சனி, 17 ஆகஸ்ட், 2019

வீராசாமி நாகமுத்து கயானா பிரதமர் .. உலகின் ஒரே தமிழ் பிரதமர் ..


பாண்டியன் சுந்தரம் : கயானா நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து உலகில் பிரதமராக இருக்கும் ஒரே
தமிழர்..ஆனால்..
மோசசு வீராசாமி நாகமுத்து... இந்திய வம்சாவளித் தமிழரான இவர் கயானாவின் பிரதமராக 2015 மே 20 அன்று பதவியேற்றார்.இன்று வரை பதவியில் இருந்து வருகிறார்.கயானா தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் அமைந்துள்ள அழகிய நாடு.
நாகமுத்து கயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் இந்தியக் கொடிவழித் தமிழ் குடும்பத்தில் விம் என்ற ஊரில் 1947 நவம்பர் 30-ஆம் தேதி பிறந்தார். ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
1964 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1992 ஆம் ஆண்டில் அக்கட்சியின் சார்பில் கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தகவல்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார்.
செட்டி ஜெகன், சாம் ஐன்ட்சு, ஜனெட் ஜெகன், பாரத் ஜாக்தியோ ஆகிய ஜனாதிபதிகளின் அமைச்சரவைகளில் உறுப்பினராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
2008 ஆகத்து 2 இல் நடைபெற்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் 29வது காங்கிரசு மாநாட்டில் ஐந்தாவது அதிகப்படியான வாக்குகள் 595 -ஐபெற்று கட்சியின் மத்திய குழுவுக்குத் தெரிவானார். 2011 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இருந்து விலகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலில் நாகமுத்து மக்கள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2011 அக்டோபர் 24 இல் கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் அவர் 2011 அக்டோபரில் "மாற்றத்திற்கான கூட்டமைப்பு" என்ற அரசியல் கட்சியில் இணைந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 மே மாதத்தில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, நாகமுத்து கயானாவின் பிரதமராகவும், முதலாவது ஜனாதிபதியாகவும் 2015 மே 20 அன்று பதவியேற்றார்.
2001 ஆம் ஆண்டில் இவர் Hendree's Cure என்ற புதினத்தை எழுதி வெளியிட்டார். 1950களிலும், 1960களிலும் விம் கிராமத்தில் குடிபுகுந்த மதராஸி மீனவர்களின் வாழ்க்கையை விளக்கும் புதினமாக இதனை எழுதினார். நாகமுத்து வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் இதற்கு முன் எங்கும் பிரதமர் பதவி வகித்ததில்லை.சிங்கப்பூரில் எஸ். ஆர்.நாதன் ஜனாதிபதியாக இருந்து உள்ளார்.இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்
ஃபிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் அமைச்சர்களாக இருந்து உள்ளனர்‌.ஆனால் இந்தியா உட்பட எங்குமே பிரதமராக இருந்ததில்லை.
இப்போது தான் முதன் முறையாக ஒரு தமிழர் பிரதமராக ஆகி உள்ளார்.ஒரே ஒரு வருத்தமான செய்தி..கணிசமான
எண்ணிக்கையில் கயானா நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் எவருக்குமே தமிழ் தெரியாது.ஆங்கிலமே அத்துப்படி!

கருத்துகள் இல்லை: