புதன், 6 நவம்பர், 2019

இன்போசிஸ்: 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு!

இன்போசிஸ்: 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு!மின்னம்பலம் : நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸ், சரியாக செயல்படாத ஊழியர்ளை பணி நீக்கம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸ், பணிகளைச் சரியாக செய்யாத ஊழியர்கள், தன்னிச்சையாக செயல்படும் ஊழியர்கள் என பல மட்டங்களில் இருக்கும் ஊழியர்களின் சேவைகளை நிறுத்தியுள்ளதாக தனியார் நிறுவன வட்டாரம் நேற்று(நவம்பர் 5) தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ், 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.
சமீபத்தில் காக்னிஸண்ட் மென்பொருள் நிறுவனமும் இதுபோன்ற அதிரடியான பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது இன்போசிஸும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “ஒரே சமயத்தில் அதிகளவில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட போவதில்லை. அதிக உற்பத்தி கொண்ட நிறுவனமென்பதால், சில சமயங்களில் உற்பத்தி திறன் குறைவது இயல்பானது. இதனை பணி நீக்கத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது," என விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சில முக்கிய அதிகாரிகள் கூறும் போது, "நீங்கள் இரண்டு வருடங்கள் அல்லது இரண்டு காலாண்டுகள் சரியானபடி திறமையை வெளிக்காட்டவில்லை என்றால் வழக்கமாக நிறுவனங்கள் செய்யும் போக்கு இது தான். இது முழுக்க செயல்திறன் தொடர்பான விஷயம்" என்றனர். இது போன்ற நடவடிக்கைகள் காலாண்டுகளாக தொடர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் செய்து இருப்பதாக நிறுவனத்தின் ஊழியர்கள் கொடுத்த புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பணிநீக்கம் நிறுவனத்தின் செயல்திறனை பாதிக்குமா என கேள்விகள் தற்போது எழுந்துள்ளன

கருத்துகள் இல்லை: