
டெல்லி: சவூதியில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாகக்
கூறி 200 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு கழிவறைகளை சுத்தம் செய்ய
வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் நிலை குறித்து இந்திய தூதரக
அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசத்தைச்
சேர்ந்த சுமார் 200 பேர் மும்பையைச் சேர்ந்த பஹாத் என்டர்பிரைசஸில்
ரூ.90,000 முதல் ரூ.150,000 பணம் கட்டி சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு
சென்றுள்ளனர். அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் அவர்களுக்கு வேலை என்று
கூறப்பட்டுள்ளது.
ஆனால் சவூதியை அடைந்த பிறகு அவர்களுக்கு கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை
கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சவூதிக்கு வந்த பிறகு கடந்த 2 மாதங்களாக
ஒழுங்காக சம்பளமும் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் அங்குள்ள இந்திய
தூதரகத்தில் இது குறித்து புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களை வேலைக்கு
எடுத்த வங்கதேச ஏஜெண்டுகள் 2 பேர் ரவுடிகளை வைத்து அவர்களை அடித்து
நொறுக்கியுள்ளனர்.
மேலும் வேலைக்கு வராவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்
என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் இந்திய ஊழியர்கள் பயத்தில் உள்ளனர்.
தங்களை யாரும் மேலும் தாக்காமல் காக்குமாறு அவர்கள் இந்திய தூதரகத்தை
கேட்டுக் கொண்டுள்ளனர்.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக