புதன், 12 ஜூன், 2013

Bihar CM நிதிஷ்குமார் BJP கூட்டணியில் இருந்து விலகல்

டெல்லி: பாஜகவிடமிருந்து முற்றிலும் விலகி விட ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் தலைநகர் பாட்னாவை விட்டு வெளியேற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளாராம். நரேந்திர மோடிக்கு பாஜகவில் முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிதீஷ் குமார் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் அவர்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் மூத்த தலைவர் அத்வானியையே ஓரம் கட்டி விட்டு மோடிக்கு பட்டம் சூட்ட பாஜக வரிந்து கட்டிக் கொண்டு தயாரான விதம் நிதீஷை கடும் அப்செட்டாக்கி விட்டதாம். இதனால் முற்றிலும் பாஜகவிடமிருந்து விலகி விடும் மன நிலைக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக குறித்து முக்கிய விவாதத்திற்குத் தயாராக இருக்கும் வகையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் யாரும் பாட்னாவை விட்டு வெளியேறாமல் தங்கியிருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளாராம். பாஜகவிடமிருந்து விலக இது பொருத்தமான நேரமா என்றும் தனது கட்சித் தலைவர்களுடன் அவர்ஆலோசித்து வருகிறாராம். கடந்த 2005ம் ஆண்டு முதல் பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இருக்கிறார். ஐக்கிய ஜனதாதளத்தின் கூட்டணிக் கட்சியாக பாஜக திகழ்கிறது. அதேசமயம், ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியை முறிக்கத் தயாரானால் அதைச் சமாளிக்க தாங்களும் தயாராக இருப்பதாக பாஜக தலைவரும், பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். பீகாரைப் பொறுத்தவரை அங்கு 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்கள் நிதீஷ் குமாருக்காகவே அவரது கூட்டணிக்கு வாக்களித்து வருகின்றனர். பாஜகவிடமிருந்து நிதீஷ் குமார் முழுமையாக விலகினால் அவர்களது ஆதரவும் நிதீஷுக்கே முழுமையாக கிடைக்கும் வாய்ப்புள்ளதுஎன்று ஐக்கிய ஜனதாதளம் கணக்குப் போடுகிறது. இந்த வாக்கு வங்கியை மனதில் கொண்டுதான் குஜராத் முதல்வராக உள்ள மோடியை பீகார் பக்கமே வரக் கூடாது என்றும் தொடர்ந்து கூறி வருகிறார் நிதீஷ் குமார். நிதீஷ் எடுக்கப் போகும் முடிவு பீகாருடன் நின்று விடுமா அல்லது தேசிய அளவில் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: