ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

NDTV என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?

என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?மின்னம்பலம் : என்டிடிவி நிறுவனர் பிரனாய் ராய் வெளிநாடு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டதன் பின்னணியில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட் இருந்துள்ளது.
என்டிடிவியின் நிறுவனர்களான பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகிய இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சென்றுள்ளனர். அந்நிலையில் சிபிஐ உத்தரவின் பேரில் விமான நிலைய அதிகாரிகளால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதி தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனைக் கண்டித்து ‘ஊடக நிறுவனர்களின் மீதான இத்தகு நடைமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என என்டிடிவி அறிக்கைவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரனாய் ராயின் மகள் தாரா ராய், “நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் இந்தியாவில் - யாரும் பாதுகாப்பாக இல்லை. இது ஒரு சர்வாதிகார ஆட்சி” என வன்மையாகக் கண்டித்துள்ளார்.

காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும், சிறப்பு அந்தஸ்தையும் நீக்கிய பாரதிய ஜனதா கட்சியின் செயலை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது என்.டி.டி.வி. மத்திய அரசுக்கு எதிராக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதை விரும்பாத நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி இவ்விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பதிவில், “என்டிடிவி பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரைத் தேடுவதற்கான அறிவிப்பைக் கோரி நான் தான் ‘ட்வீட்’ செய்தேன். சிபிஐ செயல்பட்டது. பிரனாய் ராய் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, போர்டிங் மறுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார் அவர்.
அதே சமயம் ராயின் மகளான தாரா ராய் வெளியிட்ட கண்டன அறிக்கையில், அரசாங்கத்துக்கு எதிராகப் பேசத் துணிந்ததற்கும், ஊடகங்களில் உள்ள எவருக்கும் ஒரு வலுவான பாடம் கற்பிக்கவும் இச்செயல் நடந்துள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: