வெள்ளி, 13 மே, 2011

அசுர பலத்துடன் ஆட்சிக்கு வரும் ஜெ.-நல்லாட்சி தருவாரா?

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்து வந்த சிறுபான்மை ஆட்சியை முடித்து, மீண்டும் மெஜாரிட்டி ஆட்சியை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார் ஜெயலலிதா.

1948ம் ஆண்டு பிறந்தவர் ஜெயலலிதா. தமிழ் அய்யங்கார் குடும்பத்தில் பிறந்த அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கோமளவள்ளி. பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் மகளிர் உயர் நிலைப்பள்ளியில் ஆரம்பப் படிப்பை முடித்த ஜெயலலிதா பின்னர் தனது தாயார் சந்தியாவுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்த அவர் கல்வியில் சிறந்து விளங்கினார். மேல் படிப்புப் படிக்க கல்வி உதவித் தொகை கிடைத்தும் கூட அதை நிராகரித்து விட்டு தனது தாயார் வழியில் அவரும் நடிகையானார். ஜெயலலிதா என்ற பெயருடன் நடிக்க ஆரம்பித்தார்.

கன்னடப் படத்தில்தான் முதலில் நடித்தார் ஜெயலலிதா. பின்னர் ஆங்கிலப் படம் ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் மேலும் சில கன்னடப் படங்களில் நடித்த அவர் தமிழுக்கு வந்தார். வெண்ணிற ஆடை படம்தான் தமிழில் அவருக்கு முதல் படம்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துப் பெயர் பெற்றார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த பின்னர் அவரது சூழ்நிலையும், அந்தஸ்தும் மாறியது, உயர்ந்தது.

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்ததன் மூலம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் அவருக்கும் ஒரு இடம் கிடைத்தது. எம்.ஜி.ஆர். பின்னர் அதிமுகவைத் தொடங்கிய போது அதில் அவரும் இணைந்தார். அதிமுகவினர் மத்தியில் ஜெயலலிதாவுக்கு புதிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. எம்.ஜி.ஆரின் வாரிசாக பார்க்கப்பட்டார். அது வீண் போகவில்லை.

அதிமுகவில் சேர்ந்த பின்னர் 1988ம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் கட்சி உடைந்தபோது ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக பிளவுபட்டது. இருப்பினும் தேர்தலில் மக்கள் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கே ஆதரவு தந்தனர். இதைத் தொடர்ந்து இரு பிரிவுகளும் ஒன்றாக இணைந்தன - ஜெயலலிதா தலைமையில்.

பின்னர் 1989ம் ஆண்டு சேவல் சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. அப்போதைய தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரானார்.

முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். எம்.ஜி.ஆர் போல இவரும் அசைக்க முடியாத முதல்வராக இருப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் ஆட்சியின் கடைசிக்காலத்தில் அவரது செயல்பாடுகள் அவர் மீது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.

வளர்ப்பு மகன் திருமணம், ஊழல் புகார்கள் காரணமாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை நிலவியது. இதைப் பயன்படுத்தி 1996ல் நடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.

இருப்பினும் 2001ல் நடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றார் ஜெயலலிதா. அதற்கு அவர் அமைத்த மிகப் பெரிய கூட்டணியும் காரணம்.

இருந்தாலும் இந்த ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட சில காரணத்தால் 2006ல் நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தார் ஜெயலலிதா. இருப்பினும் திமுகவுக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்கவில்லை.

தற்போது மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியுள்ளார் ஜெயலலிதா. மேலும் தமிழகத்தில் இடையில் விட்டுப் போயிருந்த மெஜாரிட்டி ஆட்சியை மீண்டும் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.

ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சியில் பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றில் அவர் விடுதலையாகி விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட சில மட்டுமே இன்னும் நிலுவையில் உள்ளன.

ஜெயலலிதா மீதான வழக்குகள் இருந்தபோதும் மக்கள் மத்தியில் அவருக்கு மீண்டும் மிகப் பெரிய அளவில் செல்வாக்கு கூடியிருப்பது அதிமுகவினரை குஷியடைய வைத்துள்ளது.

ஜெயலலிதா தற்போது 6வது முறையாக எம்.எல்.ஏவாகிறார். முதல் முறையாக அவர் 1989ம் ஆண்டு போடியில் போட்டியிட்டு வென்றார். 1991ல் பர்கூரில் போட்டியிட்டு வென்றார். 1996ல் மீண்டும் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா அங்கு தோல்வி அடைந்தார்.

2001ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். பின்னர் 2006ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

தற்போதைய தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா அங்கும் வெற்றியைப் பெறுகிறார்.

மேலும் தற்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வராகிறார்.

முதல் முறையாக 1991 முதல் 96 வரை முதல்வராக இருந்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2002 முதல் 2006 வரை முதல்வராக இருந்தார்.

கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் பல நல்ல விஷயங்களையும் அவர் செய்துள்ளார். அதில் மிக முக்கியமானது சென்னைக்கு வீராணம் தண்ணீ்ரைக் கொண்டு வந்தது. இன்று சென்னை மக்கள் குடிநீருக்கு பெரும் தவிப்புக்குள்ளாகாமல் தப்பிப் பிழைக்கக் காரணமே இந்த புதிய வீராணம் குடிநீர்த் திட்டம்தான். இது ஜெயலலிதா ஆட்சியில் மிகப் பெரிய சாதனை.

அதேபோல லாட்டரிச் சீட்டை ஒழித்தது, மணல் அள்ளுவதை அரசுடமையாக்கியது, மது விற்பனையை அரசுடமையாக்கியது, சிறைகள் கோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங்கை அறிமுகப்படுத்தியது, மழை நீர் சேமிப்புத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் போன்றவை ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்கள்.

அதேபோல இன்னொரு முக்கியத் திட்டம் தொட்டில் குழந்தைத் திட்டம். இந்தத் திட்டத்தைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

கடந்த ஆட்சிக்காலத்தின்போது அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை, கோவில்களில் ஆடு கோழி பலியிடுவதை தடை செய்தது, கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் போன்றவைதான் ஜெயலலிதாவுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்த காரணமாகி விட்டது.

இருப்பினும் மிகுந்த எதிர்ப்புகள், கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன், மிகப் பெரிய வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்துள்ள ஜெயலலிதா கடந்த காலங்களில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளதாக தெரிகிறது.
English summary
ADMK Chief Jayalalitha has brought back the Majority govt to TN with a massive win in Assembly polls. She is entering the assembly for 6th time. And also she is going to be the CM for 3rd time in her political carrier.

கருத்துகள் இல்லை: