சத்திய சாய் அறக்கட்டளைக்கு யார் தலைவராக பொறுப்பேற்பது என்று நீடித்து வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அதன் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
புட்டபர்த்தி சாய்பாபா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி இறந்தார். அவர் உருவாக்கிய சத்திய சாய் அறக்கட்டளையின் தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இந்தப் பிரச்னையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து பேசி சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்று ஆந்திர அரசு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், அறக்கட்டளையின் தலைவர் பொறுப்புக்கு சாய்பாபாவின் தம்பி மகன் ரத்னாகருக்கும், சத்யஜித்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. வாரிசு என்பதால், ‘இந்தப் பதவிக்கு தகுதியான நபர் நான்தான்’ என்று ரத்னாகர் கூறுகிறார். அதே சமயம், ‘பாபாவின் அரவணைப்பில் வளர்ந்த எனக்குத்தான் அறக்கட்டளையின் தலைவர் பதவியைத் தரவேண்டும்’ என்றார் சத்யஜித்.
சக்ரவர்த்தி, இந்துலால் ஷா ஆகிய உறுப்பினர்கள் தங்கள் வயோதிகத்தைச் சுட்டிக்காட்டி போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர். இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக, தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ். நிறுவனத்தின் சீனிவாசன்தான் இந்த அறக்கட்டளைக்குப் புதிய தலைவராக பொறுப்பேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் தனக்கு பொருளாளர் பதவி கொடுத்தால் போதும் என்றும், தலைவரோடு சேர்த்து எனக்கும் ‘செக் பவர்’ தரவேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கு மற்ற உறுப்பினர்களும் சம்மதித்துவிட்டதாக அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க மே 8-ம் தேதி அறக்கட்டளை உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அறக்கட்டளை, அரசு கைக்கு மாறுவதை உறுப்பினர்கள் யாரும் விரும்பவில்லை. அனைத்து உறுப்பினர்களுக்கும் பாபாவுக்கு நெருக்கமான சீனிவாசனை தலைவராகவும், ரத்னாகரை பொருளாளராகவும் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்வார்கள் என்றே தெரிகிறது.
பாபா இறந்தது எப்போது?
பாபா கடந்த மாதம் 24-ம் தேதி இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கான சவப்பெட்டி பெங்களூருவைச் சேர்ந்த ரவீந்திராரெட்டி என் பவரால் ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஏப்ரல் 5-ம் தேதியே புட்டபர்த்திக்கு வந்துவிட்டது. இதை வைத்துப் பார்க்கும் போது மார்ச் 30-ம் தேதியே பாபா இறந்திருக்கக்கூடும் என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள் பக்தர்கள். அறக்கட்டளை சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பதற்காகவே 24 நாட்கள் பாபா உடல் ரசாயனக் கலவையின் மூலம் பாதுகாக்கப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக