வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தங்கத்தமிழ் செல்வன் 27,200 பேரை திமுகவில் இணைத்தார்

27,200 பேரை திமுகவில் இணைத்த தங்க தமிழ்ச்செல்வன்
மின்னம்பலம் : திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் 27,200 உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகினார். கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். மேலும், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும் தேனியில் மிகப்பெரிய விழா எடுத்து தன்னுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கவுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி, ஜூலை 21ஆம் தேதி ஸ்டாலினை தேனி மாவட்டம் வீரபாண்டிக்கு ஸ்டாலினை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தி, தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்தார். அப்போது தங்கத்தை வெகுவாகப் பாராட்டிய ஸ்டாலின், அதிமுகவில் இருப்பவர்கள் தாய்க் கழகமான திமுகவுக்கு திரும்ப வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைத்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை பெறும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அது முடிந்த சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது, தேனி மாவட்டத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கான உறுப்பினர்களின் படிவங்களையும், அதற்கான கட்டணத் தொகையையும் ஒப்படைத்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கழக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கழகத்தில் இணைந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த 27,200 உறுப்பினர்களின் படிவங்களை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: