Vasu Sumathi : அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி 12 மணிநேரத்தில் கண்டுபிடித்து கைது. 5 மாதத்தில் வழக்கு முடிந்து, 30 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவேற்றல்.
கோவை சம்பவத்தில், ஒரு மணி நேரத்தில் 50 போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இரவு முழுக்க 100 போலீசார் தேடுதல் வேட்டை. 30 மணிநேரத்தில் குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு.
கூடிய விரைவில் அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
விரைந்து செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பாராட்டுக்கள்!
சட்டத்தின் ஆட்சி என்றால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத ஆட்சி என்று பொருள் இல்லை.
நடந்தால் குற்றமிழைத்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா, அரசு மீதும் போலீஸ் மீதும் அவதூறு பரப்பி தன் பொச்சரிப்பை தீர்த்துக்கொள்ள காத்திருக்கும் பிணம் தின்னி கழுகுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு அரசையும் காவல்துறையையும் கேள்வி கேட்கும் உரிமை நிச்சயம் உண்டு. அதில் மாற்று கருத்தேயில்லை.
குறிப்பாக பொது அமைதி குலைந்தால், நிலைமை சரியாக கையாளப்படவில்லை என்றால், அதிகார துஷ்பிரயோகம் நடந்தால், மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டால் — அரசும் காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். அது ஜனநாயகம் தழைக்கவும் காவல்துறையை நெறிப்படுத்துவதற்கும் அவசியமான ஒன்று.
ஆனால் உலகிலுள்ள எந்த காவல்துறையாலும் முழுமையாகத் தடுக்க முடியாத குற்றங்களுக்குக் கூட காவல்துறையையே குறை கூறுவது முற்றிலும் தவறு. இது பல நேர்மையான காவலர்களின் மன உறுதியைத் தகர்த்துவிடும்.
குற்றம் என்பது பெரும்பாலும் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேடுகளின் விளைவு. பரம்பரை பழக்கம், முறைகேடுகள், ஒழுக்கமின்மை, கல்வியின்மை, போதை பழக்கம், கோபம், வெறுப்பு, பேராசை, சாதி மோதல்கள் — இவைகளே குற்றங்கள் ஏற்பட முக்கியமான காரணிகள். அது தெரிந்திருந்தும், நாம் சமூகத்தைப் ஒரு நாளும் கேள்வி கேட்க மாட்டோம், கேட்கவும் முடியாது. பழியை எளிதாக காவல்துறையின் மீது போட்டுவிட்டு, அப்பாடா என்று நம் வேலையை பார்க்க சென்று விடுவோம்.
மீண்டும் சொல்கிறேன். குற்றம் நடந்தப்பின் அதை தன் முழு பொறுப்பிற்கு கொண்டு வருவதும், முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவதும் காவல்துறையின் கடமையே. ஆனால் குற்றமே நடக்காமல் 100% தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலகில் எந்த நாடும், எந்த காவல்துறையும் இது வரை சாதிக்காத ஒன்று என்பதை நினைவில் கொள்ளுவோம்.
அதெல்லாம் தெரியாது, தமிழ்நாட்டுல ஒரு குற்றமும் நடக்க கூடாது என்றால் தமிழ்நாடு குறைந்தபட்சம் ஒரு கோடி காவல் பணியாளர்கள் வேண்டும். அப்போது கூட, பொது வெளியில்தான் குற்றம் நிகழாமல் தடுக்க முடியும்.
அவ்வளவு பேர் இருந்தாலும் 'படுக்கை அறையில் இரவு ஒன்றாக படுத்துறங்கிய கணவன், மனைவியின் கழுத்தை நெறித்து கொலை' என்ற செய்தி வரும். இதை தடுக்க என்ன செய்ய முடியும்?
ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு காதலர்களுக்கு அருகிலும் ரோந்து சென்று கண்காணிக்க அவ்வளவு பெரிய படையை எந்த அரசாவது உருவாக்குமா?
அத்தகைய கண்காணிப்பு செய்யும் ஒரு அரசின் போக்கு நம் ஜனநாயகத்துக்கும், சமூகத்துக்கும் ஏற்புடையதா?
பதில் எல்லோருக்கும் தெரியும்.
காவல்துறை அதன் கடமையைச் சரிவரச் செய்வதில் உறுதியுடன் செயல்படுகிறது. உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதில் முழு முயற்சியையும் காட்டுகிறது. சட்டத்தை அமல்படுத்துகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட ஆயிரமாயிரம் குற்றங்களுக்கு நாம் அவர்களை பாராட்டுவதே கிடையாது.
ஏழரை கோடி மக்கள் உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு குற்றம் நடந்துவிட்டால், நாடே அதை பற்றித்தான் பேசும். தவறில்லை. ஆனால் அதற்கு காரணம் போலீஸ்தான் என்று குற்றம் சுமத்துவது அபாண்டமில்லையா?
காவல்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். சட்டத்தை மீறி அதிகார துஷ்பிரயோகத்திலும் ஊழலிலும் ஈடுபடும் தனிநபர்களை கண்டிப்போம். நாம் வாழும் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சில புல்லுருவிகள் செய்யும் தவறுகளுக்கு காரணமே காவல்துறைதான் என்று பழிபோடுவது அறம் அல்ல. அவர்களும் மனிதர்களே.
'போலீசிங்' என்பது ஒரு மந்திரக்கோல் அல்ல - அது ஒரு கூட்டுப்பணி. நியாயமான விமர்சனமும், புரிதலும், ஆதரவும் அவர்களுக்கு கிடைத்தால் — காவல்துறை இன்னும் சிறப்பாகப் பணியாற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக