செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

தமிழ்நாட்டில் தொல்லுயிர் எச்சங்கள் (FOSSILS IN TAMIL NADU). ‘FOSSILS’ என்றால் என்ன?

Singanenjam Sambandam : தமிழ்நாட்டில் தொல்லுயிர் எச்சங்கள்
(FOSSILS IN TAMIL NADU).
‘FOSSILS’ என்றால் என்னவென்று தொல்லுயிரியலாளர்களைக் (PALAEONTOLOGISTS) கேட்டால், அதற்கு அவர்கள், “ Petrified remains of the extinct organisms” என்று சுருக்கமாக பதிலுரைப்பர். அதாவது “மறைந்து போன உயிரினங்களின், கல்லாய் சமைந்த எச்சங்கள்” என்று பொருள். (PETRA என்றால் பாறை அல்லது கல்; OLEUM என்றால் எண்ணெய் , ஆதலின் பெட்ரொலியம் என்பது, பாறையிலிருந்து கிடைக்கும் எண்ணெய். PETRIFICATION என்றால் கல்லாக மாறிப் போதல் அல்லது கல்லாய் சமைதல் என்பது பொருள்.)
FOSSILS என்பதற்கு இணையத்தில், ‘தொல்பொருள்’, ‘புதைபொருள்’, ‘புதைபடிவம்’ ‘புதைபடிமம்’ என்றெல்லாம் பொருள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எதுவுமே சரியான பொருளைத் தருவதாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நான் சார்ந்திருந்த இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் (GEOLOGICAL SUVEY OF INDIA) சார்பாக தமிழ்நாட்டின் புவியியல் மற்றும் கனிம வளங்கள் பற்றி நூல் ஒன்றை ஆங்கிலத்தில் தொகுத்தேன். நன்றாக வந்தது பின்னர், துறையின் சார்பாகவே அந்த நூலை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.

அரசு வெளியிட்டுள்ள கலைச் சொல் அகராதியில் புவியியல் பிரிவில் நிறைய தவறுகள் இருந்தன. காரணம், புவியியல் அறியாத ஒருவர் அந்தப் பணியை செய்திருக்கிறார். வேறு வழியின்றி நானே புவியியல் கலைசொற்களை உருவாக்கி மொழி பெயர்ப்புப் பணியை முடித்தேன். நடுவண் அரசு வெளியிட்டுள்ள அந்த நூலில் ‘FOSSILS’ என்பதனை ‘தொல்லுயிர் எச்சங்கள்’ என மொழி மாற்றம் செய்துள்ளேன். மாற்றுக் கருத்துகள் உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.
ஃபாசில்களைப் பற்றிய கல்வி ‘PALAEONTOLOGY’ எனப்படுகிறது. தமிழில் “தொல்லுயிரியல்” (PALAEO என்றால் ‘பழைய’ .என்று பொருள். பழைய எனும் தமிழ் சொல்லிலிருந்துதான் PALAEO எனும் சொல் தோன்றியது என்று நீங்கள் நினைத்தால் ....அது உங்கள் விருப்பம்). சரி, தொல்லுயிரியல் படிப்பதால் என்ன பலன் எனும் கேள்வி நமக்குள் இயற்கையாகவே எழுகிறதே.
பொதுவாகப் பாறைகளை, குறிப்பாக ஃபாசில்கள் உள்ள படிவப்பாறகளை (SEDIMENTARY ROCKS) பூமியின் வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்கள் (PAGES OF EARTH’S HISTORY) என்றே வர்ணிக்கலாம். பூமியின் வரலாறு இந்தப் பாறைகளில் பதியப் பட்டுள்ளது. பூமியின் வரலாற்றை அறிந்து கொள்ள மட்டுமல்ல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவும் பாசில்கள் பெரிதும் துணை புரிகின்றன.
பல இலட்சம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிர் வாழ்ந்த உயிரினங்கள் பல தற்போது நம்மிடையே இல்லை. மறைந்துவிட்டன. அழிந்துவிட்டன. இன்று பரவலாகப் பேசப்படும் ‘டைனோசார்கள்’ இப்போது நம்மிடையே இல்லை ஆனால் அவற்றின் எலும்புகள், பற்கள், முட்டைகள் இவையெல்லாம் ஃபாசில்களாகக் கிடைக்கின்றன. இந்த ஃபாசில்கள் மட்டும் இல்லையென்றால், டைனோசார் என்று ஒரு உயிரினம் நாம் வாழும் வீட்டில், அதாவது நம் பூமியில் நமக்கு முன் ஜூராசிக் காலத்தில் வாழ்ந்திருந்தது எனும் உண்மை நமக்குத் தெரியாமலே போயிருக்கும். இன்று தமிழ்நாடு இருக்கும் பகுதியில் அன்று வாழ்ந்த டைனோசார்கள் பற்றி பின்னர் பேசுவோம்.
பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலும், அரியலூர் மாவட்டத்திலும் பரவலாகக் கிடைக்கும் கடல்வாழ் உயிரிங்களின் ஃபாசில்களில் மிக முக்கியமானது “அம்மோனைட்” எனப்படும் சோழியினம். இந்த அம்மோனைட் சோழியினம் தற்போது இல்லை; அழிந்துவிட்டது (EXTINCT). சோழியினம் என்று சொல்கிறோமே தவிர, இன்றைய ட்ராக்டர் சக்கரம் அளவிற்கு பெரியதான அம்மோனைட்கள் கிரிடேஷியஸ் காலத்தில் வாழ்ந்திருக்கின்றன. அரியலூர் பகுதியில் கிடைத்த அம்மோனைட் ஃபாசில்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
(தொடர்ந்து பேசுவோம் )

1 கருத்து:

suresh சொன்னது…

Super i am a ariyalur citizen