத்மி கட்சி அரசியலில் இப்படி மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பதன் அடையாளமாகவே இந்தக் கருத்துக் கணிப்பை பர்கலாம்.
இதுவரை ஆம் ஆத்மி கட்சி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இந்திய அரசியலுக்கு தேவையான் ஆரோக்கியமான மாற்றங்கள்தான். பகிரங்கத்தன்மை, நேரடியாக மக்களுடன் உரையாடி கருத்து கேட்பது, அரசு நிர்வாக வீண் பந்தாக்களை ( செக்யூரிட்டி ரெட் லைட் சைரன்) ஒழிப்பது எல்லாம் இதர கட்சிகள் கற்கவேண்டிய பாடம்.
அடுத்த கட்டமாக ஆம் ஆத்மி கட்சி எப்படிப்பட்ட கட்சியாக மலரும் என்று இப்போது சொல்ல முடியாது. அசாம் கணபரீஷத் இயக்கமும் இளைஞர் இயக்கமாக தொடங்கி கெஜ்ரிவால், சிசொடியா போல, மஹந்தா,புக்கான் தலைமையில் நடந்து கடைசியில் இரு தலைவர்களின் பிளவாலும் வேறு பல காரணங்களாலும் சிதைந்தது. கெஜ்ரிவாலோ ஆம் ஆத்மியினரோ இன்னும் நம் நாட்டின் பல முக்கிய பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்று சொல்லவில்லை. ஊழல் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தொழில்வளர்ச்சியில் அரசு பங்கு, தனியார் பங்கு, கூட்டுப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல் , இட ஒதுக்கீடு, வெளியுறவுக் கொள்கை, இலங்கைத்தமிழர் நிலை இது போன்ற பல விஷயங்களில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியமானது. அவையெல்லாம் தெரியவரும்போதுதான் அதன் வளர்ச்சியோ தளர்ச்சியோ உறுதி செய்யப்படும்.
கல்கி 28.12.2013 gnani.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக