திங்கள், 9 மே, 2011

From Jaffna 80 சதவீத லொறிகள் வெறும் லொறிகளாவே கொழும்புக்குச் செல்வதாகவும்



20% லொறிகளில் மட்டுமே யாழிலிருந்து பொருள்கள் செல்கின்றன

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் லொறிகளில் 20 சதவீத லொறிகளில் மாத்திரமே யாழ்ப்பாணத்து உற்பத்திப் பொருள்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக யாழ் வர்த்தகர் சங்கத் தலைவர் இரட்ணவடிவேல் ஜெயசேகரம் தெரிவித்தார். மிகுதி 80 சதவீத லொறிகள் வெறும் லொறிகளாவே கொழும்புக்குச் செல்வதாகவும், யாழ்ப்பாணத்தில் படைத்தளபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

"போர் ஆரம்பித்து அழிவுகளைச் சந்திக்க முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் லொறிகளில் ஏராளமான உற்பத்திப் பொருள்கள் கொழும்புக்கு எடுத்துச்செல்லப்பட்டன. எல்லா லொறிகளுமே அதிகளவு பொருள்களுடனே சென்றன. சமயங்களில் யாழ்ப்பாணத்து உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு போதிய லொறிகள் இருப்பதில்லை. அந்தளவுக்கு நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்திருந்தோம்" என்று இங்கு தெரிவித்த ஜெயசேகரம், "துரதிர்ஷ்டவசமாக போர்க்காலத்தில் ஏற்பட்ட அழிவுகளால் இப்போது மிகக் குறைந்தளவு லொறிகளிலேயே யாழ்ப்பாணத்து உற்பத்திகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

கொழும்பிலிருந்து பொருள்களை ஏற்றிவரும் லொறிகளில் 80 சதவீத லொறிகள் எதுவித பொருள்களையும் ஏற்றாது வெறும் லொறிகளாவே திரும்பச் செல்கின்றன" என்றார். விவசாய, மீன்பிடி உற்பத்திகள் மாத்திரமன்றி கைத்தொழில்துறையும் யாழ்ப்பாணத்தில் வீழ்ச்சியடைந்துவி்ட்டது என்றும் குறிப்பிட்ட அவர், இது இங்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியையே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலைமையை மாற்றி யாழ்ப்பாணத்தில் உற்பத்தித் துறையும், வர்த்தகமும் வளர்ச்சி காண்பதற்கு அரசாங்கமும், வங்கிகளும் உதவி புரியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த வர்த்தகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம், வர்த்தகம் முன்னேற்றம் காண்பதற்கு சட்டம் ஒழுங்கு சரியாகப் பேணப்படுவதும் அவசியமானது என்று தெரிவித்தார். போர்ச்சூழலி்ல் இங்கே அதிகளவு கப்பம் வாங்கும் நிலைமை காணப்பட்டது உண்மையே. ஆனால், இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. இனிமேல் இந்த நிலைமை ஏற்பட இடமளிக்கப்போவதில்லை என்று படைத்தளபதி ஹத்துருசிங்ஹ அவர்கள் உறுதியளித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார் அவர்.

வர்த்தகர்களினதும், யாழ் மக்களினதும் நீண்ட நாள் கோரிக்கையான உயர் பாதுகாப்பு வலய நீக்கப் பணிகள் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சிதரும் விடயம் என்றும் குறிப்பிட்ட அவர், இது தொடர்ந்தால் யாழ்ப்பாணத்தில் பொருளாதாரம் முன்னேற்றம் காணும் என்றும் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: