செவ்வாய், 10 மே, 2011

துணை நடிகை படுகொலை சினிமா தயாரிப்பாளர் கைது

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் வக்கீல் தமிழரசன் (40). சினிமா தயாரிப்பாளர், பைனான்சியர். மண்டபம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர், செங்கல்பட்டு ஏடிஎஸ்பியிடம் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘‘திருவல்லிக்கேணியை சேர்ந்த கவிதா, சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த அலமேலு ஆகியோருடன் காரில் பழைய சீவரத்தில் உள்ள கோயிலுக்கு புறப்பட்டேன். திருமுக்கூடல் பாலம் அருகில் வந்தபோது, 6 பேர் கும்பல் வழிமறித்து, கவிதாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டனர். பயத்தில் நானும் அலமேலுவும் காரில் இருந்து இறங்கி ஓடி விட்டோம்’’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, திருமுக்கூடல் பாலம் அருகில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவிதாவை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். முன்னதாக, அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், ‘‘வக்கீல் தமிழரசன் என்னை காரில் அழைத்து சென்று, கத்தியால் குத்தினார். இறந்துவிட்டதாக நினைத்து பாலத்தின் கீழ் வீசிவிட்டு சென்று விட்டார்’ என்றார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் மற்றும் அவருடன் வந்த பெண்ணிடம் விசாரித்தனர். இதில், ‘சோழிங்கபுரம்‘ என்ற பெயரில் தமிழரசன் படம் தயாரித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட கவிதா, துணை நடிகை என கூறப்படுகிறது. கவிதா, எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட தமிழரசன், அலமேலு ஆகியோரை திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ‘எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை. போலீசார் என்னை கட்டாயப்படுத்துகின்றனர்’ என்று கூறினார். இதையடுத்து, தமிழரசனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார். வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: