வெள்ளி, 14 ஜூன், 2013

குவைத்தில் தூக்கு தண்டனையை நோக்கி இருக்கும் தமிழர்களை காப்பற்றுங்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ், மன்னார்குடி பிள்ளையான் மகன் காளிதாஸ் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் பிழைப்பு தேடி போனார்கள். இவர்கள் பணி செய்த இடத்தில் இலங்கையை சேர்ந்த பிரேமலதா, பாத்திமா ஆகிய இருவரும் வேலை செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு இவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் பாத்திமா கொலை செய்யப்பட்டார். தற்செயலாக இந்த கொலை நடந்ததாக இவர்கள் ஒத்துக் கொண்டனர். இந்த கொலைக்கு காரணமான சுரேஷ், காளிதாஸ் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனையும் பிரேமலதாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலையான பாத்திமாவின் உறவினர்கள் அம்மா, அண்ணன் ஆகியோரிடம் இந்தியா, இலங்கை தூதரகம் மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடந்ததில் இறந்த பாத்திமா குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்பட்டது.


இதன் பிறகு தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றினாலும் இறந்த எங்கள் பாத்திமா உயிருடன் வரப்போவதில்லை. அதனால் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக கொடுங்கள் என்று பாத்திமா குடும்பத்தினர் குவைத் மன்னருக்கு கருணை மனு கொடுத்தனர். இந்த மனு 3 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில் திங்கள் கிழமை காலை வேறு வழக்கில் உள்ள 3 பேருடன் சேர்த்து சுரேஷ், காளிதாஸ் இருவருக்கும் தண்டனையை நிறைவேற்ற தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவல் வெளியானதும் பதறிய அவர்களது பெற்றோர் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மனோஷ் குமாரிடம் நேரில் சென்று தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று  கதறி வருகின்றனர். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் இப்போது நக்கீரனின் உதவியை நாடியுள்ளனர்.
இது சம்மந்தமாக நாகை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜனிடம் இது பற்றி நக்கீரன் பேசியதுடன் அதற்கான ஆவணங்களையும் கொடுத்துள்ளது. தண்டனை நிறைவேற்றுவதை தடுக்கும் வேலைகள் நடந்து வருவதாக விஜயன் எம்.பி கூறியுள்ளார்.
இந்திய நாட்டு வெளியுறவு அதிகாரிகள் எடுக்கும் துரித நடவடிக்கைகள் தான் 2 தமிழர்களின் உயிர்களை காப்பாற்றும். அதிகாரிகள், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

 - இரா.பகத்சிங்.

கருத்துகள் இல்லை: