வியாழன், 7 நவம்பர், 2019

திமுக பொதுக்குழுவில் திருமாவுக்கு எதிராக குரல்?

திருமாவுக்கு எதிராக பொதுக்குழுவில் குரல்: திமுக  திட்டம்!மின்னம்பலம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் எங்களை திமுக முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகளும், விடுதலை சிறுத்தை நிர்வாகிகளை அதிமுக வளைத்துவிட்டது என்று திமுகவினரும் களத்தில் பரஸ்பரம் புகார் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தல் களத்தை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, திருமாவளவனையும், விழுப்புரம் மாவட்ட சிறுத்தை நிர்வாகிகளையும் கடுமையான அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஆனால் அப்போது இதை வெளிக்காட்டாத திருமாவளவன், தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடர்ச்சியாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்துவரும் பேட்டியில் இதைச் சொல்லி வருகிறார்.

‘திமுக தலைமையின் தவறான உத்திகளால் தோல்வி ஏற்பட்டது. திமுகவா, அதிமுகவா என்று போயிருக்க வேண்டிய இடைத்தேர்தலை திமுகவின் வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு திமுகவா, பாமகவா என்று கொண்டுபோய்விட்டது. மேலும் அன்று நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை திமுக சமூக நீதிப் போராட்டமாக பார்க்கிறது. நாங்களும் எங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் அந்த பகுதி தலித் மக்கள் அந்தப் போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அன்று தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே அவர்கள் அதை சமூக நீதிப் போராட்டமாக பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் அந்தத் தியாகிகளுக்கு மணிமண்டபம் என்பதை தலித்துகள் விரும்பவில்லை. வன்னியர் அல்லாத, தலித் அல்லாத மற்ற சிறுபான்மை சாதி மக்களும் இதை விரும்பவில்லை’ என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்.
பஞ்சமி நிலம் பற்றி திமுக மீது பாமக தொடர்ந்து புகார்கள் சொல்லிவரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைதி காக்கிறதா என்ற கேள்விக்கு, “பஞ்சமி நிலங்களை மீட்க சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்று கலைஞர் முதல்வராக இருந்தபோது மருதமுத்து கமிஷனை அமைத்தார்.

வேண்டுமென்றால் இப்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத முத்து கமிஷனை அமைக்கட்டும், அல்லது சோனை முத்து கமிஷன் என வேறு யாரையாவது நியமிக்கட்டும். தமிழகம் முழுதும் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது. அதுபற்றி விசாரிக்கட்டும். முரசொலி பஞ்சமி நிலம் என்றால் கண்டறியட்டும்” என்று கூறியிருக்கிறார் திருமாவளவன்.
இது போன்ற கருத்துகளால் திமுக தலைமை திருமாவளவன் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. பஞ்சமி நில கருத்தை விட விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி குறித்து திருமாவளவன் வெளிப்படையாக மீடியாக்களில் பேசுவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் திமுகவுக்கு முறையாக வேலை செய்யவில்லை என்றும், அதிமுகவினருக்கும் விடுதலைச் சிறுத்தை கீழ் நிலை நிர்வாகிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழுவில் திமுக நிர்வாகிகள் சிலரே பேசத் தயாராகின்றனர். இதன் சிறு ஒத்திகைதான் திருச்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேஎன்.நேரு, ‘கூட்டணிக் கட்சியினர் திமுக தலைவர் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்களைக் கண்டுகொள்வதில்லை’ என்று கூறியதும் என்கிறார்கள்.
திமுக பொதுக்குழுவில் உட்கட்சி விவகாரம் மட்டுமல்ல... கூட்டணி விவகாரங்களும் வெடிக்கக் காத்திருக்கின்றன

கருத்துகள் இல்லை: