வெள்ளி, 3 ஜனவரி, 2014

தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம்: 1,000 மெகாவாட் மட்டுமே கிடைக்க வாய்ப்பு

சென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். வெளிமாநிலங்களில் மின்சாரம்:தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதை சமாளிக்கவும், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டும், வெளி மாநிலங்களில் இருந்து, மின்சாரம் கொண்டு வர, தமிழக அரசு திட்டமிட்டது. முதல்வரின் சீரிய முயற்சியால்.... வெளிய சொல்லாதீங்க செருப்பால் அடிப்பார்கள்...
ஆனால், அதிக திறன் கொண்ட மின்சாரம் கொண்டு வருவதற்கான, மின் வழித்தடம் இல்லாததால், கூடுதல் மின்சாரத்தை கொண்டு வர முடியவில்லை. இதே நிலை, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் காணப்படுகிறது. இப்பிரச்னை தீர, 'தேசிய மின் தொகுப்புடன், தென் மண்டல மின் தொகுப்பை இணைக்க வேண்டும்' என, தமிழகம் உட்பட, தென் மாநில அரசுகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, தேசிய மின் கட்டமைப்பை, தென் மாநில மின் கட்டமைப்புடன் இணைக்க, மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர்; கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் இடையே, 765 கி.வோ., திறன் கொண்ட, இரண்டு மின் வழித்தடங்கள் அமைக்கும் பணி துவங்கியது. பவர்கிரிட் நிறுவனம் மூலம், 815 கோடி ரூபாய் செலவில், 208 கி.மீ., தூரம் அமைக்கப்பட்ட, முதல் மின் வழித்தடம், நேற்று முன்தினம், செயல்பாட்டிற்கு வந்ததது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மின் வழித்தடங்களும், ஒரே மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரம், தமிழகத்தை உள்ளடக்கிய, தென் மாநிலங்களுக்கு, கொண்டு வரப்பட உள்ளது.


இதுகுறித்து, எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய மின் வழித்தடத்தில், 1,000 - 1,500 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம், கொண்டு வர முடியும். தற்போது, சோதனை முறையில், 100 மெகாவாட் மின்சாரம் கடத்தப்படுகிறது. தமிழக அரசு, சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,000 மெகாவாட் மின்சாரம், கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய வழித்தடத்தை பயன்படுத்தி, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.





மின் வினியோகம் எப்படி?
ஏற்கனவே வெளி மாநிலங்களில் உள்ள வழித்தடம் மூலம், ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் - அலமாதி, சென்னை; கர்நாடகாவின், கோலார் - தமிழ்நாட்டின், ஓசூரு; கர்நாடகாவின், பெங்களூரு - தமிழ்நாட்டின், சேலம் வழியாக, தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இவை அனைத்தும், 400 கி.வோ., மின் பாதை என்பதால், குறைந்த அளவில் மட்டும் மின்சாரம் பெறப்பட்டது. தற்போது, 765 கி.வோ., வழித்தடத்தில், தேசிய மின் கட்டமைப்பு, தென் மாநில கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், புதிய வழித்தடத்தில் அதிக திறன் கொண்ட மின்சாரம் கொண்டு வர முடியும் என, மின் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. மேற்கண்ட. நான்கு மின் பாதைகள் மூலம், மார்ச் முதல், தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வரப்பட உள்ளது. சோலாப்பூர் - ராய்ச்சூர் இடையே, இரண்டாவது மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்ற உடன், வேலூர் மாவட்டம், திருவலத்தில் அமைக்கப்படும், 765 கி.வோ., துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும்.






நிபுணர்கள் சொல்வது என்ன?
''தென் மண்டல மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டதன் மூலம், தமிழகத்துக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும். பற்றாக்குறையைப் போக்க, போதியளவு மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியாது,'' என, மின் பொறியாளர் சங்கத் தலைவர் காந்தி கூறியுள்ளார்.



இதுகுறித்து, அவர் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகியவை அடங்கிய, தென் மண்டல மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், பிற மாநிலங்களில் இருந்து, தென் மாநிலங்களுக்கு, மின்சாரத்தைக் கொண்டு வர, கூடுதல் வழித்தடம் கிடைத்துள்ளது. தென் மண்டலத்தின் மின் தேவை, 30 ஆயிரம் மெகாவாட்; பற்றாக்குறை, 9,000 மெகாவாட். எனவே, 1,000 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு வரும் கூடுதல் மின் வழித்தடத்தால், பெரிய பயன் கிடைத்துவிடாது. மேலும், மண்டலத்துக்கு இடையேயான மின் வழித்தடம் தான், இணைக்கப்பட்டுள்ளது; மண்டல எல்லைகளுக்குள் மின் வழித்தடம் இணைக்கப்படவில்லை. மின் வழித்தடங்களில், மின்சாரம் கொண்டு வர, ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான், முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீண்டகால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம் என்ற அடிப்படையில் உள்ள ஒப்பந்தங்களில், நீண்டகால ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்து, இடைக்கால ஒப்பந்தத்துக்கும், இதன்பின் குறுகிய கால ஒப்பந்தத்துக்கும், முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, 1,000 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள, கூடுதல் வழித்தடத்தால், தென் மாநிலங்கள் அனைத்துக்கும் சமமான பங்கீட்டு அடிப்படையில், மின்சாரம் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுவதில்லை. அந்தந்த மாநிலங்கள் செய்துள்ள, ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு தான், மின் வழித் தடத்தில் அனுமதி அளிக்கப்படும். தமிழகம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில், மின் கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்திருந்தால், மின்சாரத்தை கொண்டு வர முன்னுரிமை கிடைக்கும். ஆனால், தமிழகம் அதுபோன்ற ஒப்பந்தம் செய்துள்ளதா என்பதை, அரசு தான் தெரிவிக்க வேண்டும். தென் மண்டல மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டதால், தமிழகத்தில் நிலவும் கடும் மின்பற்றாக்குறை நீங்கிவிடும் என, எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வாய்ப்புண்டு. இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: