சனி, 17 ஆகஸ்ட், 2019

திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜக.. வழக்கறிஞர் சரவணன் அண்ணாத்துரை மீது ,,

திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜகமின்னம்பலம் : காஷ்மீர் விவகாரத்தில் ரிபப்ளிக் டிவியில் தான் கூறிய கருத்து திரிக்கப்பட்டு, தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம் சரவணனை இது தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று பாஜக தரப்பு கோரியுள்ளது.
ஆகஸ்டு 12 ஆம் தேதி பாஜக ஆதரவு சேனலான ரிபப்ளிக் டிவி நடத்திய காஷ்மீர் தொடர்பான விவாதத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சரவணன் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் பேசிய சரவணன், ‘காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்ததில்லை’ என்று குறிப்பிட்டார். ஆனால் நிகழ்வை ஒருங்கிணைக்கும் அர்னாப் கோஸ்வாமி, ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியில்லை என்று சரவணன் கூறிவிட்டார். திரு ஸ்டாலின் அவர்களே.. இதுதான் திமுகவின் நிலைப்பாடா? இதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் இந்தியாவில் நீங்கள் கட்சி நடத்த முடியுமா?’ என்றெல்லாம் பொரிந்து தள்ளினார். தன் குரல் அங்கே எடுபடாத நிலையில் மைக்கை கழற்றிப் போட்டுவிட்டு நிகழ்வில் இருந்து வெளிநடப்பு செய்தார் சரவணன்.
இதை ஒட்டி திமுக மீதும், சரவணன் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் பாஜக தரப்பால் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (ஆகஸ்டு 17) இது தொடர்பாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சரவணன்.

“கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டீவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டேன். அந்த விவாதத்தின் பொழுது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதை திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” நான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தேன்.
இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒத்துக்கொண்ட பின்னர் 1956ஆம் ஆண்டு, காஷ்மீர அரசியல் சட்டத்தின் 3ஆவது சரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”. காஷ்மீரத்து பிரச்சனையை வரலாறு அறியாமல் பேசமுடியாது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பாஜக தமிழக ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீரை பாரதத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாத கூடாரமாக மாற்றி வைத்திருக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு பல்லக்கு தூக்குவது போலவே திராவிட விஷமிகளின் கருத்து அன்றுமுதல் இன்று வரை இருக்கிறது. எனவே தேச விரோதி சரவணன் எந்த அடிப்படையில் காஷ்மீரை பற்றி இப்படிப்பட்ட கருத்தைக் கூறினார் என்று அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை (என்.ஐ.ஏ) நடத்த வேண்டும். இதை வெறும் கருத்து ரீதியானதாக பார்க்க முடியவில்லை.
ஏற்கனவே காஷ்மீர் பிரிவினை வாதிகளை அழைத்து வந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கூட்டம் நடத்திய தேச துரோகிகளை தமிழகத்தில் நாம் பார்த்தோம்.மீண்டும் அப்படிப்பட்ட பிரிவினைச் சதிகள் சங்கத் தமிழ் மண்ணில் நடந்துவிடக் கூடாது. எனவே திமுக செய்தித் தொடர்பாளர் சரவணனுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் தொடர்பிருக்கிறதா என்று ஆராய வேண்டிய கடமை தேசிய புலனாய்வு முகமைக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் என் ஐஏவுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக ஆதரவாக வாக்களித்தது என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

கருத்துகள் இல்லை: