திங்கள், 9 மே, 2011

கோ - இவன் ரொம்ப நல்லவன்’ என பார்வையாளன் நம்பி படம்

               ஒரு பத்திரிக்கையின் தலையங்க செய்தியால் ஆட்சியை மாற்றியமைக்க முடியும் என்ற பத்திரிக்கையின் மகத்துவத்தை உணர்த்தும் படமாகவே ’கோ’ இருக்கிறது.  பத்திரிக்கை புகைப்படக்காரராக இருந்து ஒளிப்பதிவாளர் இயக்குனர் என்று மாற்றம் பெற்ற கே.வி.ஆனந்த், படம் முழுக்க கேமராவை ஆயுதமாக பயன்படுத்தும் ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரரின் கதையை படமாக கொடுத்திருக்கிறார்.



பத்திரிக்கை சுதந்திரம் என்பது என்ன? அவை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கம் படத்தில் உள்ளது. மிக முக்கியமாக சில அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களை அம்பலப்படுத்த பத்திரிக்கைகள் எப்படி செயல்படுகிறது என்பதையும் காலையில் கையில் காஃபியோடு பேப்பர் படிக்கிற வாசகனுக்கு அந்த செய்திகள் உருவாகிற விஷயங்களையும் மிக சுவாரஸ்யமாக சொல்லலியிருக்கிறது கோ.    

ஜீவா ( அஷ்வின் ) தின அஞ்சல் பத்திரிக்கையில் புகைப்படக்காரர். அதே பத்திரிக்கையில் பணி புரிபவர்கள் கார்த்திகா (ரேணு) மற்றும் சரோ (பியா). சிறகுகள் இயக்கத்தின் தலைவர் அஜ்மல் (வசந்தன் ). தற்போது இருக்கிற அரசியல் சூழல் மாற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது சிறகுகள் கட்சியின் கனவு. 

ஆனால் புதியவர்களின் பேச்சைக் கேட்க மக்களுக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை. அப்படி இருக்கும் போது ஒட்டு மொத்த மக்களின் பார்வையும் சிறகுகளின் பக்கம் திரும்புகிறது. அதற்கு காரணம் தின அஞ்சல் பத்திரிக்கையில் வெளிவந்த ஜீவா எடுத்த ஒரு முன்பக்க புகைப்படம். இருக்கிற அரசியல் கட்சிகள் செய்யும் சில கீழ்த்தனமான செயல்கள் சிறகுகள் இயக்கதிற்கு சாதகமாய் அமைந்துவிட, தேர்தலில் சிறகுகள் வெற்றி பெருகிறது.  அஜ்மல் முதல்வராகிறார். 

ஆனால் அதன் பிறகு தான் காத்திருக்கிறது திடுக்கிடும் ஆச்சரியங்களும் திருப்பங்களும்! ஜீவா எடுக்கும் புகைப்படங்கள் சிறகுகள் இயக்கத்திற்கு சாதகமாகவே அமைகிறது என்றால்... ஜீவாவிற்கு அவர்களோடு தொடர்பு உள்ளதா? இந்தக் கேள்விக்குறிக்கு பல ஆச்சரியகுறிகளோடு விடை கொடுக்கிறது படத்தின் இரண்டாம் பாதி!

ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஜீவா மெனக்கெடுவது சுவாரஸ்யம். எதிர்கட்சி தலைவராக இருக்கும் கோட்டா சீனிவாசராவ், ஜோசியர் சொன்னதற்காக சிறுமியுடன் திருமணம் செய்துகொள்வதை மறைமுகமாக ஜீவா படம் எடுத்து அங்கேயே இண்டர்னெட் இணைப்போடு லேப்டாபில் போட்டோக்களை ஈ-மெயில் செய்து பத்திரிக்கையின் முன் பக்கத்தை மாற்றி அமைப்பது, பத்திரிக்கை எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை உணர்த்தும். 

பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்து கேமராமேன் இறந்த பிறகும் அதில் பதிவுசெய்யப்பட்ட வீடியோவின் மூலம் பியாவை கொலை செய்தது யார் என்று ஜீவா கண்டுபிடிப்பது இன்னொரு அசத்தல் காட்சி!  

ஜீவாவின் துறுதுறு நடிப்புக்கு ஒரு சபாஷ்! கார்த்திகா சமீபத்திய ஹாட் ஹீரோயின் லிஸ்டில் விரைவில் சேர்க்கப்படுவார். பாடல் காட்சிகளில் அவ்வளவு தாராளம். பியா கொஞ்சம் காமெடிக்கு உதவுகிறார். ஆளும் கட்சி தலைவராக இருக்கும் பிரகாஷ் ராஜ் வழக்கம் போலவே தேவைக்கேற்ற நடிப்பு. ஒரு காட்சியில் வந்தாலும் சோனா ஜமாய்க்கிறார். ரசிகர்கள் அதிகம் சிரித்த காட்சி சோனா வந்த காட்சிதான்.  

பாடல்கள் ஆல்ரெடி ஹிட்! குவியமில்லா... கார்க்கியின் வார்த்தைகளும் சரி ஹாரிஸின் மெட்டும் சரி எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. ஒரு விறுவிறுப்பன நாவல் படித்த அனுபவம் சுபாவின் கதை அமைப்பில்.

தன் வழக்கம் போலவே ஒரு சீரியஸான விஷயத்தை கையில் எடுத்த கே.வி.ஆனந்த் அதே வழக்கம் போல அதை படு கமர்ஷியலாகிப் படையல் வைத்திருக்கிறார். 

ஹீரோ ஹீரோயினைத் தவிர அவர்களோடு பயணிக்கும் இன்னொரு கேரக்டர், அந்தக் கேரக்டருக்கு உண்மையெல்லாம் தெரியவைத்து யாரிடமும் சொல்லாமல் சாகடித்துவிடுவது, தான் நேசித்த ஒருவர் இறந்தபோதும் கூட ஃபாரின் லொகேஷனில் பறந்து பறந்து டூயட் பாடுவது, ‘இவன் ரொம்ப நல்லவன்’ என பார்வையாளன் நம்பி படம் பார்க்கிற ஒரு கேரக்டரை அப்படியே எதிர்மறையாக்கி படத்தில் நடிக்கும் மற்ற கேரக்டர்களோடு சேர்த்து பார்வையாளனையும் ஏமாற்றிவிடுவது என கே.வி.ஆனந்த் ஸ்டைல் இதிலும் தொடர்கிறது... 

கோ - கோபம் + கொண்டாட்டம்!

கருத்துகள் இல்லை: