செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

காவிரி கரையோர பகுதி மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை

  தினத்தந்தி : சென்னை கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. இதற்கிடையே, காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதை தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம். 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: