சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி பகுதி தொழிற்சாலைகள் குறித்து வினவு செய்தியாளர்களின் நேரடி ஆய்வு

“50 வருஷம் முன்னேயெல்லாம் நான் சின்ன பையனா இருக்கும் போது இங்க இந்த ஃபேக்டரிங்க எல்லாம் கிடையாது சார். எல்லாம் குடிசை வீடுங்கதான். அப்புறம்தான் ஒவ்வொரு வீடா வாங்கி ஃபேக்டரிங்க கட்டிட்டாங்க. இப்போ எனக்கு 65 வயசாகுது” என்றார் அந்த பெரியவர். அவரிடம் பேச்சு கொடுத்ததும் மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள், பக்கத்து வீட்டுக் காரர்கள் என்று 10-20 பேர் கூடி விட்டார்கள்.
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
நாகல்கேணி பகுதி தோல் பதனிடும் நிறுவனங்களுக்கான பொது கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை ஒட்டிய குறுகலான சிறு தெருவில் அவர்கள் வசிக்கிறார்கள். வீடுகளின் மறுபுறம் கிங்ஸ் லெதர் தொழிற்சாலை உள்ளது.

“ராத்திரி எல்லாம் உறங்கவே முடியலைப்பா. ஃபேக்டரிக்கு வரக் கூடிய லாரியை எல்லாம் இந்தத் தெரு வழியாத்தான் கொண்டு போறாங்க. மேலே ஒயரை எல்லாம் ஒதுக்கி விடச் சொல்லி சத்தம் போடுவாங்க. பொறுக்க முடியாம வெளியே வந்து கேட்டா, போலீசை கூப்பிட்டு மிரட்டுறாங்க” என்றார் ஒரு வயதான அம்மா.
“இந்தத் தெருவையே நான் கலெக்டர்கிட்டேருந்து விலைக்கு வாங்கிட்டேன், நீங்க என்ன கேக்குறது-ன்னு அடாவடி பேசுறாம்பா அந்த ஃபேக்டரி ஓனரு. அவனும் இங்க சின்ன வீட்டில கொழந்தைங்களோட இருந்தவன்தான். இப்படி நிலத்தை வாங்கிப் போட்டு, ஃபேக்டரி வைச்சு பணம் சம்பாரிச்சிட்டான். போலீசுக்கு பணத்தைக் கொடுத்து எங்களை மிரட்டுறான்” என்றார் இன்னொரு பெண்.
“100 வருஷமா இங்கதான் குடியிருக்கிறோம். யார் கிட்டேயும் பட்டா கிடையாது. பொதுக் கிணத்திலே பைப்பு போட்டு ஃபேக்டரிக்கு தண்ணி எடுத்துக் கிட்டு இருந்தான். நாங்க வெளியே எங்கேயாவது அலைஞ்சுதான் தண்ணீ கொண்டு வரணும். இப்பதான் கவுன்சிலர வைச்சு அந்த குழாயை உடைச்சுப் போட்ட பிறகு நாங்க தண்ணி எடுக்க முடியுது.”
“அந்தத் தண்ணியை குடிக்க எல்லாம் முடியாது. பாலாறு தண்ணிதான் புடிச்சிக்கிறோம். தெருவுக்கு சிமென்டு தளம் போட்டாச்சு, தண்ணி குழாய் போட்டுக் கொடுத்திருக்காங்க, ஆனாலும் நிம்மதியில்லாம மிரட்டுறான் அந்த கம்பெனி ஓனரு. ரவுடிங்களை வைச்சு மிரட்டுறான், நடு ராத்திரில போலீசு காரங்க வந்து கூப்பிட்டுட்டு போறாங்க. பொம்பளைங்களை எல்லாம் வாடி, போடின்னு கேவலமா பேசுறான். என்ன செய்யறதுன்னே தெரியல”.
பித்தளை பானை
காற்று பட்டே நிறம் மாறும் பித்தளை பானை
“எல்லாத்தையும் சமாளிச்சுருவோம் சார், இந்த போலீஸ் தொல்லைதான் தாங்கல. முன்னே எல்லாம் இங்க போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. பல்லாவரம்தான். நாங்க எல்லாம் சேர்ந்ததுதான் பெட்டிசன் போட்டு சங்கர் நகர்ல ஸ்டேஷன் வர வைச்சோம். ஏண்டா அதைச் செய்தோம்னு இருக்கு. எப்பா பார்த்தாலும் வந்து மிரட்டுறானுங்க. அவங்க லட்ச லட்சமா செலவழிச்சு ஃபேக்டரி போட்டிருக்காங்க, நீங்கதான் வேற இடத்தைப் பார்த்து போகணும்னு திட்டுறானுங்க. தலைமுறை தலைமுறையா இருக்கற இந்த இடத்தை விட்டு எங்க போவோம் சொல்லுப்பா” என்கிறார் அந்தப் பெரியவர்.
“ஆரம்பத்தில மாட்டு வண்டியில பொருளுங்க வரும். அப்போ இடம் கொடுத்தோம். இப்போ பெரிய பெரிய லாரில கொண்டு வாராங்க. லாரி போக இடம் போதலைன்னு, வீட்டுக்கு முன்னால வெச்சிருந்த மரங்களையும், தடுப்பையும் புல்டோசர் கொண்டு வந்து புடுங்கி போட்டுட்டானுங்க”.
“கமிஷனர் ஆபீசுக்குப் போய் புகார் கூட எழுதிக் கொடுத்தோம். பார்த்தா, எங்க மேலேயே கொலை மிரட்டல் கேஸ் போட்டிருக்காங்க. எங்க வக்கீல் ஒரு ஆளு இருக்காரு, அவருக்கு காசு கொடுப்பதோட சரி, ஒன்னும் நடக்க மாட்டேங்குது”.
1980-களிலும், 1990-களிலும் தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் அலைகளை ஏற்படுத்திய துறை தோல் துறை. அப்போது புறநகர் பகுதியாக இருந்த பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி (இப்போது பம்மல் நகராட்சி)-யில் நூற்றுக் கணக்கான சிறு, நடுத்தர பட்டறைகளும், பல பெரிய தொழிற்சாலைகளும் உருவாகின. பல நூறு கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டன. சில நூறு தொழில் முனைவர்கள் லட்சாதிபதிகள் ஆனார்கள். இந்தப் பகுதியிலிருந்து பல ஆயிரம் டன் பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் தூண்டிய வளர்ச்சியில் கொழித்த அந்தப் பகுதியில் எஞ்சியிருக்கும் சில குடும்பத்தினரின் குரல்தான் மேலே கொடுத்திருப்பது. அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்கள், தொழிற்சாலைகளில் பணி புரியும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள், கடந்த சில ஆண்டுகளில் அவர்களை பெருமளவு இடம் மாற்றம் செய்திருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள், ஜாப் வொர்க் செய்து கொடுக்கும் சிறு முதலாளிகள் என்று பல தரப்பட்டவர்களை சந்தித்துப் பேசினோம்.
ஜாப் வொர்க் எடுத்து செய்யும் சிறு நிறுவன முதலாளியிடம் பேசிய போது,
“இந்தத் தொழில 1996 வரை நன்றாகத்தான் இருந்தது. இப்போது முன்பு போல் இல்லை. அப்போ எல்லாம் கிரமத்திலிருந்துதான் தோல் வந்து கொண்டிருந்தது. இப்போ வேறு மாநிலங்களில் இருந்து, வெளி நாடுகளிலிருந்து வருகின்றது. அவற்றை பெரிய டேனரிகள் வாங்கிக் கொள்கின்றன.
வேலைக்கு முன்பு போல் ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில்  கூலி வேலை செய்பவர்கள் கூட தங்கள் குழந்தைகளை கான்வென்டில் படிக்க வைக்கிறார்கள். தோல் வேலை என்பது அழுக்கு நிறைந்த வேலை. எங்களுக்கு இந்திகாரர்கள் தான் கிடைக்கிறார்கள். எங்களை போன்ற ஜாப் எடுத்து செய்பவர்கள் கொடுப்பதை விட டேனரி வைத்திருப்பவர்கள் அதிகமாக சம்பளம் கொடுத்தால் அங்கு சென்றுவிடுகிறார்கள். டேனரியினர் பெரிய அளவில் செய்வதால் அவர்களால் கூடுதல் சம்பளம் கொடுக்க முடிகிறது.
தோல் வேலை என்பது அழுக்கு நிறைந்த வேலை
தோல் வேலை என்பது அழுக்கு நிறைந்த வேலை
இந்தத் தொழிலில் நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். நாங்கள் வாங்கும் காசை விட 10 பைசா குறைவாக வாங்கிக்கொண்டு ஜாபை முடித்துக் கொடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.
தமிழ் ஆட்கள் சோம்பேறிகள், வட இந்திய தொழிலாளர்களைப் போல உழைக்க மாட்டார்கள். இந்தத் தொழில் வடஇந்தியர்களை நம்பிதான் இயங்குகிறது. அவர்கள் இல்லை என்றால் எதுவும் ஓடாது. ஆனா, அவனுங்க இப்பவே ரேசன் அட்டை கேட்க ஆரம்பித்து விட்டானுங்க, இன்னும் போனால் தேர்தலில் கூட நிற்பாங்க. இவங்களால தமிழ் தொழிலாளர்களுக்கு பாதிப்பு.“ என்று சிறு முதலாளிகளுக்கே உரிய அரசியலையும் பேசி முடிக்கிறார் அவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தொழில் நுட்ப பட்டயம் அல்லது பட்டம் முடித்து வருபவர்கள் இது போன்று சிறு முதலாளிகளாகவும், தொழிற்சாலை மேலாளர்களாகவும், தொழில் நுட்ப மேலாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். அதிக திறன், நீண்ட கால பயிற்சி தேவைப்படும் இயந்திரங்களை இயக்கும் வேலையிலும் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். பெண்கள் எந்திரங்களை இயக்குபவர்களுக்கு உதவியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
எந்திரங்களில் பாதுகாப்பு சாதனங்களை நீக்கி விட்டு வேலை வாங்குவதும் அதனால் நடந்த விபத்துகள் குறித்தும் தொழிலாளர்கள் கூறினார்கள். நாங்கள பார்த்தவர்களில் ஒருவருக்கு ஒரு விரல் இல்லை, ஒருவருக்கு கை விரல் மூட்டுகள் வளைந்து போயிருக்கின்றன, இரசாயனத்தில் வேலை செய்து கைகளில் முடி அனைத்தும் உதிர்ந்து போயிருக்கிறது, இன்னொருவருக்கு கழுத்துப் பகுதியில் தோல் தடித்துப் போயிருக்கிறது.
தோல் வியாதிகள்
தோல் வியாதிகள்
ஒரு விரலை இழந்தால் ரூ 12,000 நிவாரணம் என்றும் நான்கு விரல்கள் போனால் ரூ.48,000 நிவாரணம் என்றும், முழுக்கையையும் இழந்தால் ரூ.1 லட்சம் நட்ட ஈடு என்று ரேட் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். அதையும் பெறுவதற்கு அலைய வேண்டியிருக்கிறது என்கிறார் அந்தத் தொழிலாளி.
உடல் உறுப்புகள் இழந்தவர்கள் மாற்று வேலை கேட்டு போராடினால் கிடைப்பது அரிது என்கிறார்கள். கிடைக்கிற தொகையை வாங்கிக் கொண்டு போய் விட வேண்டியதுதான்.
தமது வாழ்நிலைகளை மேம்படுத்த போராடுவது சாத்தியமில்லை. முதலாளிகளை யாரும் எதிர்க்க முடியாது. யாராவது எதிர்க்க முயற்சித்தால் அவர்களையும் காசு கொடுத்து அமைதியாக்கிவிடுவார்கள் என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர். சில தொழிற்சாலைகளில் பெயர் பலகைகள் வைத்திருக்கும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சந்தா வசூலிக்கும் சங்கமாக பெயரளவில் கூட செயல்படவில்லை.
ப்போது இங்கு சுமார் 250 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
டேனரி எனப்படும் பெரிய தொழிற்சாலைகளில் அனைத்து வகையான இயந்திரங்களும் இருக்கின்றன. ஒரு wet blue தோல் உள்ளே சென்றால் தேவைப்படும் அனைத்து வகையான இரசாயன மற்றும் எந்திர செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தோல் பொருள் செய்யத் தயாரான நிலையில் தோல் வெளியில் வருகிறது. ஓரிரு அல்லது ஒரு சில எந்திரங்களை வைத்து ஜாப் வொர்க் செய்து கொடுக்கும் சிறு பட்டறைகள் சிறிய இடத்தில் 5-10 பேரை வைத்து செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி நிகழ்முறையின் ஒரு பகுதியை மட்டும் செய்து அடுத்தவருக்கு கைமாற்றி விடுகின்றன. இதுபோன்று சிறு பகுதிகள் பல்வேறு சிறு பட்டறைகளில் செய்யப்படுகின்றன.
இது போன்று காலணி செய்யும் நிறுவனங்களில், காலணியின் மேற்பாகத்தை (அப்பர்) மட்டும் செய்து ஏற்றுமதி செய்கின்றன. ஷூவின் அடிப்பகுதியும் நடுப்பகுதியும் இன்னொரு நாட்டில் இணைக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளின் சந்தைகளின் விற்கப்படுகின்றன.
ந்தப் பகுதியில் சுமார் 15,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதில் 10,000 பேர் வட இந்தியத் தொழிலாளர்கள்.
வட மாநிலத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 150-180 வரை சம்பளம் தரப்படுகிறது, மாதச் சம்பளமாக ரூ 5,000-முதல் ரூ 5,500 வரை கிடைக்கிறது. இது போக ஓவர்டைம் பார்த்து ரூ 9,000-முதல் 10,000 வரை சம்பாதித்து விடுகிறார்களாம்.
வேதிப் பொருட்கள்
பெட்டிக் கடைகள் போல விற்கப்படும் கெமிக்கல்கள்
”நம்ம ஊரு ஆளுங்க 8 மணி நேரம்தான் வேலை பார்ப்பேன்னு நிப்பானுங்க. இந்திக்காரனுங்க நம்ம ஆட்கள் போல சோம்பேறிகள் இல்லை. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கூட வேலை செய்வானுங்க. தோல் பதனிடும் டிரம் ஓடும் போது, நடுவில் ஓரிரு மணி நேரம் தூங்கி எழுந்து விட்டு தொடர்ந்து வேலை செய்வார்கள். அந்த 2 மணி நேரத்தை நாங்க கண்டு கொள்வதில்லை” என ஒரு சூப்பர்வைசர் பெருமையாக கூறினார்.
“அதற்கான ஓவர்டைம் கொடுத்து விடுகிறோம். ஓவர் டைம் என்றால் 1.5 மடங்கு, 2 மடங்கு எல்லாம் இல்லை. மாதச் சம்பளத்தை 30 (நாட்கள்) ஆல் வகுத்து, அதை 8 (மணி நேரம்) ஆல் வகுத்து ஒரு மணி நேரத்துக்கு கணக்கிட்டு கொடுத்து விடுவோம். தேவைப்படும் போது அவங்க கிட்ட நானே கடன் வாங்கும் அளவுக்கு சம்பாதிக்கிறாங்க. மாதம் ரூ 12,000 வரை சம்பாதிப்பவர்களும் உண்டு” என்றார். ரூ 5,400 அடிப்படை சம்பளத்திற்கு மேல் கூடுதலாக வேலை செய்து ரூ 12,000 சம்பாதிக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு சராசரியாக 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்வதை வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும் வாய்ப்பாக கருதுகிறார்கள்.
“ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் தமிழ்நாடு போல தொழிற்சாலைகள் இல்லை. அதனால் குடும்பங்களை அங்கே விட்டு விட்டு இங்கு வேலைக்கு வருகிறோம். செலவுகள் போக மாதம் ரூ 7,000 வரை வீட்டிற்கு அனுப்ப முடியும்.”
“குடும்பத்தை இங்கு அழைத்து வருவதெல்லாம் முடியாது. ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றாலே ரூ 20,000 30,000 முன்பணம் கேட்கிறாங்க. அது இருந்தால் நாங்கள் ஏன் இங்கே வந்து வேலை செய்கிறோம்” என்று நிதர்சனத்தைப் பேசுகிறார் ஜார்கண்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி. இங்கு நான்கைந்து பேர் அல்லது 10-20 பேர் ஒரே அறையில், தொழிற்சாலைக்குள்ளேயே தங்கிக் கொள்ள முடியும். அவரது அப்பா பெங்களூருவில் வேலை செய்கிறாராம், அண்ணன் கொல்கத்தாவில் வேலை செய்கிறாராம். அவரது அம்மா, மனைவி மற்றும் குடும்பத்தினர் ஊரில் கிராமத்தில் இருக்கிறார்கள்.
சுற்றுச் சூழல் மாசு
தோலிலிருந்தும், கழிவு நீரிலிருந்தும், இரசாயனங்களிலிருந்தும் வரும் கடுமையான துர்நாற்றம்.
பி.எஃப், ஈஎஸ்ஐ போன்ற வசதிகளை அவர்களும் கேட்பதில்லை, முதலாளிகளும் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்குப் போகும் போதோ, ஏதாவது மருத்துவ அவசரத்துக்கோ முதலாளி ‘கருணை’யுடன் ஏதேனும் கொடுப்பார். “எங்கள் முதலாளி வட இந்திய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு தடவை 20 நாட்கள் ஊருக்குப் போக அனுமதிக்கிறார். அந்த 20 நாளுக்கும் சம்பளத்தையும் பிடிப்பதில்லை.” என்கிறார் ஒருவர்.
ஜாப் வொர்க் செய்யும் சிறு பட்டறைகளில் 12-முதல் 15 வயதுக்கு மேல் மதிக்க முடியாத  சிறுவர்களும் வேலை செயவதை பார்க்க முடிந்தது.
ந்தப் பகுதி மக்களும், ஒரு தலைமுறை இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்களின் குழந்தைகளும் தோல் நிறுவனங்களில் வேலைக்கு போவதில்லை. “நம்ம கஷ்டம் நம்மோடு போகட்டும்” என்று வெளியிடங்களுக்கு வேலைக்குப் போகிறார்கள்.
பகுதி முழுவதிலும் தோலிலிருந்தும், கழிவு நீரிலிருந்தும், இரசாயனங்களிலிருந்தும் வரும் கடுமையான துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. ஆண் தொழிலாளர்களில் பலருக்கு குடிப் பழக்கம் இருக்கிறது. பெண்களுக்கு பான்பராக், குட்கா, ஹன்ஸ் போடும் பழக்கம் இருக்கிறது.
பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சு திணறல், தோல் வியாதிகள் அதிகமாக வருகின்றன. தொடர்ந்து இந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அது பழகி விடுகிறது, ஆனால புதிதாக வருபவர்களில் பலர் ஒரு சில வாரங்களிலேயே தாங்க முடியாமல் இடத்தை விட்டு போய் விடுவதாக கூறினார் ஒருவர். தீராத நோய்களுக்கு டாக்டரிடம் போனால், இந்தப் பகுதியை விட்டு போவதுதான் தீர்வு என்று பரிந்துரைக்கிறாராம்.
நிலத்தடி நீர் முழுவதுமாக கெட்டுவிட்டது. பித்தளை பாத்திரங்கள் கழுவி 2 மணி நேரத்திற்குள்ளாக அது அடர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது என்று பானையை காட்டினார்கள். பெண்கள் காலில் போடும் வெள்ளிக் கொலுசு சில நாட்களில் கருத்து விடுகிறதாம். உடல் நலக் குறைவால் மருத்துவரிடம் சென்றால் அந்தப் பகுதியில் வசிக்காதீர்கள் என்று மருத்துவர் கூறுகிறாராம். தொழிற்சாலையை ஒட்டிய பகுதிகளில் இயந்திரங்களின் அதிர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
1990-களின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியாகும் வடிநீர் அனகாபுத்தூர் அருகில் அடையாறு ஆற்றில் கலக்கிறது.
இங்கு உற்பத்தியாகும் தோல், மற்றும் தோல் பொருட்களில் பெரும்பகுதி மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து கூட பச்சைத் தோலை இறக்குமதி செய்து, இங்கு தோலாக பதனிட்டு, கழிவுகளை நமக்கு பரிசாக கொடுத்து விட்டு, நமது தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி தோல் பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி லாபம் சம்பாதிக்கின்றனர் தோல் துறை முதலாளிகள். அவர்கள் சில பத்து டாலர் விலைகளில் விற்கும் பொருட்களுக்கு பல நூறு அல்லது சில ஆயிரம் டாலர்கள் வரை விலை வைத்து விற்று லாபம் ஈட்டுகின்றனர் மேற்கத்திய முதலாளிகள்.
அன்னியச் செலாவணி ஈட்டுவதற்காக நம் நிலத்தையும், நீரையும் பாழ்படுத்தி, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது இந்த ஏற்றுமதி சார்ந்த தொழில். இதன் விளைவுகளை நாகல் கேணியில் மட்டுமின்றி ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் மக்கள் எதிர் கொண்டு வருகிறார்கள்.
-    வினவு செய்தியாளர்கள்