திங்கள், 9 மே, 2011

Leena Manimekalai: 'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

கவிஞர், இயக்குநர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கிவருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக் கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடது சாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்கரியம் எனது தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் 'செங்கடல்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் அகதிகள் மற்றும் தமிழக மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டிருக்கும் இப்படம் தணிக்கை குழுவினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தத் தணிக்கையை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடிக்கொண்டிருக்கும் லீனா வல்லினத்தோடு தீர்க்கமாகவும் உற்சாகமாகவும் உரையாடினார்.
உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?

வயதுக்கு வந்த நேரம், என் அம்மா அருகில் இல்லை, கிராமத்திற்கு எதோ காது குத்திற்குப் போயிருந்தார்கள். அப்பாவிடம், " கிலி பிடித்த குரலில், அப்பா, பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்" என்று சொன்னேன். வெரிகுட் என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்துக் கேட்ட ஒரே கேள்வி, நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும் என்று! இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து எதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள்.

உங்கள் கேள்வி ஏதோ இதைத் தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.

உங்களின் தொடகக்கால எழுத்தின் வகை என்னவாக இருந்தது? இன்றைய மன நிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என் தொடக்க கால எழுத்து, முதல் காதலின், அந்த காதல் தந்த முத்தம் போன்றவை. என் குழந்தமை வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறு போல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலகட்டங்களின் சாட்சி தானே எழுத்தும்.

ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககால கட்டம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.

பெரும்பாலும் ஆண்களே இயங்கி கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தது?

பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள். அதே மனநிலைதான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். பாலுறுப்புகளின் வடிவம் பார்த்து ஆணா, பெண்ணா, வேறா, ஆண்பிரதியா, பெண் பிரதியா, வேறு பிரதியா என்று வரையறை செய்து விட முடியாது என்பதை என் தீவிரத்தை தொடர்வதற்காக நம்ப விரும்புகிறேன் .

இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயத்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?

உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயுத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம்,எண்ணம், செயல், கருத்து, அரசியல்,வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்றி சொச்சம் வயது தானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். நமக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில் நுட்பம் எதுவும் வசப்படாத போதும் உரையாடிக் கொண்டு தானே இருந்தோம்.புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு , அதைக் கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.

தொடக்ககால ஆயுத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களை திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடு தான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். எனக்கு தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், அவற்றின் கூடிய இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள் தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம். பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக் கொண்டு கவியரங்கங்களில் பங்கு கொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, பிராக்டிகல் வொர்க்ஷாப்புகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காக தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தை தேர்வு செய்தது,, கவிதையை தீவிரமாக பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்பருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.

கி.மு. கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர், இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமா கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி டிக்ஷனரிகளை கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களை தான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடு கூடத் தான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.

கல்லூரி காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும் தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபத்துவ செட்அப்பாக சினிமாத் துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தை தொடங்கினேன்

எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?

எஎம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது? ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை? ஏன் ஒரு சாரார் மற்றும் சமமாக நடத்தப் படுவதில்லை? ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? இந்த ஏற்றத்தாழ்வின் ப்ரோக்ராம்மிங்கை யார் செய்கிறார்கள்? என்ற கேள்வி தான் நம் எல்லோருடைய சிந்தனைக்கு வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பன்னாம் பெரிய தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால் தானே இருக்கின்றன.

மிகுதி மீண்டும் தொடரும்

கருத்துகள் இல்லை: