தமிழர்களின் ஒரே பாதுகாவலர் கருணாநிதிதான். அதனால்தான் உலகம் கடந்து அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. உலக சரித்திரத்தில் கிடைக்காத ஒரு தலைவர், நமக்கு கிடைத்திருக்கிறார். அவரை போல இனி கிடைக்க போவதும் இல்லை. பிறக்க போவதும் இல்லை. சேது சமுத்திர திட்டம், தமிழகத்தின் 150 ஆண்டு கனவு திட்டம். இந்த திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி பெறும். இந்தியாவுக்கு பெருமை சேரும். 2001 சட்டசபை தேர்தல் மற்றும் 2004 நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது நீதிமன்றத்துக்கு சென்று, இது தேவையில்லாத திட்டம் என அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை. கடந்த திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று அதிமுகவினர் சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் நடப்பது 110 ஆட்சி. 110 விதி என்பது கலவரம், புயல், வெள்ளச் சேதம் வரும்போது மட்டும் பயன்படுத்தக்கூடியது. இந்த விதியில் படிக்கப்படும் அறிக்கைகளை பாராட்டவோ, கேலி செய்யவோ, கேள்வி கேட்கவோ, குற்றச்சாட்டுகள் எழுப்பவோ முடியாது. இதுதான் சபை மரபு. இப்போது எதற்கெடுத்தாலும் 110-வது விதிதான்.
திமுக ஆட்சியில் 2 மணி நேரம்தான் மின்வெட்டு இருந்தது. ஆனால் மெஜாரிட்டி அதிமுக ஆட்சியில் பல மணி நேரம் மின்வெட்டு. சமச்சீர் கல்வி திட்டத்தை திமுக கொண்டு வந்தது. அதை நிறைவேற்றக் கூடாது என அதிமுகவினர் நீதிமன்றம் சென்றனர். அதற்கு நீதிமன்றம் தடை விதித்து நிறைவேற்றியது. சமச்சீர் பாட திட்டத்தால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்வதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 2011 ஆகஸ்ட் முதல் 2012 ஆகஸ்ட் வரையான புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 949 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 13 ஆயிரத்து 573 வழக்குகள்.
எங்கள் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆட்சியில் குற்ற வழக்குகள் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆதாரத்துடன் பேசுகிறேன். தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள். நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க தயார். கோயில் நகரமாக இருந்த காஞ்சிபுரம், தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது. 2 ஆண்டுகளில் 157 கொலைகள் நடந்துள்ளது. பெண்கள் வெளியே நடந்து செல்ல முடியவில்லை. அந்தளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதன் வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்துக்கு மீண்டும் தேர்தல் வராதா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார். கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜானகிராமன், தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி, தாம்பரம் நிர்வாகிகள் காமராஜ், ஆதிமாறன், இந்திரன், ராஜேந்திரன், பஞ்சாட்சரம், குறிஞ்சி சிவா, ராஜாங்கம், தனசேகர், ஏழுமலை, ராஜ்மோகன், மாடம்பாக்கம் பேரூர் செயலாளர் எல்.எஸ்.எஸ்.மோகன், செம்பாக்கம் சந்திரன், ஜெயபிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக