ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ஊழல் இல்லா ஆட்சி: தில்லி புதிய முதல்வர் கேஜரிவால் உறுதி !

தில்லி முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் (இடமிருந்து 4-வது) தனது அமைச்சரவை சகாக்களுடன் பொதுமக்களை நோக்கி கையசைக்கிறார். உடன்: (இடமிருந்து) சௌரவ் பரத்வாஜ், ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, சத்யேந்திர ஜெயின், கிரீஷ் சோனி, மணீஷ் சிசோடியா." தில்லி முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் (இடமிருந்து 4-வது) தனது அமைச்சரவை சகாக்களுடன் பொதுமக்களை நோக்கி கையசைக்கிறார். உடன்: (இடமிருந்து) சௌரவ் பரத்வாஜ், ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, சத்யேந்திர ஜெயின், கிரீஷ் சோனி, மணீஷ் சிசோடியா.
"தில்லியில் "ஆம் ஆத்மி' கட்சி உறுதி அளித்தது போல, ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கப்படும்; அதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்' என்று புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டார்.

தில்லியில் "ஆம் ஆத்மி' தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. ராம்லீலா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. இதையொட்டி, விழாவில் பங்கேற்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம், கௌஷாம்பியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அரவிந்த் கேஜரிவால் மெட்ரோ ரயில் மூலம் பாராகம்பா ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை காலையில் புறப்பட்டார். அங்கிருந்து கார் மூலம் அவர் ராம்லீலா மைதானத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தார்.
பதவிப் பிரமாணம்: அதைத் தொடர்ந்து, தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி, சௌரவ் பரத்வாஜ், சத்யேந்திர குமார் ஜெயின், ராக்கி பிர்லா, கிரீஷ் சோனி ஆகியோருக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அனைவரும் "இறைவனின் பெயரால்' எனத் தொடங்கி பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பதவியேற்பு முடிந்ததும் புதிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஆறு அமைச்சர்கள் ஆகியோருக்குத் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், தலைமைச் செயலாளர் ஸ்போலியா, பாஜக தில்லி பிரதேச மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான டாக்டர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
மக்கள் ஆதரவு தேவை: அதைத் தொடர்ந்து, ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியது:
"இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இது நானும், ஆறு அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்ட விழா அல்ல. தில்லிவாசிகள் அனைவரும் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்ட விழா. மக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதற்கான தருணம் இது. "ஊழலை ஒழித்து மக்களுக்கான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும்' என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கூறினோம். அதை அப்போது யாரும் நம்பவில்லை. ஆனால், இப்போது அந்த அதிசயம் நடந்துள்ளது. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஊழலுக்கு எதிரான முயற்சியில் இது ஒரு தொடக்கம்தான். உண்மையான போராட்டம் மிகப் பெரியது. அதை நாங்கள் மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. தில்லியின் ஒன்றரை கோடி மக்களும் சேர்ந்து ஆதரவளித்தால்தான் ஊழலை நம்மால் வேரோடு அறுக்க முடியும்.
அரசியல் சாக்கடை: ஊழலை எதிர்த்து இந்த மைதானத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். அவர் "அரசியல் ஒரு சாக்கடை' என்றார். ஆனால் "சாக்கடையில் இறங்கித்தான் சுத்தப்படுத்த வேண்டும்' என நான் அவரிடம் கூறினேன். "அரசியல் மோசமானது' என நினைப்பதுதான் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நம்முடன் இணைந்திருந்த சந்தோஷ் கோலியை இழந்தோம். அவருடைய ஆன்மா இப்போது பார்த்துக் கொண்டிருந்தால், நாம் செய்த தியாகம் வீண் போகவில்லை என நினைத்து மகிழும்.
அதிகாரிகள் உதவி: என்னிடம் பலர் "அதிகாரிகள் உங்களைப் பணி செய்ய விட மாட்டார்கள்' என்றனர். ஆனால் "பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையானவர்கள்; மக்களுக்காக உழைக்க விரும்புகின்றனர்' என்று நான் நம்பினேன். ஊழலை ஒழிக்க முடியும் என்பதை தில்லி அதிகாரிகள் நாட்டுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். நமக்குள் "ஈகோ' இருக்கக் கூடாது என்று கட்சியினரையும், பேரவை உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன். எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால், அச்சத்துடனும் இருக்கிறோம். அதே நேரத்தில் மக்கள் ஆதரவுடன் அரசை நடத்த எங்களால் முடியும். தவறுகள் செய்யாமல் உண்மை வழியில் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஹர்ஷ வர்தன் நல்லவர்: பாஜகவின் டாக்டர் ஹர்ஷ வர்தன் நல்ல மனிதர். ஆனால், அவர் சார்ந்த கட்சியைப் பற்றி அப்படிக் கூற முடியாது. தேசத்துக்காக நாங்கள் செய்வது சரி என நினைத்தால் கட்சிகளை மறந்து விட்டு எங்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என காங்கிரஸ், பாஜக தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் உறுதிமொழி ஏற்பு
தில்லி ராம் லீலா மைதானத்தில் பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் "லஞ்சம் கொடுக்க க் கூடாது என மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். யாராவது லஞ்சம் கேட்டால் "கொடுக்க மாட்டேன்' என கூறாமல் நாங்கள் ஏற்பாடு செய்யும் ஒரு தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவியுங்கள். ஊழல்வாதிகளை கையும் களவுமாக நாம் பிடிப்போம். மக்கள் உதவி செய்தால் மற்றவற்றை நாங்களும், கட்சியினரும் பார்த்துக்கொள்வோம்' என்றார். மேலும் "ஊழலுக்கு எதிராக மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, மைதானத்தில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்து நின்றனர். அப்போது அரவிந்த் கேஜரிவால் "நான் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன்' என்று கூற, அதை மக்கள் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அமைச்சர்கள் இலாகா விவரம்
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்: உள்துறை, நிதி, மின்சாரம், திட்டம், கண்காணிப்பு, பணியாளர் துறை.
மணீஷ் சிசோடியா: கல்வி, உயர் கல்வி, வருவாய், பொதுப்பணி, நகர்ப்புற வளர்ச்சி, கல்வி, உள்ளாட்சி, நிலம் மற்றும் கட்டுமானத் துறை.
சோம்நாத் பார்தி: நிர்வாக சீர்திருத்தம், சட்டம், சுற்றுலா.
செüரவ் பரத்வாஜ்: உணவு வழங்கல், போக்குவரத்து, சுற்றுச்சூழல், தேர்தல், பொது நிர்வாகம்.
ராக்கி பிர்லா: மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், சமூக நலம், மொழிகள்.
சத்யேந்திர குமார் ஜெயின்: சுகாதாரம், தொழில்துறை, குருத்வாரா தேர்தல்.
கிரீஷ் சோனி: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், வேலைவாய்ப்பு, வளர்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் துறை. dinamani.com

கருத்துகள் இல்லை: