ஞாயிறு, 9 ஜூன், 2013

சென்னை : போலீஸ் நிலையத்தில் போலீசார்- வக்கீல்கள் அடிதடி

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 13-வது தெருவில் உள்ள ஒரு செருப்பு கடைக்கு நேற்று பகலில் கல்பனா என்ற பெண் செருப்பு வாங்க வந்தார். தனக்கு பிடித்தமான செருப்பை வாங்கி காலில் அணிந்து சென்றார். அவர் வீடு போய் சேருவதற்குள் செருப்பு அறுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கல்பனா தனது அண்ணன் சுரேசை அழைத்து கொண்டு செருப்பு கடைக்கு சென்றுள்ளார்.புது செருப்பு ஒரே நாளில் அறுந்ததால் வேறு புதிய செருப்பு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் புது செருப்பு தர முடியாது என்றும் அறுந்த செருப்பை தைத்து தருவதாகவும் கூறி இருக்கிறார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கை கலப்பும் நடந்துள்ளது.
< இந்த சம்பவம் பற்றி புகார் கொடுப்பதற்காக கல்பனாவும் அவரது அண்ணன் சுரேசும் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். இருவரும் போலீஸ் நிலைத்துக்கு புகார் கொடுக்க சென்றிருப்பதை அறிந்ததும் செருப்பு கடைகாரரும் வக்கீல் ஹேமநாத் என்பவரை அழைத்து கொண்டு புகார் செய்ய அதே போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் இருதரப்பினரிடமும் விசாரித்தார். கடைக்காரர் ஆபாசமாக திட்டி தாக்கியதாக கல்பனாவும், சுரேசும் கூறினார்கள். ஆனால் சுரேஷ்தான் கடைக்காரரை தாக்கியதாக வக்கீல் ஹேமநாத் கூறினார். இதனால் போலீசுக்கும் வக்கீல் ஹேமநாத்துக்கும் இடையே வாய்த்தகராறு உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமநாத் தனது வக்கீல் நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வக்கீல்களுக்கும் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென்று வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜனின் சட்டையை பிடித்து இழுத்ததில் பொத்தான்கள் அறுந்து விழுந்தது. பலத்த சத்தத்துடன் தகராறு நடந்ததை கேட்டதும் பக்கத்து அறைகளில் பணியில் இருந்த போலீசார் ஓடி வந்தனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். இதனால் போலீஸ் நிலையம் போர்க்களமானது. போலீஸ் நிலைய வரவேற்பறையில் இருந்த 5 அடி உயர கண்ணாடி உடைந்தது. டி.வி., நாற்காலிகளும் உடைந்து விழுந்தது. போலீஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியும் தப்பவில்லை. இரவு 10 மணிக்கு தொடங்கிய மோதல் 12 மணிவரை தொடர்ந்தது.இந்த மோதலில் போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீஸ்காரர்கள் சோனமுத்து, அரவிந்த், ஜெயமூர்த்தி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வக்கீல்கள் தரப்பில் மைக்கேல், ரஞ்சித் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது மக்கள் பெருமளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்ததும் இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர்கள் கோவி மனோகரன், முருகேசன், ராஜேந்திரகுமார் ஆகியோர் விரைந்து வந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: