புதன், 14 ஆகஸ்ட், 2019

கலைஞானம் எனும் கலைப் பொக்கிஷம்!

கலைஞானம் எனும் கலைப் பொக்கிஷம்!மின்னம்பலம் : தமிழ்த் திரையுலகம் எண்ணற்ற கலைப் பொக்கிஷங்களை தனக்குள் வைத்துள்ளது. பொக்கிஷங்கள் என்றால் படைப்புகள் மட்டுமல்ல; படைப்பாளிகளும் தான்.
அப்படியான வியத்தகு பொக்கிஷம், திரைத்துறையை 75 ஆண்டுகாலமாக தனது கலையால் அளந்த திரைக்கதை வித்தகர் கலைஞானம் அவர்கள்.
ஒரு படத்திற்கு கதை எழுதிவிட்டால், தான் இயக்கிய ஒரு படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவிட்டால், உடனடியாக பிரபலமாகி தமிழ் சினிமாவையே தலைகீழாக மாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்ளும் இன்றைய கலைஞர்களை பார்ப்பவர்கள், கலைஞானம் அவர்களின் வரலாற்றை புரட்டினால் சற்று மூச்சு வாங்கும்.
200 படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதியுள்ள கலைஞானம், 40 படங்களுக்கு கதை எழுதி 18 படங்களை தயாரித்துள்ளார். நடிகர், பாடலாசிரியர் என சினிமாவில் அவர் கிட்டதட்ட அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து அதில் சிகரம் தொட்டவர்.

‘சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடல் வெளியாகி முப்பது ஆண்டுகள் ஆனாலும் இந்தத் தலைமுறை குழந்தைகளும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ரஜினிகாந்திற்கு முதன்முதலில் இந்தப் பட்டம் கிடைத்தது கலைஞானம் கதை எழுதி தயாரித்த பைரவி படத்தில் தான்.
1978ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தை வெளியிட்டவர் கலைப்புலி எஸ்.தாணு. தமிழ் சினிமா வியாபாரத்தை கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து விரிவாக்கிக்கொண்டே செல்லும் வித்தகரான இவர்தான் முதன்முறையாக ரஜினிகாந்துக்கு 35 அடி உயர கட் அவுட் வைத்து, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என பிரபலப்படுத்தினார். அன்றிலிருந்து தான் தமிழர்கள் அடிக்கடி உச்சரிக்கும் பெயராக ‘சூப்பர் ஸ்டார்’ என்பது மாறியது.
தமிழ் சினிமாவின் கலைப் பொக்கிஷமான கலைஞானம் அவர்களுக்கு மாபெரும் பாராட்டுவிழா இன்று (ஆகஸ்ட் 14) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு வருகைதரும் அனைவரையும் கலைப்புலி எஸ்.தாணு அன்புடன் வரவேற்று மகிழ்கிறார்.

கருத்துகள் இல்லை: