புதன், 6 நவம்பர், 2019

பெரியார் பேணிய பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 )

Thulakol Soma Natarajan : பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 )

எம்.எல்.பிள்ளை என்றும் கா. சு.பிள்ளை என்றும் அறியப்பட்டவர்
நெல்லைச் சீமை' தமிழுக்களித்த நற்றமிழ் வளர்த்த கா.சு. பிள்ளை.
இந்திய அளவில் நடந்த சட்ட நூல் ஆய்வுப் போட்டியில் வெற்றி பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் பட்டத்தை வென்று 10 ஆயிரம் வெண் பொற்காசுகள் பரிசாகவும் பெற்றவர்.
இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் பொழிப்புரை ஆகியவை,
பிற்கால வரலாற்று நூல்களும், திருக்குறள் உரைகளும் எழுதியவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன.
இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று வறுமையில் வாடிய இவரை செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியமர்த்தி ஆதரித்தார்.
சைவர். ஆனால் முற்போக்காளர் .
இவர் நினைவாக " பல்கலைப்புலவர் தமிழ்க் கா.சு. நூறு" என்ற நூலில் 100 அறிஞர்கள் இவர் புகழ் பாடும், கட்டுரைகள், கவிதைகள் படைத்துள்ளனர்.
அதில் முதற்கட்டுரை பேரறிஞர் அண்ணா எழுதியது. அதில் ஒரு சிறு பகுதி இது......
. "சைவமாம் கடலில் நீந்திச் செல்லும் போது எதிரே வந்த சில சீர்திருத்தமாம் பொற்றுரும்புகளை எம்மிடம் வீசி எறிந்துவிட்டு
மீண்டும் அச்சைவக் கடலிலேயே நீந்திச் சென்றவரைச் சைவ உலகம் கைவிட்டு விட்டதென்றால் அது பெரிதும் வருந்தத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும் "

(காண்க: மேலது நூல்/ பக்கம் - 2)
காசு.பிள்ளை தமிழ் நாட்டில், தமிழராக சைவக் குடும்பத்தில் பிறந்ததால் அவருடைய அருமை பெருமை பாராட்டப் படவில்லை என்று அவரின் அன்னையார் ஆதங்கப்பட்டிருக்கிறார்" என்று மேலது நூலைத் தொகுத்த மீ.சு.இளமுருகு பொற்செல்வி குறிப்பிட்டுள்ளார்
ஆம், புகழ் பெற்ற இந்தச் சட்ட மேதை மேல் சாதியில் பிறந்திருந்தால் உலகப் புகழ் பெற்றிருப்பார். குடத்துள் விளக்காக இருந்த இவர் ஒளி அணைந்த நாள் 30-4-1945.
திரு Boomi Nathan அவர்கள் தரும் கூடுதல் தகவல் இவை :
9.1.2017 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு அரிய செய்தி.
தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளை அவர்கள் பணியாற்றி ஒய்வு பெற்று திருநெல்வேலியில் இருந்து போது அவர் மிகவும் வறுமையில் வாடினார் என்று கேள்வி பட்ட பெரியார் ஈவெரா அவர்கள் கா.சு.பிள்ளை அவர்களுக்கு அவர் மறையும் வரை மாதா மாதம் 50ருபாய் கொடுத்து வந்தார் (இன்றைய ருபாய் மதிப்பு 50 ஆயிரம்).
அதே போல் தேவநேயப்பாவணர் அவர்களுக்கும் அவர் வறுமையில் இருந்த போது தந்தை பெரியார் அவர்கள் காட்பாடிக்கு செல்லும் போது எல்லாம் 250ருபாய் கொடுத்தார் என்றும் இதை குடிஅரசு, விடுதலை இதழ்களில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை எந்த இடத்திலும் பேசவும் இல்லை என்ற செய்தியை மறைமலைஅடிகள் குறிப்பிட்டு இருக்கிறார்.
மறைமலையம் என்ற புத்தகத்தில்இந்த செய்தியை குறிப்பிட்டு உள்ளார் என்று பேசினார் செந்தலைகவுதமன் அவர்கள்.
அதன்பிறகு பேச வந்த கவிஞர்காசிஆனந்தன் அவர்கள் "நான் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து வறுமையில் இருந்த போது மதுரை மாநாட்டில் அன்று வறுமையில் இருந்த கா.சு.பிள்ளை அவர்களுக்கு தந்தை பெரியார் உதவியது போன்றே .........இன்று இந்த காசிப்பிளைக்கு (காசி ஆனந்தன்) ஆசிரியர்வீரமணி அவர்கள் 10 ஆயிரம் ருபாய் பணமுடிப்பு கொடுத்தார். அந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்" என்று சென்னை புத்தக கண்காட்சியில் உணர்வுபூர்வமாக பேசினார்.
தம்வாழ்நாளில் 66 நூல்கள் படைத்துத் தமிழுக்குத் தொண்டாற்றியவர் பேராசிரியர் கா.சு.பிள்ளை.
சைவமும் தமிழும் இருக்கும் வரை கா.சு.பிள்ளை புகழ் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை: